கடந்த அதிமுக ஆட்சியில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருந்த திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்களுக்கும், எந்த மாவட்டங்களிலிருந்து அவை பிரிக்கப்பட்டனவோ அந்த மாவட்டங்களுக்கும், அதாவது வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கள் என மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் எஞ்சிய 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஆரம்பக் கட்ட வேலைகளைத் தொடங்கிட்டாங்க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தொண்டர்களை களப்பணியாற்ற முடுக்கி விட்டுருக்காங்க.. அடுத்து வரும் தேர்தலை பொறுத்தவரையில் ரொம்ப முக்கியமானது கூட்டணி தான்..கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை இருபெரும் திராவிடக் கட்சிகளும் தொடருமா? இல்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்பட்டு வருது. இந்த சூழலில் திமுக கூட்டணிக்குள்ள நடக்கிற உரசல்கள் வெளியில் வரத் தொடங்கியிருக்குது. அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள 15 மேயர் பதவிகளில் ஐந்தை தங்களுக்குத் தந்தே ஆகணும்ன்னு காங்கிரஸ் கட்சி கேட்பதாகச் சொல்லப்படுது
ஆனால் திமுக தரப்போ ஒண்ணுக்கு மேல் தர்றதுக்கு இஷ்டமே இல்லையாம். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத பல்வேறு இடங்களில் தனித்து போட்டியிட்டதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையானது.அதனுல ஸ்டாலின் வருந்தப்பட்டாராம். அதேபோல இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போதே போதிய சீட்களை கேட்டு பெறணும்னு காங்கிரஸ் கட்சி தீர்மானமா இருக்குதாம்
.இதுதொடர்பாக கட்சி மேலிடம் மூலம் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறாங்க.. ஒருவேளை எதிர்பார்க்கும் இடங்கள் கிடைக்கலைன்னா கூட்டணியை முறிச்சிக்கலாமான்னு கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக கூறுகிறார்கள் சத்தியமூர்த்தி பவன் கதர்ச்சட்டைக்காரர்கள்.
இதற்கிடையில் காங்கிரஸிற்கு செக் வைக்கும் வகையில திமுக அதிரடி வியூகம் ஒன்றை எடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரம் சொல்லுது. அதாவது, கூடுதல் சீட் கேட்டு காங்கிரஸின் பிடி இறுகினால் அப்படியே ரூட்டை தேமுதிக பக்கம் திருப்பி விடுவார்களாம். திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானால் காங்கிரஸ் கட்சியால் அதிக சீட் கேட்டு நெருக்கடி தர முடியாது. இது மு.க.ஸ்டாலினுக்கு சாதகமாக போய் முடியும் என்கின்றனர்.இந்த கூட்டணி வாக்கு வங்கி அரசியலிலும் சாதகமான அம்சங்களை உண்டாக்கி வரும்னு அரசியல் பார்வையாளர்கள் சொல்றாங்க.. ஏன்னா காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்பது தென் மாவட்டங்களில் பரந்து விரிந்தது. ஆனால் வட மாவட்டங்களில் பெரிதாக இல்லை. விஜயகாந்த் அவர்களின் தேமுதிகவை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு வங்கியை வச்சிருக்காங்க.இந்த வாக்கு வங்கி கூட கேப்டனுக்கானது தான்.தேமுதிக கட்சிய விஜயகாந்த் தொடங்குனதுக்கு அப்புறம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்கள் அதிகமுள்ள விருத்தாசலம் தொகுதியில தனித்துப் போட்டியிட்டு ஜெயிச்சாரு.இது அப்போ எல்லாருக்கும். ஆச்சரியமாக இருந்திச்சு.
எந்தக் கட்சியும் சந்திக்கக் கூடாத மிகப்பெரிய வீழ்ச்சியைத் தொடந்து சந்தித்துவருகிறது தேமுதிக. 2021 தேர்தலில், கடைசி கட்டத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற்றப்பட்டது. பிறகு தினகரனுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது கட்சி. துவண்டுபோயிருக்கும் கட்சியினருக்கு வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் புத்துயிரூட்டும் என்ற நம்பிக்கை அந்தக் கட்சியினரிடம் இருக்கிறது. ஏனெனில், பாமக வலுவாக இருக்கும் வடக்குப் பகுதிகளில்தான் தேமுதிக-வும் ஓரளவு செல்வாக்குடன் இருக்கிறது. உள்ளாட்சியில் எப்படியேனும் திமுக கூட்டணிக்கு உள்ளே புகுந்துவிட வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறது பிரேமலதா வட்டாரம்.கடந்த ஒவ்வொரு தேர்தலிலும் பலம் வாய்ந்த கூட்டணியை தேமுதிக தலைமை தேர்ந்தெடுக்க தவறுனதாலத்தான் தேமுதிக கரைஞ்சு காணாமப் போய்டிச்சி. மேலும் பாமக பலம் வாய்ந்து விளங்கும் வட மாவட்டங்களில் தேமுதிக மூலம் ஓரளவு வாக்குகளை கவர்ந்து விட முடியும் என்பது திமுகவின் கணக்கு. ஒருவேளை காங்கிரஸ் விடாப்பிடியாக வெளியேறினால் கூட திமுக – தேமுதிக கூட்டணி பலமான வாக்கு வங்கியாக காணப்படும்னு சொல்றாங்க.எனவே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் திமுகவை விட காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தனக்கு சாதகமான அம்சங்களை பெறுவதற்காக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக காய்களை நகர்த்துவார் என்பதிலும் சந்தேகமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இந்த சூழ்நிலையில ஒரு தகவல் ஓடிக்கிட்டு இருக்குது அதாவது
திமுகவுடன் கை கோர்க்க தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுது.. இது சம்பந்தமாக விரைவில் விஜயகாந்த் தன்னுடைய தொண்டர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்குது.தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக சார்பில் முதல்வர் ஸ்டாலினை சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த ஸ்டாலின் நேரில் வந்து அவரை சந்திப்பதாக சொல்லி இருந்தார்.. அதற்கேற்றபடி, சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.அப்போது தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண உதவியை விஜயகாந்த் வழங்கினார். எதற்கான சந்திப்பு இது என்று தெரியாவிட்டாலும், எப்படியும் இவர்கள் கூட்டணி வைப்பார்களோ என்று கணக்கு அந்த சந்திப்பின் போது போடப்பட்டது.. காரணம், துரைமுருகனும் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றிருந்ததுதான் ..விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.. வடமாவட்டங்களில் இந்த முறை பிரதான ஓட்டு வங்கியுடன் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி வருவதாக அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கேற்றபடி முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றிருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு, திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதாவும், சுதீஷூம் அதித ஆர்வம் காட்டி வர்றாங்களாம்..
