*எல்.முருகனுக்கு சீட் கேட்ட பாஜக- நிராகரித்த அதிமுக!

 

*எல்.முருகனுக்கு சீட் கேட்ட பாஜக- நிராகரித்த அதிமுக! அதனாலத்தான் ஒரு ராஜ்யசபா இடத்துக்கு இடைத்தேர்தலின் நடத்தப்படுது.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு டெல்லி பாஜக மேலிடம் ராஜ்யசபா சீட் கேட்டதை அதிமுக நிராகரித்ததால்தான் தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுறதுன்னு பாஜக வட்டாரங்கள்.சொல்லுது.

தமிழகத்தில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான 3 இடங்கள் காலியாக இருக்குது. அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைந்ததால் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு மட்டும் அடுத்த மாதம் இடைத்தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

செப்டம்பர் 13-ந்தேதி இந்த தேர்தல் நடக்கிறது. 3 இடங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால் எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 2 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்ற முடியும். அதே சமயம் தனித்தனியாக நடத்தினால் 3 இடங்களையும் திமுகவே கைப்பற்ற முடியும்.

இதனை உணர்ந்துதான், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதிமுகவின் திட்டத்தை முறியடிக்க, காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடம் கடந்த மார்ச் மாதமும், 2 இடங்கள் மே மாதத்திலும் காலியாக இருப்பதாக ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதால், ஒரு இடத்துக்கு தனியாகவும் மற்ற 2 இடங்களுக்கு தனியாகவும் காலியான காலத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் எம்பிக்கள் டி.ஆர் பாலுவும் வழக்கறிஞர் வில்சனும் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். தனித்தனியாகத்தான் நடத்த வேண்டும் என முந்தைய காலக்கட்டங்களில் நடந்த பல்வேறு சம்பவ உதாரணங்களையும் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்று ஒரு இடத்துக்கு மட்டும் தனியாக தேர்தலை நடத்த அறிவித்துள்ளது ஆணையம். ராஜ்யசபாவில் பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடையாது. அதனாலேயே பல சிரமங்களை சந்தித்து வருகிறார் மோடி. இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுகவின் ராஜ்யசபா பலம் மேலும் அதிகரிக்க எப்படி அனுமதித்தது ஒன்றிய அரசு ? என்ற கேள்விகள் அரசியலில் எதிரொலித்தது. இது குறித்து விசாரித்தபோது, ஒரே சமயத்தில் நடத்தினால் அதிமுகவுக்கு கிடைக்கும் ஒரு இடத்தை தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பாஜக எல். முருகனுக்காக கேட்டது பாஜக மேலிடம். ஆனால், அதற்கு எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லை.ராஜ்யசபா இடத்தை கேட்காதீங்க.உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை ஒதுக்கிறோம்னு சொன்னதுனால இதனால் காட்டமான பாஜக, தனித்தனியாக தேர்தலை நடத்த ஆணையத்திற்கு மறைமுக உத்தரவை கொடுத்தது. அதன்படியே நடந்து கொண்டிருக்கிறது ஆணையம். பாஜகவுக்கு ஒரு இடத்தைத் தந்துவிட்டு அதன் நட்பை மேலும் இறுக்கமாக்கி கொண்டிருந்தால் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஏற்படும் நெருக்கடிகளை டெல்லியை வைத்து சமாளித்திருக்கலாம். இப்போது, அதிமுகவுக்கு அந்த ஒரு இடம் கிடைக்காமல் போகிறது என்று சொல்கிறார்கள் பாஜகவினர்.

இதனிடையே ஒரு இடத்துக்கு நடக்கும் ராஜ்யசபா இடைத்தேர்தலில் தேர்தலில் திமுக மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த ஒரு சீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் யாருக்கு தருவார் என அறிவாலயத்தில் பட்டிமன்றமே நடந்தன. மாப்பிள்ளை சபரீசன், டெல்லியில் கட்டப்படும் திமுக தலைமை அலுவலக கட்டிட பணிகளை கவனித்து வரும் இளைஞர் கார்த்தி (உதயநிதியின் நண்பர் , அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் ), தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பெயர்கள் பரபரப்பாக அடிப்பட்டன. இந்த நிலையில், திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் செயலாளராக இருக்கும் புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் ஸ்டாலின். அப்துல்லாவும் உதயநிதியின் நண்பர்தான். திமுகவில் உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காகவே இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது என்கிறார்கள் அறிவாலய தரப்பினர்.

அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்துக்கு நடக்கும் இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் அப்துல்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார். முகமது ஜானின் பதவி காலம் 2025-ல் முடிவடையும் என்பதால், 6 ஆண்டுகால ராஜ்யசபா பதவி காலத்தில் அடுத்த நான்காண்டு காலம் (2025 வரை) மட்டுமே பதவியில் இருப்பார் அப்துல்லா. இதன் மூலம் ராஜ்யசபாவில் திமுகவின் பலம் 8 ஆக உயரும்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் வைத்தியலிங்கம் 2016 லும் , கே.பி.முனுசாமி 2000-த்திலும் ராஜ்யசபா எம்.பி.யானர்கள். அந்த வகையில் 2022 வரை வைத்தியலிங்கத்துக்கும், 2026 வரை கே.பி.முனுசாமிக்கும் பதவி காலம் இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்களாக ஜெயிச்சதால இரண்டு பேரும் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செஞ்சிட்டாங்க. அந்த வகையில், நவம்பருக்குள் இருந்த 2 இடங்களுக்கான இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அந்த 2 இடத்திற்கான இடத்தேர்தலில் 2026 வரை பதவி காலம் இருக்கும் இடத்துக்கு சபரீசனையும், 2022 வரை மட்டுமே இருக்கும் இடத்துக்கு கார்த்திக்கும் வாய்ப்பளிக்க கட்சி தலைமையிடம் ஒரு யோசனை இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், 2022-ல் அதிமுக எம்பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜயக்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று பேரின் பதவி காலம் முடியவிருக்கிறது. வைத்தியலிங்கம் ராஜினாமா செய்ததால் நவம்பரில் நடக்கவிருக்கும் அந்த இடத்துக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெறும் திமுக உறுப்பினரின் பதவி காலமும் 2022-ல் முடிவடைந்து விடும். ஒருவேளை நவம்பரில் நடக்கும் இந்த இடத்துக்கான இடைத்தேர்தலில் உதயநிதியின் நண்பர் கார்த்திக் நிறுத்தப்பட்டால், அடுத்த 6 மாதத்திலேயே அவரது பதவி காலம் முடிந்து விடும். அதனால், 2022-ல் நடக்கும் 6 இடங்களுக்கான தேர்தலில் மீண்டும் கார்த்திக்கிற்கே வாய்ப்பளிக்கவும் இடமுண்டு. அதனால் முழுமையான பதவி காலம் இருக்கும் தேர்தலில் சபரீசனுக்கும் கார்த்திக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என்று ராஜ்யசபா தேர்தல் குறித்து பல தகவல்கள் அறிவாலயத்தில் எதிரொலிக்கின்றன.

Related posts:

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்
டெல்லி பறந்த "தங்கம்" ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க்
ரங்கசாமி அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து!
பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தமிழகத்திற்கு வர உள்ளார்.
அதிமுகவின் மிகப்பெரிய தவறு.. திமுகவுக்கு "தீயாய்" உதவும் தினகரன்.. காரணம் இதுதான்!
மத்திய அரசா? ஒன்றிய அரசா? – என்ன சொல்லுது இந்திய வரலாறு ? “இந்திய அரசியலமைப்புச் சட்டம்  என்ன சொல்லுது ?
திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !
சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.