பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கொரோனா நெருக்கடியால் அவதிப்படும் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் ஒரு கூடுதல் தலைவலியாக இருக்கிறது. இத்தகைய சூழலில், பெட்ரோல் விலை குறித்து ஆலோசிக்க நேற்று முக்கிய நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97.91 ரூபாயாக இருக்குது. டீசல் விலை லிட்டருக்கு 92.04 ரூபாயாக இருக்குது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.66 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 87.41 ரூபாயாகவும் இருக்குது.மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.82 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.84 ரூபாயாகவும் இருக்குது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96.58 ரூபாயாகவும், டீசல் விலை 90.25 ரூபாயாகவும் இருக்குது.
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. லிட்டர் 100 ரூபாயை சில நாள்களில் எட்டும் என்ற நிலை உள்ளது. சில மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துவிட்டது. ஒன்றிய அரசு வரியைக் குறைக்காத நிலையில் மக்களின் தலையில் பெரும் சுமை சேர்ந்துள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாடு அரசு எப்போது விலையை குறைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஒன்றிய அரசுக்கு பெட்ரோல் டீசல் மூலம் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியிலிருந்து 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. 63 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கு போக வேண்டிய வருவாய் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிக அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. சராசரி தமிழர் ஒருவர் ஒரு ரூபாய் வரி கட்டினால் ஏற்கனவே 30 பைசா தான் திரும்பி வருகிறது.
பெட்ரோல் மீது 10 ரூபாயாக இருந்த வரியை ஒன்றிய அரசு 32.90 ஆக உயர்த்தியுள்ளது. இதில் 31.50 ரூபாயை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைத்தால், அவர்களை மீண்டும் உயர்த்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதாகிவிடும்.
தமிழ்நாடு அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் வருவாய் மிக குறைவாகவே உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஒன்றிய அரசு பெட்ரோலிய பொருள்கள் விலையை குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்தாலும் தங்களுக்கு வரும் வரி வருவாய் பாதிக்கப்படக்கூடாத வகையில் வரி அளவை ஒன்றிய அரசு மாற்றியமைத்துள்ளது” என்று கூறினார்.எனவே தற்போது தமிழ்நாடு அரசால் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கும். அதை மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் நேற்றைய பேட்டியில் சொன்னதும் இணையமெங்கும் ஆதரவாகவும் எதிராகவும் மீம்ஸ்களும், ஸ்டேட்டஸுகளுமாய் பறக்கிறது. வாக்கு தவறுகிறதா திமுக அரசு என்று கேள்வி எழுப்புகிறவர்கள் ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஆட்சியமைத்தே ஒரு மாதம்கூடத் தாண்டவில்லை அதற்குள் எல்லாவற்றையும் எதிர்பார்த்தால் எப்படி என்ற கேள்வி மறு பக்கம். மோடி கூடத்தான் ஸ்விஸ் வங்கியிலிருக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன் என்று ஆட்சியமைத்தபோது சொன்னார். கொண்டுவந்தாரா என்றும் அதிமுக ஆட்சியிலிருக்கும்
போது கேட்டீர்களா என்றும் பதிலறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் செயல்படவில்லை என்பதால்தானே மக்கள் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்கள்? டாஸ்மாக் கடைகளைத் திறக்காதே என்று சில மாதங்களுக்கு முன்னால் தட்டி ஏந்திய எதிர்கட்சிதான் இன்று அதே பதில்களோடு டாஸ்மாக் திறக்கிறது என்று சொன்னால் அதற்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்பவர்களை எல்லாம் சங்கி என்று முத்திரை குத்த முயல்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவாருங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்த திமுக அரசு. ஆட்சியமைந்ததும் அப்படியே தடாலடியாய் மாறியது. அப்படியெல்லாம் கொண்டுவர முடியாது என்றார் நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன். இப்போ
பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் வேளையில் விலை குறைக்காமல் எப்போது குறைப்பார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் தமிழகத்திற்குக் கிடைக்கும் தொகையே மிகக் குறைவுதான். அதையும் குறைத்தால் எப்படி ஆட்சி நடத்துவது என்றும் 100 ரூபாய் வரி வசூலித்துக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கும், ஒரு ரூபாய் வரி வசூலித்துத் தரும் மாநிலங்களுக்கும் மத்திய அரசிலிருந்து கிடைக்கும் தொகை அதே பத்து ருபாய்தான் என்றால் எப்படி என்றும் நியாயம் கேட்டிருக்கிறார் நிதி அமைச்சர்.
