ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பாஜக ஆதரவோடு சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கட்டமைத்துள்ளதாக கூறப்படும் கைலாசா நாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி போயிருக்கலாம் என்றும், அங்கு சென்றால் தமிழக போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைக்க கூடும் என்றும் பேசப்பட்டது.இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக திடீரென தகவல் பரவியது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை போனில் அழைத்து சட்ட உதவி கேட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து மதுரை சரக டிஐஜி காமினி தலைமையிலான தனிப்படை போலீசார் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ம் தேதி ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு வரையில் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார்.

 

அதற்கு பிறகு அவர் என்னுடன் தொடர்பில் இல்லை. நாங்களும் அவரை தேடிக்கொண்டு தான் இருக்கிறோம் அவர் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை அவர், சட்டபூர்வமாக சந்திப்பார். மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் வருவேன்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உடல் நிலை சரியில்லாததால் தான் ஜாமீன் வாங்குவதற்காக அவர் தற்போது அலைந்து கொண்டிருக்கிறார். எனவே ராஜேந்திர பாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார். இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கூறினார்.இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூயமணி மனைவி குணா, தனது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கி தரவேண்டி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோர் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.17 லட்சம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது.

மேலும் மதுரை வில்லாபும் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணிக்காக சிவகாசி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப்ராஜ், தனது நண்பர் தரணிதரனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்காக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி என்ற விஜயநல்லதம்பி மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை எதுவும் வாங்கி தரவில்லை என 3 பேரும் இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளனர்.

இதேபோல் மதுரை கோமதிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் தனது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மானகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோனி மலை முத்துச்சாமி, திருச்சி பிரின்ஸ் சிவக்குமார் ஆகியோர் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடாசலம் தனது மகன் டாக்டர் பாலவிக்னேசுக்கு மருத்துவத்துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக விஜயநல்லதம்பி மூலமாக ராஜேந்திர பாலாஜிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக மற்றொரு புகார் வந்துள்ளது.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார். பதிவாகி இருக்கும் புகார்கள் மீது கைது செய்யவே ஆளை காணோம் என்ற சூழலில் புதிதாக 5 புகார்கள் பதிவாகி இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. அடுத்தடுத்து புகார்களை இறக்கி, அச்சமூட்டினாலே ராஜேந்திர பாலாஜி சரண்டர் ஆகும் நிலைக்கு தள்ளப்படுவார் என்பது தான் போலீசாரின் புதிய கணக்கு.

எனவே, எங்கே சுத்தி எங்கே போனாலும் விரைவில் தமிழக போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜி சிக்குவது மட்டும் உறுதியாகி உள்ளதால் அதிமுக மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து எல்லை மீறி பேசியதன் விளைவு ராஜேந்திர பாலாஜிக்கு தற்போது ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது.அவர் அதிமுகவில் இருந்தாலும் முழுக்க முழுக்க பாஜக ஆதரவாளர். அதுமட்டுமல்லாமல் தீவிர இந்துத்துவ பற்றாளர். அவரது கையில் மந்திரித்து கட்டிய விதவிதமான கயிறுகளே இதற்கு சாட்சி.

ஆட்சி இருக்கிறது.. டாடி இருக்கிறார் என்ற தைரியத்தில் ரொம்பவே ஓவரா போனார். இன்று அனுபவிக்கிறார். அவர் எங்கும் போய் இருக்க வாய்ப்பு இல்லை.

பாஜக ஆதரவோடு நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு போயிருக்கலாம். தமிழக போலீசார் துருவினால், ஒரு கல்லில் 2 மாங்காய் கிடைக்க கூடும். இவ்வாறு கூறினர்.