கொடநாடு கொலை வழக்கு! புதிதாக 3 சாட்சிகள்!! 2 பேர் அப்ரூவர்!!! எடப்பாடிக்கு சிக்கல்? இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உதவிய சேலம் எடப்பாடியை சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.

மீண்டும் வேகமெடுத்துள்ள கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து போலீசார் காய் நகர்த்தி வர்றதா சொல்றாங்க.

கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை தொடர்பான வழக்கு இப்போ மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்குது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உதவிய சேலம் எடப்பாடியை சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.

இதே போல் சயான் குடும்பத்தை சேர்ந்தவர்களும் விபத்தில் உயிரிழந்தனர். இதனால் இந்த வழக்கில் ஏராளமான மர்மங்கள் உள்ளன என அப்போதிலிருந்தே மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்படும்னு சொல்லியிருந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் இதுநாள் வரை சிறையில் இருந்த கேரளாவை சேர்ந்த சயான் ஜாமீன் பெற்றார். அத்தோடு விசாரணைக்கு காவல் நிலையத்திலும் அவர் ஆஜரானார்.

அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கொடநாடு கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகளை புதியதாக சேர்த்துள்ளதாக சொல்றாங்க. அத்தோடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 2 பேர் அப்ரூவர்களாக மாற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு கொலை வழக்குதொடர்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஸ்டிங் ஆப்பரேசன் செய்து வெளியிடப்பட்டது. அதில் பேசிய சயான், இந்த கொள்ளையே எடப்பாடி பழனிசாமிக்காக நடைபெற்ற முயற்சி தான்னு பேசியிருப்பார்.

இதுக்கப்புறந்தான் இந்த வழக்கில் ஸ்டாலின் தரப்பு ஆர்வம் காட்டியது. அப்போது அதிமுக ஆட்சிங்கிறதுனால வழக்கில் யாரையும் அப்ரூவராக்க போலீசார் விரும்பலை. ஆனால் இப்போ திமுக ஆட்சிங்கிறதால இரண்டு பேர் அப்ரூவர் ஆகியுள்ளதாக சொல்றாங்க.. அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் சொல்றாங்க. இந்த வாக்குமூலம் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியை இந்த கொலை வழக்கில் சேர்ப்பதற்கான அடிப்படையாக இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அதே போல் கொடநாடு வழக்கில் போலீசார் மூன்று முக்கிய சாட்சிகளை சேர்த்துள்ளதாகவும் சொல்றாங்க. அந்த சாட்சிகளும் வழக்கில் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றஞ்சாட்ட உள்ளதாகவும் சொல்றாங்க.

இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடையவர் என தேடப்பட்டு விபத்தில் உயிரிழந்த எடப்பாடியை சேர்ந்த டிரைவர்கனகராஜ் தொடர்பான வழக்கையும், சேலம் போலீசார் இப்போ கையில் எடுத்துள்ளதாக சொல்றாங்க. அப்போதே இந்த வழக்கில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய அந்த டிரைவரின் உறவினர் ஒருவரை காவல் நிலையம் வரவழைத்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரணையும், கொடநாடு வழக்கின் விசாரணையும் ஒருங்கிணையும் போது பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று புதிர் போடுகின்றனர் போலீசார்.கொடநாடு வழக்கை ஸ்டாலின் கையிலெடுத்ததால கொதிச்சுப்போன எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரத்தை திமுக எதற்காக தற்போது கையிலெடுத்திருக்கிறதுன்னு கேள்வி எழுப்பியிருக்காரு.

அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ங்கிறது மாதிரி அதிமுகவினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்படத் தேவையில்லை. நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கொதித்துப் போன அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து, சபாநாயகர் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் வெளியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், “எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போடும் அராஜக செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. திமுக அரசின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இன்றும், நாளையும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை புறக்கணிப்பார்கள்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது. அந்த கொள்ளை முயற்சியின் போது அங்கிருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே, வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வர்றாங்க. இந்தநிலையில், கொடநாடு வழக்கில் சிலரின் ரகசிய வாக்குமூலத்தில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதே போல், இன்னும் சில அதிமுக நிர்வாகிகளின் பெயர்களையும் அதில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், உண்மையில் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர் தான். கொடநாடு குற்றவாளிகளுக்காக ஆஜரானவர் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆட்சியில், குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாகி இருக்கிறாங்க. கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டு வர்றாங்களாம்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது பெயரைச் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து வருவது திமுக தான். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொலை, கொள்ளை மற்றும் போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஆளும் திமுக அரசு ஆதரவளிப்பது ஏன்னு தெரியலை.

சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முறையாக வழக்கு முடியும் நிலையில், திமுக வேண்டுமென்றே அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து அச்சுறுத்த முயற்சிக்கிறது.அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. ஆனால், குற்றவாளிகளை காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயற்சித்ததை யாராலும் மறக்க முடியாது.இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் 3 முறை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை கையிலெடுத்து திமுக எங்கள் மீது பழி சுமத்துகிறது” என்றார் காட்டமாக.கோட்டை விட்ட எடப்பாடியார்.

4 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கை முன்பே முடித்து இருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி சிக்கல் ஏற்பட்டு இருக்காது. ஊட்டி நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் . 2 முறை  அறிவுறுத்தி இருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு முன்பாக வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் பெரிய பிரச்சனை, அழுத்தம் அதிமுக தரப்பிற்கு இருந்திருக்காது. ஆனால் வழக்கை எடப்பாடி பழனிச்சாமி விரைந்து முடிக்க நடவடிக்கை எதுவும் அப்போது எடுக்கவில்லை. இறுதிக்கட்ட விசாரணையிலேயே வழக்கு இருந்த போது ஆட்சி மாறிவிட்டது. 4 வருடத்தில் வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் திமுக அரசு மீண்டும் அந்த வழக்கை எடுத்து, நீதிமன்ற அனுமதியோடு மறு விசாரணை நடத்துவது கொஞ்சம் கஷ்டம் ஆகி இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால் திமுக அரசு இந்த வழக்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.எடப்பாடியைச் சிக்க வைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்.சிக்குவாரா எடப்பாடி ? பொறுத்திருந்து பார்ப்போம்.