தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்… ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது?

தூங்கும் அதிமுக ஊழல் ஃபைல்கள்… ஸ்டாலின் சைலண்ட்- என்ன நடக்கிறது?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வி எழுது.கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெற்றது. இதையொட்டி ஆட்சிக்கு வந்தவுடன் கந்தசாமி ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.

இவருக்கு குஜராத்தில் அமித் ஷாவை கைது செய்து அதிரடி காட்டிய பின்புலம் உண்டு. சிபிஐ-ல் பல ஆண்டுகள் பணி புரிந்தவர். துணிச்சலாக செயல்படக் கூடியவர். இதனால் தமிழ்நாட்டில் இவரது அதிரடிகள் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுக மாஜிக்கள் ஒவ்வொருவராக குறி வைக்கப்பட்டனர்.திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோவை சென்று மிக அதிகமாக வறுத்தெடுத்தது வேலுமணியைத் தான்! ”எல்.இ.டி பல்ப் தொடங்கி பினாயில் வரை ஒவ்வொரு அயிட்டத்திற்கும் பல மடங்கு கூடுதல் விலை வைத்து உள்ளாட்சித் துறையை சூறையாடிய வேலுமணியை நாங்க ஆட்சிக்கு வந்தால் உள்ளே தள்ளுவோம். இது உறுதி” என்றார். உள்ளாட்சித் துறையில் உச்சகட்ட ஊழலில் திளைத்த வேலுமணி தற்போது வெள்ளையும், சொள்ளையுமாக நடமாடிக் கொண்டுள்ளார்.சென்ற ஆட்சியில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பல அடுக்கு குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் உதிர்ந்து விழும் நிலைமையில் கட்டப்பட்டது அம்பலமானது! இந்தக் கட்டுமானம் படுமோசமாக கட்டப்பட்டுள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு அறிக்கை சமர்பித்தது! இதில் சம்பந்தப்பட்ட ஒ.பி.எஸ் மீது இது மட்டுமின்றி, ஆயிரம் கோடியை விஞ்சும் மிக ஆதாரமான பல ஊழல் புகார்கள் சி.எம்.டி.ஏ வில் செய்தது தெரிய வந்தவுடன் சைலண்ட் மூடுக்கு போய்விட்டது திமுக அரசு! இன்று வரை இதில் யாரும் தண்டிக்கபடவில்லை.அதே போல மின்சாரத்துறைக்கே ஷாக் கொடுக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக கொள்ளையடித்துவிட்டு அத் துறையை சுமார் ஒன்றரை லட்சம் கோடி நஷ்டத்தில் தள்ளிய தங்கமணியும் தற்போது தகதகவென்று வலம் வந்து கொண்டுள்ளார். பால்வளத் துறையில் பகல் கொள்ளை அடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சரியாக வழக்கு பதியாமல் தப்பவைத்தது இந்த ஆட்சி!
கொடநாடு கொள்ளையில் அனைத்தும் தெரிய வந்துவிட்ட நிலையிலும், அதில் தெளிவான நிலைப்பாடு எடுத்து உண்மையான குற்றவாளியான எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கை திசை திருப்பி, குழப்பி பம்முகிறது திமுக ஆட்சி!

சென்ற ஆட்சியில் ஊழலில் கொடி கட்டிப் பறந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி தந்து போக்குவரத்து துறையில் நடந்த ஊழலில் அவரைக் கைதில் இருந்து தப்ப வைத்ததோடு, தற்போது டாஸ்மாக்கிலும், மின்சாரத் துறையிலும் அளவற்ற சூறையாடல்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது!அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், குமரவேல்பாண்டியன் ஐ.ஏ.எஸ், விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்டவர்கள் மீது இன்று வரை ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்பதை திமுக அரசாங்கம் விளக்க வேண்டும். மேலும் இந்த அதிகாரிகள் எல்லாம் தற்போது மிகவும் பாதுகாப்பாக, நல்ல துறைகள் தந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் சிகரமாக சுற்றுச் சூழல் சீரழிவை தாங்க முடியாமல் நீதி கேட்டு ஊர்வலம் வந்த அப்பாவிகள் 13 பேர் கொல்லப்பட்ட தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறல் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை சென்ற ஆண்டு மே 18 ந்தேதி முதல்வரிடம் தரப்பட்டது. ஆனால், அதை மூன்று மாதங்களாக வெளியிடாமல் தாமதப்படுத்தியதோடு மக்களை குருவியைப் போல சுட்டுக் கொன்ற கொடூர போலீஸ் அதிகாரிகள் மீதோ, மாவட்ட அட்சியர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக அரசு!
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன் முதல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் வரை பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக எப்போது கைது செய்யப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஒட்டுமொத்த அசைன்மென்டும் சைலைண்ட் மோடிற்கு சென்றது.​

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றமே இருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் ஏன் விரைவாக விசாரிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சீராய்வு கூட்டங்களை நடத்தினாரா? ஆட்சி அமைந்து 20 மாதங்களை கடந்துவிட்டது. ஊழல் புகார்களை விசாரிக்க இவ்வளவு நாட்கள் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை எனக் கூற முடியாது. நீங்கள் முதல் தகவல் அறிக்கையை படித்தாலே போதும். அவர்கள் சில முறைகேடுகளில் ஈடுபட்டதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இதை முக்கியமான விஷயமாக எடுத்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தால் தான் விசாரித்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும்.

அப்போது தான் பிரதான எதிரியான அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்தது போன்ற நிலை உருவாகும். இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரிக்கையில் 2026 வரை கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புகள் இல்லை எனக் கூறுகிறார்களாம். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மீதும் ஊழல் புகார்கள் இருக்கின்றன.

ஆனால் அவர்கள் அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடிய இடங்களில் இருக்கிறார்கள். முதல்வர் ரெய்டு விட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை தானாக நடவடிக்கைகளில் வேகம் காட்டப் போகிறது. அப்படி ஒரு சூழலே இங்கு இல்லை. இவையெல்லாம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

அடுத்த சில மாதங்களில் கந்தசாமி ஐபிஎஸ் ஓய்வு பெற்றுவிடுவார். அதன்பிறகு புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். உடனே பழைய ஃபைல்களை தூசு தட்டி என்னாச்சு? என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என தீவிரமாக ஆலோசிப்பர். முதல்வரிடம் சில ரிப்போர்ட்டும் சமர்பிக்கப்படும். அதன்பிறகு வழக்கம் போல் டேபிளில் தூங்கும் ஃபைல்களாக மாறிவிடும்