பா.ஜ.வுக்கு கூஜா தூக்கும் தேர்தல் கமிஷன்

காலங்காலமாக மத்தியில் ஆளும் அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் உண்டு. அதே போன்று இப்போது தேர்தல் ஆணையம் ஆளும் பா.ஜ.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் #EC_Cheats_India என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

இந்தியா என்பது மிகப்பெரிய ஜனநாய நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது.

இவற்றில் மேற்கு வங்கம் மட்டும் 8 கட்டங்களாக நடப்பதால் இன்னும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சில ஊர்களில் நடந்த தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு அளித்தாலும் அவை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே ஓட்டு விழுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை காண முடிந்தது. மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் ஓட்டு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சுற்றுவதாக ஏற்கனவே திமுக., குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.சமீபத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகம் போன்று மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து இருப்பதுடன், தேர்தல் ஆணையம் ஆளும் மாநில அரசுக்கும், பா.ஜ.விற்கும் ஆதரவாக செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடக்கும் விதம், தேர்தல் ஆணையம் செயல்படும் விதத்தை சுட்டிக்காட்டியே டுவிட்டரில் #EC_Cheats_India என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பலரும் முன்வைத்த கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* இன்றைக்கு நாடே கொரோனா எனும் கொடி நோயால் உயிர் போகும் அளவுக்கு அல்லோலப்பட்டு கிடக்கிறது. ஆனால் மத்திய அரசும், மத்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

* நாட்டின் குடிமகனாக தேர்தல் ஆணையத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது.

* உலகம் மருத்துவமனைகளில் படுக்கைகளை தயார் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா மட்டும் சட்டசபையில் சீட் தயார் செய்து கொண்டிருக்கிறது.

* தேர்தல் ஆணையத்தின் தோல்வி இந்திய ஜனநாயகத்திற்கும், இந்தியாவிற்கும் தீங்கு விளைவிக்கும்.

* மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேர்தல் விதிமுறைகளை முற்றிலும் மீறி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது.

* தேர்தல் இயந்திரத்தில் பல முரண்பாடுகள் பதிவாகி உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இதுப்பற்றி ஏன் வெளிப்படையான பதில்களை வழங்க மறுக்கிறது. இதற்கு பின்னால் என்ன தான் நடக்கிறது. தயவு செய்து உண்மையை கூறுங்கள் இந்திய தேர்தல் ஆணையமே.

* பா.ஜ.விடம் நிறைய படம் உள்ளது. தேர்தல் காலங்களில் அவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையத்திற்கும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். அவ்வளவு தேசபக்தி கட்சி.

* மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்படுவதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் அதன் தனித்தன்மையையும், நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது. மற்ற கட்சியினரிடம் கடுமையாக நடந்து கொள்ளும் தேர்தல் ஆணையம், பா.ஜ. மீது மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது. ஓட்டுபதிவின் போது விதிமீறல் ஈவிஎம்., இயந்திரத்தின் பாதுகாப்பாற்ற சூழல் எல்லாவற்றையும் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது தேர்தல் ஆணையம்.

* பா.ஜ.வின் அங்கமாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 3, 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது, நடத்தப்படுகிறது.

* கொரோனா பிரச்னையால் நாடு பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. தேர்தலை விரைந்து முடிக்காமல் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு உதவுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது தேர்தல் ஆணையம்.

* ஈ.வி.எம் தொடர்பான பல கேள்வி எழுகின்றன. ஆனால் அவை எவற்றுக்கும் சரியான பதில்கள் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது.

* பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை தன்னைத்தானே அழிக்க உதவுகிறது தேர்தல் ஆணையம்.

* பா.ஜ.வுக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தேர்தல் ஆணையம் அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதோடு பா.ஜ.விற்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்த பல்வேறு மீம்ஸ்களும், கார்ட்டூன்களும் இந்த ஹேஷ்டாக்கில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன