மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா

 வரப்போகும் மாநகராட்சி தேர்தலில் கோவையில் வெற்றி பெறுவது திமுகவா ? அல்லது அதிமுகவா ? என்ற நிலைமை மாறி, செந்தில் பாலாஜியா ? அல்லது வேலுமணியா ? ங்கிற எதிர்பார்ப்பு கோவையில் ஏற்பட்டுள்ளது.

வரப்போகின்ற மாநகராட்சி தேர்தலுக்கு தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத எதிர்பார்ப்பு கோவையில் ஏற்பட்டுள்ளதுக்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், இன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மோதிக்கொள்வதுதான் கோவையின் தற்போதைய ‘ஹாட்’ டாபிக். எஸ்.பி  வேலுமணியின் கோட்டையான கோவையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வேலை படு ஸ்பீடா நடந்துக்கிட்டு வருது.

கோவை நகரைச் சுற்றிலும் உள்ள பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மேம்பாலம்,தெருக்கள்,கடை வீதி என எல்லா இடங்களிலும் போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் என செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஒட்டி ‘அண்ணனின்’ செல்வாக்கை பாருங்கள் என்கிறார்கள். இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்த போது, ‘முதல்வர் மு.க ஸ்டாலின் செந்தில் பாலாஜியை தேவையில்லாமல், கோவையின்  பொறுப்பாளராக நியமிக்கவில்லை. அமைச்சர்கள் முத்துசாமி,எ.வ வேலு, ஐ.பெரியசாமி என சீனியர்கள் இருக்க செந்தில் பாலாஜிக்கு கொடுத்த காரணத்தை விவரிக்க தொடங்கினார்கள்.பாலாஜி திமுகவிற்கு வந்ததில் இருந்தே, திமுக தலைமைக்கு என்ன செய்ய வேண்டும் என்று கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு, மு.க ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்றுவிட்டார். குறிப்பாக துர்கா ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின்,ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகிய ‘முக்கிய’ மூன்று பேரின் குட் புக்கிலும் இடம்பிடித்து வைத்ததே இதற்கு காரணம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் ‘கரூர்’ மாவட்டத்தில் பெற்ற பெரும் வெற்றியும் செந்தில் பாலாஜியை ‘குட்புக்கில்’ இடம் பெற செய்தது. எனவே தான் கொங்கு மண்டலத்தை கவனிக்கும் பொறுப்பு அவர்ட்ட கொடுக்கப்பட்டதாம்.

அதிமுகவின் முக்கிய ‘புள்ளி’யான எஸ்.பி வேலுமணியை தோற்கடிக்க இவர் தான் சரியான ஆளுன்னு’ முதல்வர் தரப்பில் ‘செந்தில் பாலாஜி’ பெயர் டிக் அடிக்கப்பட்டது’ ன்னு சொல்றாங்க
. அதிமுகவில் ஒன்றியம்,கிளை,வார்டு என எவ்வளவு பேரை இழுக்க முடியுமோ, இழுங்கள் என்று தன் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம் செந்தில் பாலாஜி.கடந்த 22ம் தேதி முதல்வர் கோவையில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாரு.இந்த பணியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பணிகள் முழுவீச்சில் நடைபெற்று . கோவை மாவட்டத்தில் இதுவரை யாரும் நடத்திராத வகையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வரவைத்து ‘மாஸ்’ காட்டியிருந்தார்.

பணமும் தாராளமாக இறக்க சொல்லி அன்பு கட்டளையிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஆரம்பத்தில் கோவையில் எஸ்.பி வேலுமணியை எதிர்த்து எதையும் செய்ய முடியாதுன்னு எச்சரித்த திமுகவினரே, பாராட்டும் வகையில் இருக்கிறது அவரது செயல்பாடு. யார் யார் வேட்பாளர்கள், யாருக்கு எந்த பொறுப்பு, வேலுமணியின் ஆதரவாளர்களை கட்சிக்குள் இழுப்பதுன்னு பல்வேறு அசைன்மெண்ட்களை எப்போதோ செந்தில் பாலாஜி செய்ய ஆரம்பிச்சிட்டாரு.நிச்சயம் கோவை மாநகராட்சி திமுகவிற்கு தான்னு சொல்லிகிட்டே அசால்ட்டாக வேலை செஞ்சுகிட்டு வர்றாங்க. இது இப்படியிருக்க, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியோ சத்தமே இல்லாமல், படு சைலண்டாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுத்து வர்றாராம்.

