து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க !

து.முதல்வர் பதவி இல்லையா? முதல்வர் பதவியை மறந்துடுங்க கட்சியும் இருக்காது ரங்கசாமியை நெருக்கும் பாஜக ?

புதுச்சேரியில் 24 நாட்களுக்கு பின் எம்.எல்.ஏக்கள் மட்டும் பதவியேற்ற நிலையில் துணை முதல்வர் பதவியை பெறாமல் ஓயப் போவது இல்லை என கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்தே என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. காரைக்காலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் அடுத்து பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்றார்.இதில் கடுப்பாகிப் போன என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் பதறிப் போன பாஜக, ரங்கசாமியிடம் மன்றாடி கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதலில் என்.ஆர். ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார்.  ரங்கசாமி மருத்துவமனையிலிருந்த  போது, நியமன எம்எல்ஏக்களை மத்திய பாஜக அரசு அறிவித்ததும் என் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கே.வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம் மற்றும் ஆர்.பி. அசோக் பாபு ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெங்கடேசன் முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவர், இந்தாண்டு பிப்ரவரி மாதம், காங்கிரஸ் அரசு கவிழ இவரது ராஜினாமா முக்கிய காரணமாகும்.நியமன எம்எல்ஏக்களை தவிர சுயேச்சை எம்எல்ஏக்களையும் பாஜக தொடர்பு கொண்டுள்ளது. 6 சுயேச்சை எம்எல்ஏக்களில் மூன்று பேர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். இதையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, புதுவையில் பாஜகவின் மொத்த பலம் 12ஆக உள்ளது. இது என் ஆர் காங்கிரஸை விட 2 இடங்கள் அதிகமாகும். இதன் காரணமாகவே பாஜக துணை முதல்வர் பதவிக்குக் குறை வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இருப்பினும், கடந்த காலங்களில் புதுவையில் துணை முதல்வர் பதவி இருந்ததில்லை என்றும் மத்திய அரசு விரும்பினால் அப்படியொரு பதவியை உருவாக்கலாம் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். ஆனால் துணை முதல்வர் பதவியை தரப்போவதே இல்லை என்பதில் முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளாராம்.

கொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி. மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதாவது 24 நாட்களுக்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இந்நிலையில் துணை முதல்வர் பதவியும் 2 அமைச்சர்களும் தேவை என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அமைச்சர் பதவி தர தயாராக இருக்கும் ரங்கசாமி, துணை முதல்வர் பதவியை தரப்போவது இல்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.  ஏனெனில் இப்போதே பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் என கூடுதலாக 6 எம்.எல்.ஏக்கள் பலம் பெற்றுள்ளது. சட்டசபையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் தமது தலைமையிலான ஆட்சியை பாஜக கவிழ்த்துவிடும் என அஞ்சுகிறார் ரங்கசாமி. அதேநேரத்தில் பாஜகவோ, துணை முதல்வர் பதவியை தராமல் ரங்கசாமி இழுத்தடிப்பதை இம்மியும் ரசிக்கவில்லையாம். இதனால் செம கடுப்பில் உள்ள பாஜக, ரங்கசாமிக்கு ஒரே ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறதாம்.

அதாவது துணை முதல்வர் பதவியை எங்களுக்கு தராமல் இழுத்தடித்து கொண்டே போனால் பாஜகவே ஆட்சி அமைக்க களமிறங்கும்; என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள் எனவும் மிரட்டி விட்டிருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என தெரியாமல் ரங்கசாமி தரப்பு விழிபிதுங்குகிறதாம்.ஆனால் ரங்கசாமியோ எடுத்த எடுப்பிலேயே அதாவது ஆட்சியே அமைக்காத சூழலிலேயே பாஜக இப்படி ஆட்டம் போடுகிறதே… என்கிற அதிருப்தி. மேலும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரையும் வளைக்கவும் பாஜக பேச்சுவார்த்தையும் நடத்துகிறதே என்கிற கோபம். இதனால் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு இன்னமும் பதவியேற்காமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற அறிவிப்பு மட்டும்தான் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். ஆனால் சட்டசபை எப்போது கூடும்? புதிய எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்பது தெரியாத தள்ளாட்டத்தில் இருக்கிறது புதுச்சேரி அரசியல்.இந்த நிலையில் புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் உததரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்காத நிலையில் 3 நியமன நிர்வாகிகளை நியமிக்க எந்த அவசரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு விரோதம் பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது ஜனநாயக விரோதமானது. அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.   அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரையை வழங்கும். ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படவில்லை. எனவே 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பான உத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் ஜெகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.