திமுக கூட்டணி ! அதிருப்தியில் காங்கிரஸ்..?

திமுக கூட்டணிக்குள் கசமுசா… அதிருப்தியில் காங்கிரஸ்..!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ரொம்ப சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து நோகடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ரொம்ப சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து நோகடித்துள்ளதாக கூறப்படுகிறது.உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்றால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை சதவீத தொகுதியில் கட்சிகள் போட்டி என்பதை அறிவிப்பார்கள். ஆனால், 9 மாவட்டங்களில் மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை சதவீதம் இடங்களில் போட்டி என்பது இன்று வரை வெளிப்படையாக திமுக, அதிமுக கூட்டணிகள் அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கியதால், பாஜக அதிர்ச்சி அடைந்தது.
இதேபோல திமுக கூட்டணியிலும் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் குறைவான இடங்களையே ஒதுக்கி திமுக அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல், அவர்கள் சொல்லும் இடத்தில் போட்டியிட சொல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இடப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதே போல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

 

ஆனால், திமுக கூட்டணி இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இடப் பங்கீடு குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை இறுதி செய்து அனுப்ப கேட்டுக்கொண்டது. செப்டம்பர் 22ம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். 23ம் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் என்றும் 25ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். திமுக கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப்பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ரொம்பவே சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து அதிர்ச்சி அளித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் கூறுகையில், “1996ல் திமுக மற்றும் தாமக கூட்டணியில் இருந்தபோது 1996, திமுக உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை ஒதுக்கியது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி 95 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பதிவு செய்தது. இப்போது, ​​திமுக தலைவர்களின் கூட்டணி கட்சிகள் மீதான அணுகுமுறை ஏற்கெனவே தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. திமுகவின் மாநிலத் தலைமை தலையிடாவிட்டால், இந்த பிரச்சனை தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும்’’என்று அவர் கூறினார்.

ஆனால், திமுக தரப்பில், 1996 உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது, ​​கூட்டணியில் ஒன்பது கட்சிகள் இருக்கிறது. உள்ளூர் தலைவர்கள் மட்டுமே உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் திறனை அறிந்திருக்கிறார்கள். எனவே, முடிவெடுக்கும் உரிமையை மாவட்ட தலைவர்களிடம் விட்டுவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில், இடங்களின் சதவீதம் எடுபடாது. வேட்பாளரின் ஆளுமை மட்டுமே செல்வாக்கு செலுத்தும்.” என்று தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆரம்பத்தில் 30 சதவீத இடங்களைக் கேட்டது. பின்னர், குறைந்த பட்சம் 10 சதவிகித இடங்களாவது தர வேண்டும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது, ​​2 சதவீதத்துக்கு குறைவாகவே இடங்கள் தருவதாகக் கூறுகிறார்கள் என்று வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் எதிர்வினை உண்டு. இதற்கான பலனை வாக்கு எண்ணும் நாளில் தெரியும் என்று கூறுகிறார்கள். இப்படி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மிகவும் மிகவும் குறைவான இடங்களைப் பெறுவதைவிட தனித்து போட்டியிடலாம் என்பதே முக்கிய தலைவர்கள் பலரின் விருப்பம்” என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.