முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத தமிழக சட்டப்பேரவை !

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இல்லாத தமிழக சட்டப்பேரவையாக இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார் என்கிறார்கள். அரசியல் ரீதியாக பழிவாங்கும் குணத்தோடு செயல்படாமல், அவர்கள் செய்த சட்டவிரோத செயல்களே அவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டம்.. அதனால், ஜூலை மாதத்திற்குப் பிறகு இ.பி.எஸ்..ஓ.பி.எஸ்.ஸில் தொடங்கி ஒவ்வொருத்தராக முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குப் போவது உறுதி.முந்தைய அதிமுக ஆட்சியைப் பற்றியும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊழலில் கொடி கட்டி பறந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காக்கிறாரே, காரணம் என்ன? புரியாமல் இருக்கிறார்கள் திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.

அவர்களுக்கு எல்லாம் வார்த்தைகளால் பதில் சொல்லாமல், செயல்களால் பதில் சொல்லி கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சொல்கிறார்கள்.!
மூத்த திமுக நிர்வாகி ஒருத்தர் என்ன சொல்றார்ன்னா அதிமுகவே இல்லாத சட்டப்பேரவையை உருவாக்குவதற்கு ஸ்கெட்ச் போட்டு பக்காவாக காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார் அவர்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்வுகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டேன் என்பது தான்.அதிலும் குறிப்பாக எஸ்.பி.வேலுமணி ஜெயிலுக்கு போவது உறுதின்னும் சொன்னாரு.

மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அதற்கான பணிகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனோ பேரிடர் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிக்கிறது. அதனால், கொரோனோவைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுமையான கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், கொரோனோ தொற்றை சமாளிக்க முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே கிண்டலடிக்க தொடங்கினாங்க.

இப்படிபட்ட தகவல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய பிரமுகர்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தவுடன்தான், அவரது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறாராம். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் இடைவிடாது கவனத்தை செலுத்தி வரும் அதே வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் புகாரில் இருந்து தப்பித்து விடக் கூடாது என்று ஸ்கெட்ச் போட்டு, அதையும் சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கெடச்சிருக்கு.

டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள பி.கந்தசாமி ஐபிஎஸ் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் சாகசங்கள் கடந்த ஒருவாரமாக சமூக ஊடகங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர்தான், டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ்.அவரைப் பற்றி முதல்ல தெரிஞ்சிக்கலாம்.

இவரின் துவக்க காலத்தில் இவர் சந்த்தித்த முதல் பெரிய வழக்குன்னா கேரள மாநிலத்தில் நடந்த எஸ்.என்.சி-லாவ்லின் ஊழல் வழக்கு (SNC-Lavalin scam) என்று கூறலாம். எஸ்.என்.சி-லாவலின் ஊழல் என்பது 1995 ஆம் ஆண்டில் கேரள அரசாங்கத்திற்கும், கனடா நிறுவனமான எஸ்.என்.சி-லாவலினுக்கும் இடையிலான நீர்மின்சார உள்கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான நிதி ஊழல் ஆகும். முறையாக போடப்படாத இந்த ஒப்பந்தத்தால் கேரள அரசிற்கு சுமார் 375 கோடி மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டில் தற்போதைய கேரள முதல்வரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பினராயி விஜயன் பெயர் அடிபட்டது. எனவே வழக்கு 2007ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

தனது பாணியில் விசாரணையை துவங்கிய கந்தசாமி ஐபிஎஸ், பினராயி விஜயனை குற்றவாளி பட்டியலில் சேர்த்து அதிரடி காட்டினார். சில பல அரசியல் காரணங்களால் விஜயன் விடுவிக்கப்பட்டாலும், தனது முதல் வழக்கிலே கேரள சேட்டன்களை நிலை குழைய வைத்தார். இதற்கிடையில், கேரளாவின் கோட்டயத்தில் கடந்த 1992ம் ஆண்டு பிணமாக மீட்கப்பட்ட 19 வயது கன்னியாஸ்திரி வழக்கு இவர் வசம் வந்தது. 16 ஆண்டுகள் கழித்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பாதிரியார், கன்னியாஸ்திரி என இருவரையும் கைது செய்து, வழக்கை முடித்து வைத்தார் கந்தசாமி.

