கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்று ஸ்வீப் அடித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள்ல 9 தொகுதிகள்ல அதிமுகவும் ஒரு தொகுதியில பிஜேபியும் ஜெயிச்சிருக்கு. கொங்கு மண்டலத்தில திமுகவின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் ?
1996 சட்டமன்றத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியலை. அதுக்கு என்ன காரணம் ?

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சி அமைஞ்சாச்சு.. தமிழகத்தில் பெரும்பாலும் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மட்டும் மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

முக்கியமாக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்றுள்ளது. கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதல்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான்வருது.

1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. அப்போது, கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதில் ஒரு தொகுதியைக்கூட தி.மு.க தக்கவைச்சுக்க முடியலை. 2001-ல் கோவை மாவட்டத்திலுள்ள அத்தனைத் தொகுதியையும் அப்படியே தூக்கியது அ.தி.மு.க.

2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது.கோவை கிழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியும், பொங்கலூர் தொகுதியில் மணியும் வெற்றி பெற்றாங்க. பொங்கலூர் பழனிச்சாமி ஊரகத் தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் கோவையை மீண்டும் மொத்தமாக அள்ளியது அ.தி.மு.க. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியில திமுக வேட்பாளர் கார்த்திக் வெற்றி பெற்றார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கோவை மாவட்டத்தை மீண்டும் மொத்தமாக வாரிச் சுருட்டி விட்டது. இதனால் பலரும் சமூக வலைதளங்களில் கோவையை விமர்சித்து வர்றாங்க.. ஆனால், கோவை மக்கள் அ.தி.மு.க-வினரைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கவே மாட்டாங்களா என்ன ? இல்லைன்னு தான் சொல்லணும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க மொத்தமா ஜெயித்தது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க-தான் முன்னிலை வகித்தது. நாட்டிலேயே பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பி-யாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.அவர்  5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகளும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக வேட்பாளர் . சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 92 ஆயிரத்து 7 வாக்குகளும் வாங்குனாங்க.

தற்போதைய தேர்தலில்கூட கோவை தெற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு போன்ற தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்குள்தான் வித்தியாசமே! கோவை வடக்குத் தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளில் 1,000 – 2,000 வாக்குகள்தான் வித்தியாசம். இங்க இன்னும் கொஞ்சம் எறங்கி அடிச்சிருந்தா முடிவுகள் மாறியிருக்கும்.

1996 சட்டமன்றத் தேர்தலில் கோவை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதி தொகுதிகளைக் கூட வெல்ல முடியவில்லை. அ.தி.மு.க-வைப்போல வலுவான தலைவர்கள் இல்லாமல் இருப்பதே தி.மு.க-வுக்கு இங்கு பெரிய மைனஸ்.

கோவையில் இருபது ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர், அமைச்சர் என பவர்ஃபுல்லாக இருந்த பொங்கலூர் பழனிசாமி செய்த சாதிய அரசியலை தி.மு.க-வினரே விரும்பவில்லை. அவரது சாதிய பாசம் அ.தி.மு.க வரை நீண்டது. அந்தப் பாசத்தில் வளர்க்கப்பட்டவர்தான் இப்போதைய அ,தி.மு.க-வின் முக்கிய அடையாளமாக இருக்கும் வேலுமணி.

2006 சட்டமன்ற தேர்தலில்தான் எஸ்.பி.வேலுமணி முதன்முறையாக பேரூர் தொகுதியில போட்டியிட்டு 1லட்சத்து 14 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு பல கான்ட்ராட்க்களை கொடுத்து பொருளாதார ரீதியாக வலுப்படுத்தியது பொங்கலூர் பழனிசாமி காலகட்டத்தில்தான். அதன் பிறகு வேலுமணி அதே ஃபார்முலாவைக் கையில் எடுத்தார்.

பல தி.மு.க-வினர் வேலுமணியால் பயனடைந்துள்ளனர். வேலுமணியின் வளர்ச்சி இங்கு அ.தி.மு.க-வை மட்டுமல்லாமல், தி,மு.க-வையும் இழுத்தது. தி.மு.க-வில் தனது ஏராளமான ஸ்லீப்பர் செல்களைப் பரவவிட்டார். பொங்கலூர் பழனிசாமியின் ஆதிக்கம் முடிந்தாலும், அதன் பிறகு இங்கு வந்த நிர்வாகிகளும் அதே சாதிய அரசியலில் தான் சிக்குனாங்க !

உட்கட்சிப் பூசலும் பூகம்பமாக வெடித்து கொண்டே தான் இருக்கும். மற்ற கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்கள் இருக்கத்தான் செய்யுது. அதைக் கட்டுப்படுத்தத்தான் தலைவர்கள் இருப்பர். ஆனால், கோவை தி.மு.க-வில் உட்கட்சிப் பூசலுக்கு காரணமே அந்தத் தலைவர்கள்தான்.

கவுண்டர்கள் இருந்தால், நாயுடுக்களை எதிப்பார்கள். நாயுடுக்கள் வந்தால், கவுண்டர்களை எதிர்ப்பார்கள். கடைசிவரை மக்களிடம் இறங்கி அரசியல் செய்ய எந்த நிர்வாகியும் இல்லை. அதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்
கொண்டது. ஒவ்வொரு தெருவிலும் அ.தி.மு.க-வினர் மக்களிடம் இறங்கிப் பழகினர். ஆனால், தி.மு.க-வினருக்கு உட்கட்சி அரசியலை பார்க்கவே நேரம் போதவில்லை.