குறிப்பாக, “நமது எதிரியான பாமகவுக்கும், துரோகியான அதிமுகவுக்கும் பாடம் புகட்ட திமுக கூட்டணியில் எப்படியும் இணைந்து விட வேண்டும்னு முயற்சி எடுக்கிறாங்களாம், கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத இடங்களையாவது பெற வேண்டும் என்றும், கூட்டணியை உறுதி செய்ய ஸ்டாலினின் மனைவி துர்காவிடம் தொடர்ச்சியாக பேசுங்கள்” என்றும் பிரேமலதாவை சுதீஷ் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உறுதியானால் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதால், கடந்த காலங்களில் கூட்டணி விஷயத்தில் நடத்திய அணுகுமுறையை திமுகவிடம் காட்டக்கூடாது என்றும் சுதீஷ் அட்வைஸ் பண்ணியிருக்காராம்.. ஸ்டாலினும், விஜயகாந்த்தும் சந்தித்து பேசுனதுனால திமுக – தேமுதிக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டிருக்காம்.. 2 கட்சிகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலையும் இப்போதே வரத் தொடங்கியாச்சாம்.. இதையடுத்து நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க 100 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்குது.
ஆனாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுகவில் சில நிர்வாகிகள் விரும்பவில்லை.. குறிப்பாக வடதமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் இதை பற்றி சொல்லும்போது, “விஜயகாந்த் மீது தலைவர் தளபதிக்கு உள்ள நட்பும் மரியாதையும் அவர்கிட்ட அப்படியே இருக்கட்டும்… தப்பில்லை… அதுக்காக தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், திமுகவின் வெற்றி எங்களால்தான் நடந்தது என தேர்தல் முடிந்ததும் அந்தம்மாவும் அவரது தம்பியும் வீராவேசமா மேடைக்கு மேடை பேசுவாங்க. அந்த நிலைமை நமக்கு வேண்டுமா?இத்தனைக்கும் அரை சதவீத வாக்குகளைதான் அவர்கள் வைத்திருக்கிறார்கள்… அதனால், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதற்கான விவாதம் வருகிறபோது அதனை ஆமோதிக்காதீர்கள்.. நாம தனித்து நின்றாலே அபார வெற்றி பெற்றுவிடுவோம்” என்று துரைமுருகனைச் சந்தித்து பேசியிருக்காங்க.கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கணும்னு தான் பல நிர்வாகிகள் விரும்பினாங்க.. அதை ஓபனாகவே விஜயகாந்திடம் எடுத்தும் சொன்னார்கள்.. ஆனாலும், கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.. அதை எப்படியும் இந்த உள்ளாட்சி தேர்தலில் சரிகட்டும் விதத்தில் தேமுதிகவின் செயல்பாடுகள் இருக்கும் என்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்குது.இந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் அதை வைத்து கட்சியை மேலும் பலப்படுத்த முடியும்ங்கிற நம்பிக்கை கட்சியினரிடம் ஏற்பட்டு வருகிறதாம்.. விரைவில் நடைபெற உள்ள தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான
கருத்துக்களை கட்சி தலைமையிடம் தெரிவிக்க பல நிர்வாகிகள் தயாராக இருக்கிறாங்களாம்.. விஜயகாந்த்தின் வருகைக்காக மட்டுமே அவர்கள் வெயிட்டிங்..!கலைஞர் சொன்ன மாதிரி பழம் நழுவிப் பால்ல விழப்போகுது.இதுல அதிக அளவுல பலனடையப் போவது தேமுதிக தான்.இந்த வாய்ப்பைத் தக்க வச்சுப்பாங்களா அல்லது பேசியே கெடுத்திருவாங்களாங்கிறத நாம பார்க்கத் தான போறோம்.