இந்த வழக்குகளுக்கு முன்னதாக, அதே 2007ம் ஆண்டில் கோவாவில் பிரிட்டிஷ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கை தனது ஜூனியர் அமிதாப் தாக்கூருடன் இணைந்து விசாரித்து வந்தார். பல கட்ட விசாரணைகளுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

தொடர்ந்து நடத்திய பல வழக்குகளுக்கு தனது நுண்ணறிவால் எண்ட் கார்டு போட்ட கந்தசாமி ஐ.பி.எஸ்க்கு 2010ம் ஆண்டில் பதவி உயர்வு கிடைத்தது. சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் தனது பணியை தொடர்ந்திருந்தார். அப்போது சோலி சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பையின் சிபிஐ பிரிவிற்கு மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

6 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணையை துவங்கிய கந்தசாமி ஐ.பி.எஸ் தலைமையிலான குழு, இதற்காக பல ஆவணங்களை தூசி தட்டி எடுக்க வேண்டி இருந்தது. போதாக்குறைக்கு குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன.

வழக்கை திறம்பட கையாண்ட கந்தசாமி ஐ.பி.எஸ், அமைச்சர் அமித்ஷாவை விசாரணைக்கு அழைத்தார். இதையறிந்த பாஜக தொண்டர்கள் கொதித்தனர். சிறிதும் சலனம் காட்டாத கந்தசாமி அமித்ஷாவை நேரில் ஆஜராக வைக்க வேண்டிய முயற்சிகளை தொடர்ந்தார். மேலும் வலுவான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தை நாடினார். அமித்ஷா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவு வந்தது.

கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திய கந்தசாமி, அமைச்சரை விடிய விடிய விசாரித்தார். இதற்கிடையில் தொண்டர் படை கல் எறிந்து கண்ணாடிகளை உடைத்தது. இருப்பினும், தனது விசாரணைக்கு விலக்கு கொடுக்காமல் தொடர்ந்தார். விசாரணைக்கு பின்னரான அறிக்கையை தாக்கல் செய்யும் வேளையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் ஓய்வுக்கு அனுப்பப்பட்டார்.அமித்ஷாவை கைது செய்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நாலாபுறமும் மிரட்டல்கள் எழுந்தபோதும் கூட, அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் கைது செய்த இவருக்கு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட ஊழல் கூடாரம் எம்மாத்திரம்?

ஊழல் தடுப்புத்துறையின் இயக்குனரான கந்தசாமி ஐபிஎஸ்ஸே அதிரடிக்கு அஞ்சாதவர் என்று பார்த்தால், அவரின் கீழ் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலும் அமர்க்களம்தான்.

சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி ஆகவும். குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த வித்யா ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராகவும், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராகவும் நியமனம் செய்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்திருக்கிறது.

டிஜிபி கந்தசாமி ஐபிஎஸுடன் கைகோர்க்கும் ஐபிஎஸ் உயரதிகாரிகள்
பவானீஸ்வரி, வித்யா ஜெய்ந்த் குல்கர்னி, பிரவின்குமார் அபினபு ஆகிய மூன்று உயரதிகாரிகளுமே நேர்மையான அதிகாரிகள். கண்டிப்புக்கு பெயர் பெற்றவர்கள். கடமையில் இருந்து சிறிதும் தடம் மாறாதவர்கள். சமரசம் என்ற பேச்சிற்கே இடமளிக்காதவர்கள். இப்படிபட்ட டீம்தான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தொடங்கி ஜுனியர் நிலையிலான முன்னாள் அமைச்சர்கள் வரை ஒட்டுமொத்த முந்தைய அதிமுக அமைச்சரவையையுமே டிஜிபி கந்தசாமி ஐபிஸ் தலைமையிலான ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கூண்டோடு விசாரணைக் கூண்டில் ஏற்றுவார்கள்னு அடித்துச் சொல்கிறார் அந்த மூத்த திமுக நிர்வாகி.

அவர்கள் மீது திமுக தரப்பில் இருந்து புதிதாக புகார்கள் எதுவும் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்..

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி என ஒட்டுமொத்த முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெறும். எப்படியும் ஆறு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ வழக்குகளில் தீர்ப்பு சொல்லப்பட்டு விடும்.

ஊழல் முறைகேடுகளுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் தண்டனை கிடைக்கும். அப்படிபட்ட தீர்ப்புகள் வந்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழப்பார். அவரைப் போல அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. பதவிகளையும் இழப்பார்கள். ஆறு வருடத்திற்கு தேர்தலிலேயே நிற்க முடியாது.இந்த எடத்துல கண்ணதாசன் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.ஆடிய ஆட்டமென்ன ? பேசிய வார்த்தை என்ன ?