“புள்ளி” வச்ச சசிகலா.. “கோலம்” போட்ட திமுக.. சொல்லி அடிச்ச தினகரன்.. விக்கித்து பார்க்கும் அதிமுக!

எப்படி ரஜினி அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆகிவிட்டாரோ, அந்த மாதிரி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்.. அதிமுகவுக்கு ஒரு பெரிய ஷாக்கை சசிகலாவின் அரசியல் விலகலின் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் எக்ஸிட் போல்கள் வெளியாகின.. அதில், பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமான கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், தென் மண்டலங்களில் யாருக்கு சாதகமான சூழல் அமைய போகிறது என்ற ஆவல் அதிகரித்தபடியே இருந்தது. இதற்கு 2 காரணம் உண்டு.. ஒன்று சசிகலா அரசியலில் இருந்து விலகியது.. மற்றொன்று, அமமுக துணிந்து களம் இறங்கியதுதான். சசிகலாவை பொறுத்தவரை 20 வருடம் ஜெ.வுடன் சேர்ந்து லாபி செய்தவர்.. அரசியல் ஞானம் தெரிந்தவர்.. அனுபவம் மிக்கவர்.. தன் சமூக வாக்குகளை அபரிமிதமாக அள்ளக்கூடிய திறன் படைத்தவர்..

இவ்வளவு சாணக்கியத்தனம் நிறைந்தவரை, விட்டுவிட வேண்டாம், இவர் மட்டும் உங்களுடன் இருந்தால் தென்மண்டலங்களை வாரிசுருட்டி கொண்டு வந்துவிடுவார், அதனால் எப்படியாவது அதிமுகவுக்குள் அழைத்து கொள்ளுங்கள் என்று பாஜக, அதிமுக தலைமையிடம் கேட்டுக் கொண்டது.. ஆனால், எடப்பாடியார் ஒப்புக் கொள்ளவில்லை.. அமமுகவை கூட்டணியிலாவது சேர்த்து கொள்ளுங்கள் என்றார்கள், அதற்கும் எடப்பாடியார் ஒப்புக் கொள்ளவில்லை.. இந்த விஷயத்தில், தினகரனே ஓரளவு இறங்கி வந்தும்கூட எடப்பாடியார் இறுதிவரை பிடிவாதம் காட்டினார்.

இப்போது நிலைமை என்னவென்றால், தென்தமிழகத்தில் 56 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்றும், அதில் பாதி அதாவது 25 இடங்களுக்கு மேல்தான் அதிமுக வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாகவும் நேற்றைய கணிப்புகள் கூறுகின்றன… இது அதிமுகவின் தோல்வி என்று எடுத்து கொள்ள முடியாது.. முழுக்க முழுக்க எடப்பாடியார்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இது அதிமுகவுக்கு பெரிய அவமானம் என்றே சொல்ல வேண்டும்.. காரணம், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தென்தமிழகம் என்பது அதிமுகவின் கோட்டையாகும்.. திமுக, அதிமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், தென் தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடமிருக்கும். ஆனால், இந்த முறை அதிமுகவை ஓவர்டேக் செய்துள்ளது திமுக.. வட தமிழகம், கொங்குவை போலவே, தென் தமிழகமும் திமுகவின் கோட்டையாக உருவெடுத்துள்ளது..!

அதேசமயம், அமமுகவும் பெரிய அளவிலான இடங்களை பெறவில்லை.. அதிமுகவின் ஓட்டுக்களை பிரித்துள்ளதில் அமமுகவின் பங்கு அதிகமாகவே இருக்கிறது.. ஆனால், சசிகலா இல்லாத வெறுமை, அதிமுகவிலும் தென்படுகிறது, அமமுகவிலும் தென்படுகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலாவின் தயவு இன்றைய தினம் அதிமுகவுக்கு தேவைப்படவே செய்கிறது.. மறைமுகமாக சசிகலாவுக்கு ஆதரவு தந்தவர்கள், இனி வெளிப்படையாகவே அவரை சந்திக்க முயற்சிக்கலாம்.. இரட்டை தலைமை விவகாரமும் சேர்ந்தே வெடிக்கலாம்.. அதன்படி, இனி காட்சிகள் மாறலாம்..காலமும் மாறலாம்..!