ஜீரணிக்கவே முடியாது”.. ஒரே போடு.. இபிஎஸ் – ஓபிஎஸ்ஸிடம் கொதித்த டாப் தலைகள்.. வருகிறார் சசிகலா?! By Shyamsundar I Updated: Wednesday, February 23, 2022, 17:31 [IST] சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அன்று அவர் தலைமையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருந்த கட்சி, இன்று ஒற்றைத் தலைமைக்காக போராடி வருகிறது.  ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகளின் குரல்கள் எப்படியிருக்கும் என்பது கூட பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபையில் அவர்கள் பேசும் போது குரல்களை கேட்பதோடு சரி! மற்ற நேரங்களில் எல்லாமே ஜெயலலிதாதான்.  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கினால் சிறை செல்ல நேரிட்டுவிட்டது.  அதிமுகவில் தலைமையே இல்லை.. செல்லூர் ராஜூ சொன்ன மறுநாளே.. சசிகலா பேச்சை கவனித்தீர்களா? ஓஹோ! அதிமுக இதையடுத்து அதிமுகவில் அடிமட்ட நிர்வாகி வரை அனைவரும் வீதிக்கு வந்து பேசி வந்தனர். சசிகலா, தினகரன் கட்சிக்குள் வராமல் இருக்க பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை சேர்த்தனர். இதில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்தனர். இவர்கள் இருவரும் அதிமுகவுக்கு இரட்டை தலைமைகளாகிவிட்டனர். அன்றிலிருந்தே லேசாக புகைந்து கொண்டு வந்த பிரச்சினை இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. நிறைய விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வந்தார்கள். சில அறிக்கைகளை கூட இருவரும் தனித்தனியே வெளியிட்ட தருணங்களும் உண்டு. சில காலத்திற்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்தது. காரணம் இரு தலைவர்கள் இருப்பதால் இரு கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் செயல்பட்டு வந்தனர். கட்சி பதவிகள்,வேட்பாளர்கள் தேர்வு இவையெல்லாம் பெற இரு தலைமையின் ஆதரவாளர்களுக்குள்ளேயே போட்டிகள் இருந்தன. இவ்வாறு குழுக்களாக பிரிந்து கிடந்ததால் பொதுவான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற ஒரு புள்ளியில் அதிமுக இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடும் அதிமுக வென்றுவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என அதிமுக தலைமை நினைத்தது. காரணம் இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் மக்கள் தங்களை ஆதரிப்பர் என கருதினர். ஆனால் நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ததால் கட்சியில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக இரட்டை தலைமைக்கு அழுத்தங்கள் வருவதாகவும் தெரிகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கட்சிக்குள் இரட்டை தலைமைக்கு எதிராக கடுமையாக குரல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. உடனடியாக அதிமுகவை மீட்கும் வகையில் சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இரட்டையர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.   சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 75 இடங்கள் பெற்று கொஞ்சம் டீசண்டான தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிக மோசமான படுதோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை. அதிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் மொத்தமாக களத்தில் குதித்து தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தும் கூட.. முதல்வர் ஸ்டாலின் வெறும் ஆன்லைன் பிரச்சாரம் மூலமே திமுகவிற்கு வெற்றிகளை அள்ளி இருக்கிறார்.   1996ல் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்ததே கிடையாது. 26 வருடங்களில் அதிமுக சந்தித்த மிக மோசமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி ஆகும் இது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இரட்டை தலைமை இருந்தும்.. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைகள் இருந்தும் கூட இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. அதிலும் சட்டசபை தேர்தலிலாவது பாஜக கூட்டணிதான் தோல்விக்கு காரணம் என்று பழியை தூக்கி போட ஒரு கட்சி உடன் இருந்தது. ஆனால் இப்போது அதிமுக தனித்து நின்றும் தோல்வி அடைந்து இருக்கிறது. அதிமுக நிர்வாகிககளை இந்த தோல்வி மன ரீதியாக முடக்கி போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த கைதுகள், ரெய்டுகள் காரணமாக சோர்வாக இருந்த நிர்வாகிகள் இந்த தோல்வியால் துவண்டு போய்விட்டதாக ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்புடன் சொல்கிறார்கள்.  அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வியை அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி, இந்தளவுக்கு மோசமான தோல்வியை சந்திக்கிறதென்றால் காரணம் தலைமை சரியில்லை என்று நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனராம். இதை பற்றிய கோபமாக புகார் தலைமைக்கும் சென்று இருக்கிறதாம். இத்தனை கோடி தொண்டர்கள் இருந்தும் தேர்தல் வியூகங்களை அமைக்கத் தெரியாததால்தான்அ திமுக தோல்வி அடைந்துவிட்டது என்று கட்சி நிர்வாகிகள் கடுமையான புகார்களை வைக்க தொடங்கி உள்ளனர். தலைமை சரியாக இருந்தால் இப்படி நடந்து இருக்காது. இனியும் இரட்டையர்களை நம்புவது சரியாக இருக்காது என்று கட்சிக்குள் இருக்கும் டாப் தலைகள் சந்தேக வார்த்தைகளை வீசி இருக்கிறார்களாம். அதிலும் அமமுக கட்சி இந்த தேர்தலில் பல இடங்களில் கணிசமான வாக்குகளையும் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இந்த வாக்குகள் அதிமுகவின் வாக்குகள். அதனால் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் சில பாடங்களை உணர்ந்து, மனமாச்சர்யங்களை உதறி விட்டு சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர சம்மதியுங்கள் என்று அதிமுகவின் டாப் நிர்வாகிகள் சிலர் கட்சி இரட்டையருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.  ஒற்றை தலைமைதான் அதிமுகவை காப்பாற்றும் என்று மூத்த தலைவர்களிடம் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் கட்சியின் உண்மையான நிர்வாகிகள். இந்த தேர்தலில், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பாஜக அறுவடை செய்திருக்கிறது. கணிசமான வாக்குகளை பரவலாக வாங்கியிருப்பதை கவனிக்க வேண்டும். இவர்களின் வளர்ச்சி அதிமுகவுக்கு ஆபத்து. பல இடங்களில் அதிமுகவை முந்தி பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தலைமை சரி இல்லை என்பதை பட்டவர்த்தனமாக லைட் போட்டு காண்பித்து இருக்கிறது இந்த சறுக்கல். அதனால் இப்போதே கட்சியை வலைமைப்படுத்த வேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்பதை நிலை நிறுத்த வேண்டும். இதற்கு சில அதிரடி முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும் என்று கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் தலைமைக்கு ஆலோசனை வழங்கி உள்ளனராம். முக்கியமாக சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவது முக்கியமானதாக இருக்க வேண்டும் என தென் மாவட்ட அதிமுக மாஜிக்கள் அனைவரும் எடப்பாடி, பன்னீர், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோரிடம் வலியுறுத்த துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.  சசிகலாவிற்கு உயர் பதவியை கொடுத்து அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இது அதிமுக இழந்த முக்குலத்தோர் வாக்குகள் உட்பட தென் மண்டல வாக்குகளை மீண்டும் பெற உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தி உள்ளனராம். மேலும் டெல்டா செல்வாக்கையும் மீட்டு எடுக்கவும், பெண்கள் வாக்குகளை மீண்டும் பெறவும் சசிகலாதான் சரியான சாய்ஸ்ஸாக இருப்பார் என்று டாப் லீடர்கள் இபிஎஸ் – ஓபிஎஸ்ஸிடம் அறிவுரை வழங்கி உள்ளதாக தெரிகிறது.  ஒற்றை தலைமைதானாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்ஸும் கருதுகிறார்கள். இருவரது தலைமையுமே வேண்டாம் என்பது நடுநிலையாக இருக்கும் தொண்டர்களின் கருத்து. இரட்டை தலைமையின் கீழ் இருக்கும்போது இரு தலைமையின் ஆதரவாளர்களே பலனடைந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.  எனவே எல்லாவற்றிற்கும் பொதுவானவராக சசிகலா தலைமையின் கீழ் அதிமுக இயங்கினால்தான் சரியாக இருக்கும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் சசிகலா அதிமுகவில் வருவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு விருப்பம் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி விடுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை கட்சி உடையாமல் இருக்க சசிகலா தலைமையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றால் என்ன தவறு என்ற கேள்விகளும் எழுகின்றன. சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வரக் கூடாது என்றால் அதற்கு சசிகலாவுக்கு எதிரானவர்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதாவது ஓபிஎஸ்ஸின் கீழ் அதிமுக என்ற நிலை ஏற்பட வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பாரா என தெரியவில்லை. யார் அந்த ஒற்றை தலைமை ? அண்மையில் நகர்ப்புற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து பேசிய அமைச்சர் பெரியசாமி, காலபோக்கில் திமுகவில் அதிமுக ஐக்கியமாகிவிடும் என கூறியிருந்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு தலைமைகளுக்குள் இருக்கும் பிரச்சினையால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டி காப்பாற்றிய அதிமுக தேய்ந்துவிடக் கூடாது என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே அதிமுகவுக்கு தலைமையேற்பது எடப்பாடி பழனிச்சாமியா, ஓ பன்னீர் செல்வமா இல்லை சசிகலாவா என்பது இனிதான் தெரியவரும்.