அதிமுக கூட்டணி இல்லாத நிலையில், அமமுகவின் கூட்டணியும் இல்லாத நிலையில், திமுகவின் கதவும் அடைக்கப்பட்ட நிலையில், அந்த முடிவைத்தான் தேமுதிக எடுக்க போகிறதா?
ரொம்ப நாளாகவே அதிமுக தலைமையானது தேமுதிகவை கண்டு கொள்ளவில்லை.. அக்கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி, பிரேமலதாவின் பேச்சு, விஜயகாந்த்தின் உடல்நிலை இதெல்லாம் பார்த்து கூட்டணியை உறுதி செய்யாமல் தயங்கியே இருந்தது.
அதைவிட முக்கியமாக பாமகவை சரிக்கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தது.. ஒருகட்டத்தில் தேமுதிக வந்தால் வரட்டும், வராவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த சமயத்தில்தான் திமுகவுடன் தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தை என்ற செய்திகள் பறந்தன.. 10 சீட்கள் வரை தருவதாக திமுக சொல்லியும், அதை தேமுதிக ஏற்கவில்லை.. இதை பார்த்ததும் சற்று கலக்கமடைந்த அதிமுக, திமுகவுக்கு ஒரு லாபமும் கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேச்சுவார்த்தையை துவங்கியது.. இதை பார்த்ததும் திமுகவோ, தேமுதிகவுக்கான கூட்டணி கதவை இழுத்து மூடிவிட்டது.
ஆனால், அதிமுகவில் பேச்சுவார்த்தை எடுபடவில்லை.. இறுதியாக 13 சீட்கள் + ராஜ்ய சபா சீட் தர முன்வந்தது.. ஆனால், கூடுதல் சீட்டுகளுடன் தேர்தல் நிதியும் வேண்டும் என்பதே தேமுதிகவின் முக்கிய கண்டிஷனாக இருந்துள்ளது. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், தேர்தல் நிதியை கையிலேயே கேட்டதாகவும், அந்த விஷயத்திலேயே பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்ததாகவும் செய்திகள் வந்தன.
இதற்கு பிறகுதான் கூட்டணியில் இருந்து விலகி, அமமுகவுடன் பேச்சு நடந்தது.. அங்கும் 32 சீட் வரை ஓகே ஆனதாக தெரிகிறது.. ஆனால், தினகரனும் செலவுக்கு பணம் தர மறுத்துவிட்டார்.. இது சம்பந்தமாகவே 3 நாட்கள் பேச்சுக்கள் நடந்து வந்ததாக தெரிகிறது. எப்படி பார்த்தாலும், நேற்று மாலை விஜயகாந்தை, தினகரன் சந்திப்பார் என்றும் சொல்லப்பட்டது.. அப்படி சந்திப்பு நடந்துவிட்டால், கூட்டணி உறுதி ஆகிவிடும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால் அப்படி ஒரு சந்திப்பே நடக்கவில்லை.
அதிமுகவாகட்டும், அமமுகவாகட்டும், திமுகவாகட்டும்… இவர்கள் யாருமே கையில் காசு தர விரும்பவில்லை.. சீட் விஷயத்தில்கூட தாராளம் காட்ட முன்வர தயாராக இருந்தநிலையில், எதிர்பார்க்கும் தேர்தல்நிதியை கையில் தர விருப்பமே இல்லை.. இதுதான் இப்போதுவரை தேமுதிகவின் கூட்டணி பிரச்சனைக்கு காரணமாக இருந்து வருகிறது.. அதுமட்டுமல்லாமல், தேமுதிகவுக்கே கையில் காசு இல்லை என்று பிரேமலதா ஒருமுறை சொல்லி வந்த நிலையில், தேர்தலை தனித்து சந்திப்பது என்பது அக்கட்சிக்கு இப்போது சிக்கலான காரியமாக உள்ளது.
மிச்சமிருப்பது கமல்தான்.. அவருடன் சேருவார்களா? அவரை சந்தித்து பேசுவார்களா என்பது தெரியவில்லை.. தனித்துப் போட்டியிடவும் அவர்கள் துணியவில்லை.. இதுக்கு பேசாமல் தேர்தலை விட்டு ஒதுங்கி கொண்டாலே கவுரவமாக இருக்கும் என்றும் யோசிப்பதாக தெரிகிறது.. ஆனால், தனித்து போட்டி என்று முடிவெடுத்து விட்டால், நிலைமை படுமோசமாகிவிடும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களும் கறாராக சொல்லிவிட்டனர் போலும்..
வழக்கமாக, கைகொடுத்து தூக்கிவிடும் பாஜகவும் இப்போது உதவிக்கு வரவில்லை.. காரணம் பாஜகவின் தொகுதி விவகாரமே இன்னும் முடிவுக்கு வரவில்லை.. விஜயகாந்த் என்றாலே பிரதமர் மோடிக்கு அளவுகடந்த பிரியம்.. விஜயகாந்த்தின் கன்னத்தை பிடித்து கிள்ளி அன்பை பொழிவார்.. மோடி என்றில்லை.. பாஜக தலைவர்கள் எல்லாருக்குமே விஜயகாந்த்தை ரொம்ப பிடிக்கும்..
ஆனால், கூட்டணி விஷயம் என்று வரும்போது, அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியவில்லை என்றே தெரிகிறது. இப்படி கூட்டணி விஷயத்தில், யாருடனும் சேர முடியாமலும், தனித்து போட்டி என்ற முடிவில் இறங்காமலும் உள்ளதை கண்டு தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.. தேமுதிகவின் தள்ளாட்டமோ இன்னும் அடங்காமல் உள்ளது..!