நிச்சயம் சரியான கேள்விதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவையெல்லாம் விலை குறைக்க முடியாது என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களாகத்தான் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, இதில் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளையெல்லாம் நன்றாக ஆய்ந்து செயல்படுத்த முடியும் என்பதை உணர்ந்துதான் வெளியிட்டிருக்கிறோம் என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இப்போது பாஜக அரசு தர வேண்டிய வரித் தொகைகள் பாக்கி இருக்கிறது. பாஜக அரசுதான் அதிக வரியை எடுத்துக்கொள்கிறது. இன்னும் ரெண்டு வாரத்தில் வெள்ளை அறிக்கை விடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர்.
கொடுக்க முடியாததற்கான காரணங்களுக்கு ஒன்றிய அரசின் மேல் பழி சொல்லியிருக்கிறது திமுக அரசு. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தொகையைத் தரவில்லை என்பது உண்மைதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவையெல்லாம் தேர்தல் அறிக்கை கொடுக்கும் முன்னமே தெரியாதா என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் நிச்சயம் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. எல்லாக் காலகட்டங்களிலும் காரணங்கள் மட்டுமே கிடைக்கப் போகின்றன என்பது உறுதிபடத் தெரிகிறது.
மோடி ஆட்சியமைத்த ஒரு வருட காலத்திற்குத் தினமொரு அறிக்கை, புதிய அறிவிப்பு என அல்லோலகல்லோலப்பட்டது. அதில் சிதறிய சில்லரைகள்தான் 15 லட்சம், சுவிஸ் பேங்க்கில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவேன் போன்றவை. 15 லட்சம் பற்றிய பேச்சு தேர்தல் பிரச்சரத்தின்போதே அதிகம் அடிபட்டது. இவையெல்லாம் வாக்காளர்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்திய தேர்தல் வியூகங்கள். இங்கேயும் அதே போன்ற அறிக்கைகளை வைத்து மாயையை உருவாக்குகிறார்களோ என்று தோன்றுகிறது.
அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்.ஆர்.பி.) அதிகமாய் மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பதைத் தடுக்க முடியாத, அல்லது தடுக்க முயலாத அரசாய் இருக்கும் பட்சத்தில் காரணங்கள்தான் கிடைக்கும் என்கிறார்கள் அதிருப்தியாளர்கள்.
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசுக்கு எந்த வகையில் சாதகமாகும் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், குறைத்தாலும் அதன் பாதிப்பும், பயனும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தான் கிடைக்கும். இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்; அதைத் தான் மாநில அரசு பார்க்க வேண்டும். வரிகளைக் குறைக்காமல் இருக்க சாக்குகளைக் கூறக்கூடாது. மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார்.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில் மாநில அரசின் வரி 34%, அதாவது சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால் ரூ.26.30. ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் கூட மறுக்க முடியாது.
உதாரணமாக கடந்த மே 7ஆம் தேதி திமுக அரசு பொறுபேற்ற போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15. அதிலிருந்து தமிழக அரசுக்கு கிடைத்த வரி ரூ. 23.60. அதன்பின் கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.99 உயர்ந்துள்ளது. அதன்மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் மதிப்பு கூட்டு வரியின் பங்கும் லிட்டருக்கு ரூ.1.30 அதிகரித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.10 குறைத்தால் கூட அரசுக்கு இழப்பு ஏற்படாது. அதுவும் கொரோனா பரவலால் வாழ்வாதாரங்களை இழந்து, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அளவுக்கு வரிக் குறைப்பு மிகப்பெரிய உதவியாகவும், வரமாகவும் இருக்கும். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதிக்கிறது இதை எவரும் மறுக்க முடியாது.
நிதி அமைச்சர் பிடிஆர் சொல்லும் காரணங்களில் நியாயம் உள்ளது. ஆனால், இப்போது இல்லையேல் எப்போது என்னும் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? அதாவது மாற்றுத் திட்டம் இருக்க வேண்டும் அல்லவா? குறைந்தது அதையாவது சொல்லலாமே?சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா? இதைத்தான் அப்பாவி பொதுமக்கள் கேக்குறாங்க.
