எஸ்.பி.வேலுமணியை காப்பாற்றும் அரசு அதிகாரிகள் ? கோவை மாநகராட்சியில் என்ன நடக்கிறது?
எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரங்கள் அழிந்துவருவதாக கூறுகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஆளுநரிடம் அமைச்சர்கள் மேல் ஆதாரங்களுடன் ஊழல் புகார் அளித்தார். அப்போது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மட்டும் அல்ல அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் நபராக எஸ்.பி.வேலுமணி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர்.பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் என்கிற மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். பதவிக்கு வந்தவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்டே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தொடங்கி அதிமுக கால அமைச்சர்களின் மீதான புகார்களை விசாரித்து உள்ளே தள்ளணும்.இதுதான் அவருக்கு கொடுத்த டார்கெட்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்வுகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டேன் என்பது தான்.அதிலும் குறிப்பாக முதலில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு, அவரை சிறையில் தள்ளுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமென்று தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும்.அதற்குண்டான பொறுப்பை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கந்தசாமி ஐபிஎஸ் இடம் ஒப்படைத்து விட்டார்.அவர்கள் மீது திமுக தரப்பில் இருந்து புதிதாக புகார்கள் எதுவும் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்குது. அவர் உள்பட அதிமுக அமைச்சர்கள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருமே சிறைக்குப் போவது உறுதி.
கொரோனோ தொற்றை சமாளிக்க முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே ஸ்டாலினைக் கிண்டலடிக்கத் தொடங்கினாங்க.
இப்படிபட்ட தகவல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய பிரமுகர்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தவுடன்தான், அவரது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறாராம். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் இடைவிடாது கவனத்தை செலுத்தி வரும் அதே வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் புகாரில் இருந்து தப்பித்து விடக் கூடாது என்று ஸ்கெட்ச் போட்டு, அதையும் சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கெடச்சிருக்கு.
அத்தோடு ஒரு சில முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதற்கான அசைன்மென்டும் கந்தசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மாத காலமாக ஆதாரங்களை திரட்டி வந்த டிஜிபி கந்தசாமி, கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்ததாக சொல்கிறார்கள். இறுதியில் எஸ்பி வேலுமணி விவகாரத்தை முதலில் கையில் எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் டிஜிபி கந்தசாமியின் உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் அவருக்கு நம்பகமான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
அங்கிருந்தபடி எஸ்பி வேலுமணிக்கு எதிரான புகார்கள் மீதான ஆதாரங்களை வலுப்படுத்துவதுடன் சில சாட்சியங்களையும் தயார் செய்வதாக கூறுகிறார்கள். மேலும் கைது நடவடிக்கையின் முதல்படியாகவே அதிகாரிகள் கோவையில் சென்று முகாமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில் மேலிடத்தில் இருந்து எப்போது உத்தரவு வந்தாலும் தமிழகத்தையே பரபரப்பாக்கும் அந்த கைது நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டதும் இந்த எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எதுவும் பெரியளவில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் நடிகை அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கில் கைதாகியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கையில் எடுத்தால் விமர்சனங்கள் எழும் என்று கூறப்பட்டது, ஸ்டாலின் டெல்லி சென்று வந்த பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அப்படியான சம்பவங்கள் ஏதும் நிகழாத நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் உள்ள மாஜி அமைச்சர்கள் தடயங்களை அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக செயல்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் முக்கிய டெண்டர்கள் இவர் கை காட்டும் நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டது என்கிறார்கள். திமுகவின் ஹிட் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவர் எஸ்.பி.வேலுமணி.
கோவையில் கொரோனா காலத்தில் உணவு, மருத்துவ உபகரணங்கள், கிருமி நாசினி என பலவற்றுக்கு டெண்டர்கள் விடப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகச் சொல்றாங்க.. திமுக ஆட்சிக்கு வந்தபின் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டாலும் கோவை மாநகராட்சியில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலர் இன்னமும் பணியாற்றுகிறார்களாம். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கிய கோப்புகள் சில காணாமல் போகிறதாம்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருத்தர் என்ன சொல்றாருன்னா “எலிகள் திண்றுவிட்டது கரையான் அரித்துவிட்டது என்று காரணம் சொல்வார்கள். இது எஸ்.பி.வேலுமணியை காப்பாற்ற செய்யும் வேலை. கோவை வட்டார திமுகவிலேயே சில பேரு எஸ்.பி.வேலுமணி மீது இன்னமும் ரகசியமாக நட்பு பாராட்டடிகிட்டு வர்றாங்கன்னு சொல்றாரு.”
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்கலைன்னா பல கோப்புகள் காணாமல் போகலாம் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்த கோவை மாநகராட்சி ஊழியர்கள்.எஸ்.பி.வேலுமணி கைதாவாரா அல்லது தடயங்களை யெல்லாம் அழித்து விட்டு தப்பித்துக் கொள்வாராங்கிறத அந்த ஆண்டவன் தான் சொல்லணும்.
