கெடு விதித்த செந்தில் பாலாஜி…! ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை..? அதிர்ச்சியில் திமுக ?

கெடு விதித்த செந்தில் பாலாஜி…! ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை..? அதிர்ச்சியில் திமுக

மின் வாரிய முறைகேடு குற்றச்சாட்டு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செபி நிறுவனத்திற்கு கடிதம் எழுத இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து அண்ணாமலை புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு   வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம்  திமுகவுக்கு வேண்டிய நிறுவனம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை  தெரிவிக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பிஜிஆர் ஒப்பந்த முறைகேடு குறித்து தமிழக முதல்வருக்கும், செபிக்கும் கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்தார். பிஜிஆர் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்..

ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை?

மின்வாரிய முறைகேடு தொடர்பாக புகார் அளித்தால் மிரட்டப்படுவதாக தெரிவித்த அண்ணாமலை எனக்கு கெடு விதிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பிரம்மாவா என கேள்வி எழுப்பினார். வழக்கு தொடர்ந்தாலும், கைது செய்தாலும் அது தொடர்பாக தனக்கு கவலையில்லையென்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்ட ஒப்புதல் குறித்தும் டான்ஜெட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் வழங்கியதற்கான  ஆதாரங்களை தமிழக ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக தெரிகிறது. மேலும்   மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது தொடர்பாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பாஜக மற்றும் திமுக இடையே நடைபெற்று வரும் மோதலில் இந்த மின் வாரிய பிரச்சனை மேலும் மோதலை அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.