பணத்தைக் கொடுத்து சரிகட்டும் அரசியலிலும் அ.தி.மு.க கைதேர்ந்துவிட்டது. தி.மு.க-வில் அ.தி.மு.க கொடுக்கும் கமிஷன்களைப் பலர் நம்பியிருந்தனர். இதனால் எந்தவிதத்திலும் தி.மு.க-வால், அ.தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை.

சில தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வேட்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் களப்பணி செய்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் தான் அவர்கள் களத்துக்கே வந்தனர். பல பகுதிகளில் உட்கட்சிப் பூசலையும், பணப் பிரச்னையையும் தி.மு.க சரிகட்டுவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது. மற்ற பகுதிகளைப்போல இங்கும் சாதியும் பணமும் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

எப்போதுமே மேற்கு மண்டலத்தில் அதிமுக ஸ்ட்ராங்கா இருக்குது. போதாக் குறைக்கு பாஜகவுக்கு கூட கணிசமாக ஓட்டுக்கள் கெடைக்குது. ஆனால் அனைத்து மண்டலமும் கை கொடுத்தாலும் மேற்கு மண்டலம் மட்டும் திமுகவுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.

ஏன்னா கொங்கு  மண்டலத்தில்  அதிமுக எப்போதும் பலம் வாய்ந்த கட்சியாகக் காணப்படுது. அதனை இம்முறையும் நிரூபித்து விட்டது. இந்த சூழலில் தான் கோவை மண்டலத்தில் ஒரு தலைவரை உருவாக்க திமுக திட்டமிட்டுள்ளது.

கோவையில் உள்ள தொழிலதிபர்களுடன் மக்கள் நீதி மய்யம் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரனுக்கு நல்ல பழக்கம் உண்டு. அதனால அவருக்கு TIDCO அதாங்க தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகத் தலைவர் பதவி கொடுத்தால் தொழிலதிபர்களுடன் நெருக்கம் ஏற்படும். பல்வேறு தொழில் திட்டங்களை அமல்படுத்தவும், அப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பை பெருக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் முடியும் என்று திமுக நம்புகிறது. காளை மாடுகள் ஆராய்ச்சியாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, மேற்கு மண்டலத்தில் ஆளுமைமிக்கவராக இருந்ததால் அவரையும் திமுகவில் சேர்த்துக்கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக சீட்டு கொடுத்து போட்டியிட வைத்தது திமுக தலைமை.
சிவ சேனாதிபதி தோல்வியடைந்திருந்தாலும் கூட அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி இல்லன்னா வேறு ஏதாவது உயர் பதவிகளை கொடுத்து மேற்கு மண்டலத்தில் அவரை தொடர்ந்து வலுவான ஒரு உள்ளூர் தலைவராக உருவாக்கணும்ங்கிறதுல முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். தொழில்துறையினர் முக்கியம் என்பதால் கோவை மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் மகேந்திரனுக்கு “டிட்கோ” சேர்மன் பதவியை கொடுத்து திமுகவில் அவரை ஒரு தலைவராக வளர்த்தெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். அங்கு தொழில்களை நடத்தும் தொழிலதிபர்கள், ஓட்டுக்கள் எந்த பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கிறார்கள். ஏற்கனவே மகேந்திரனுக்கு தொழிலதிபர்களிடம் நல்ல பழக்கம் உண்டு.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாடு கழகத்தில் தலைவராக பதவியேற்றால், பல்வேறு தொழில் அதிபர்களுடன் இன்னும் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேற்கு மண்டலத்தில், பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்தி திமுக அரசுக்கு மேற்கு மண்டலத்தில், மகேந்திரன் நல்லபெயர் வாங்கித் தருவார், என்று முதல்வர் ஸ்டாலின் நம்புகிறாராம் இதெல்லாம் வருங்காலங்களில் திமுகவுக்கு ஆதாயமாக மாறும் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தப்படுகிறதாகக் கூறுகிறார்கள். “மகேந்திரன் மட்டுமல்ல, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல்வேறு தலைவர்களும் விரைவில் திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வரத்தொடங்கி விட்டது.அதிமுக வலுவாக இருக்கிற கொங்கு மண்டலத்த அசைச்சுப் பார்க்கத் தயாராகி விட்டார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே சேலம் மாவட்டத்தக் கைக்குள்ள வச்சிருக்கிற எடப்பாடியாரின் செல்வாக்குக்கு ஈடு கொடுக்கிற மாதிரி அமைச்சர் செந்தில் பாலாஜிய எறக்கி விட்ருக்காரு.அவரும் மாவட்டக்கலெக்டருக்கு உத்திரவு போட்ருக்காராம்.
என்னக் கேக்காம யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடாது.
எடப்பாடி பழனிச்சாமி ஃபோன் அடிச்சாலும் எடுக்கக் கூடாதுன்னு ஸ்டிரிக்டா ஆர்டர் போட்ருக்காராம்.