எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை”.. கணக்கு போட்ட ஸ்டாலின்.. கார்னர் செய்ய தனி டீம்.. கிளம்பும் பூதம்!

எடப்பாடியே எதிர்பார்க்காத சிஏஜி அறிக்கை ! என்ன செய்யப் போகிறார் எடப்பாடியார் ?

தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கான சிஏஜி அறிக்கையில் பல பூதங்கள் அடங்கி இருக்குது. இந்த சிஏஜி அறிக்கை வெளியான மறுநாள்தான் ஊழல் ஒழிப்புத்துறை டிஜிபியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இந்த நிலையில்தான் பட்ஜெட் கூட்டத்தொடரை மையமாக வைத்து அரசு சில முக்கியமான காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வருது!  தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள புகார்களை விசாரிக்க போகிறது, ஊழல் குறித்து விசாரணை நடத்த போகிறது, பைல்களை தோண்டி எடுக்க போகிறது என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிறைய தகவல்கள் வந்தபடிதான் இருக்குது. இந்த விசாரணை குறித்த செய்திகள் எல்லாம் பழைய கதை!.

இந்த நிலையில் புதிதாக, தமிழ்நாடு அரசு அமைக்க போகும் டீம் குறித்து தகவல்கள் வந்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மிக முக்கியமான விஷயம் ஒன்றை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வந்துள்ளது. அதிமுகவிற்கு எல்லா பக்கங்களிலும் செக் வைக்கும் விதமாக இந்த முடிவு இருக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.  தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க போகும் விஷயம் குறித்து பார்க்கும் முன், கடந்த கூட்டத்தொடரில் நடந்த விஷயம் குறித்த சின்ன பிளாஷ்பேக். தமிழ்நாட்டில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை. அரசின் நிதி நிலையை தெரிந்து கொண்டு திமுக வாக்குறுதிகளை கொடுத்து இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விமர்சனங்களை வைத்தார்.இதற்கு பதிலடியாகத்தான், நீங்கள்தான் சிஏஜி அறிக்கையை வெளியிடவேயில்லையே. பிறகு எப்படி நிதி நிலை எங்களுக்கு தெரியவரும் என்று கூறி, 5 வருடங்களுக்கான சிஏஜி அறிக்கையை தமிழ்நாடு அரசு மொத்தமாக வெளியிட்டது. இதில் மின்சார துறை தொடங்கி ஒவ்வொரு துறையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  இப்படி சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்ட மறுநாள்தான் முதல்வர் ஸ்டாலினுடன் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்தித்து ஆலோசனை செய்தார். ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையில் பல விஷயங்களை இவர்கள் பேசி இருக்கிறார்கள். இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும் இவர்கள் பேசினார்களாம். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முந்தைய அரசின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி டீம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுது. ஒவ்வொரு துறையிலும் நிறைய முறைகேடுகள் நடந்து இருப்பதால் இதை தனியாக விசாரிக்க வேண்டும், இதற்கு என்று ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற முடிவில் அரசு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த குழு குறித்துதான் முதல்வர் ஸ்டாலினும் டிஜிபி கந்தசாமியும் பேசியதாக தெரிகிறது. தனி அதிகாரம் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்படும். டிஜிபி கந்தசாமி தலைமையில் இந்த குழு ஊழல் புகார்கள் மீதான விசாரணையை மட்டும் “ஸ்பெஷலாக” கவனிக்கும். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் இந்த குழுவில் இடம்பெற போவதாக தகவல்கள் வருது. இந்த தனி குழுவிற்கு யாரை எல்லாம் தேர்வு செய்யலாம் என்பது பற்றியும் அன்று ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகபட்ச அதிகாரம், அதாவது யாரையும் கைது செய்ய, விசாரிக்க பிரீ ஹேண்ட் என்று இந்த தனி டீமிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்கிறார்கள். இதற்கான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் வெளியாகலாம். தமிழ்நாடு சட்டசபையில் திடீரென சிஏஜி அறிக்கையை 5 வருடத்திற்கும் சேர்த்து திமுக அரசு வெளியிடும் என்பதை அதிமுக நினைக்கவில்லை.  அதிலும் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட இழப்பை வெளிப்படையாக தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்பதை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. இது அதிமுகவிற்கு மிகப்பெரிய பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்ற எதிர்பாராத அறிவிப்பு ஒன்றைத்தான் திமுக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடும் என்கிறார்கள்.  கண்டிப்பாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரிய பூதங்கள் வெளியே வர வாய்ப்புள்ளது. பெரும்பாலும் நிதி அமைச்சர் பிடிஆர் முதலில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவார். இதில் எவ்வளவு மொத்த இழப்பு என்ற விவரம் இருக்கும். அதன்பின் இந்த இழப்பை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
தோண்டத் தோண்ட ஊழல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எந்த ஆதாரமும் இல்லாமல் முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்தால் பூமிக்கும் வானத்துக்கும் குதிப்பார்கள். ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு வருவாய் இழப்பு ஏற்பட்டது அதில் எவ்வளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்பதை வைத்து கைது செய்யலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறை திட்டம் தீட்டி வருகிறதாம்.விரைவில் ஆட்டம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கலாம்.