செந்தில் பாலாஜியை எதிர்த்து வேலுமணி  தரப்பு என்ன செய்றாங்கன்னு விசாரிச்சா. ‘ஊர் முழுக்க போஸ்டர்,ப்ளெக்ஸ் பேனர் என எது வைத்தாலும் செந்தில் பாலாஜியால் வேலுமணியை எதிர்த்து ஒன்றும் செய்துவிட முடியாது. நன்றி தெரிவிப்பு விழா, நலத்திட்டங்கள் தொடங்கி வைத்தல்  என அண்ணன் வேலுமணி சைலண்டாக எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்’ன்னு சொல்றாங்க.. ஏற்கனவே வந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை ஒருபக்கம் எஸ்.பி வேலுமணிக்கு வேதனையை தந்தாலும், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

வெற்றி பெற வைத்ததுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் வேலுமணி.மேம்போக்காக பார்த்தால் இது தேவையா என்று தான் ஆளுங்கட்சி திமுக நினைக்கும். ஆனால் தன்னுடைய ஆதரவாளர்கள்,கட்சியின் சீனியர்கள், மாற்று கட்சியினர் என அனைவரிடத்திலும் மாநகராட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி சொல்லி வருகிறார்.அதோடு நிக்காமல் யார் யாரை எப்படி கவனிக்க வேண்டுமோ, கவனித்துவிட்டு தான் செல்கிறார். மீண்டும் கோவை வேலுமணியின் ‘கோட்டை’ என்று நிரூபணம் ஆகும்.

அதுமட்டுமில்லாமல் தற்போது வெள்ள நிவாரண பணிகளை தமிழகம் முழுவதும் பார்வையிட்ட முன்னாள் முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அணைத்து இடங்களிலும் கொடுத்த வரவேற்பால் உற்சாகம் அடைந்து இருக்கிறார். கோவையை மீண்டும் கைக்குள் வைக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமியிடம் பேச, கோவையில் எடப்பாடி மேற்கொள்ளும் சுற்றுப்பயண திட்டத்தை கையோடு முடித்து விட்டார்.விரைவில் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு முன்பாகவே பிரச்சாரம் மேற்கொள்வார்’னு சொல்றாங்க ரத்தத்தின் ரத்தங்கள் . இதுக்கிடைல கமல்ஹாசன் ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம் அதாவது இரண்டு பேரும் பெரிய அரசியல்வாதிகள்.அதிகாரம், பணம் என எல்லா விதத்திலும் இந்த இருவர்களுக்கும், கடுமையான போட்டி கொடுக்கும் வகையில் ஒரு வேட்பாளராக நிறுத்தணும்னு முடிவு செய்து இருக்கிறார் கமல் ஹாசன்.மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் குறிப்பிட்ட 10 மாநகராட்சிகளில் மட்டும் தேர்ந்தெடுத்து போட்டியிடலாம் என்று முடிவு செஞ்சிருக்கிறாருன்னுசொல்றாங்க. குறிப்பாக கமல் தோற்ற கோவையில் எப்படியாவது முழு பலத்தை காட்டணும் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு சென்ற முக்கிய தலைவர்களில் ஒருவரான, மகேந்திரனை தோற்கடிக்கணும்..அதாவது, அவர் சேர்ந்து இருக்கும் திமுகவை கண்டிப்பாக தோற்கடிக்கணும். அதிமுகவை சேர்ந்தவர்  கோவை மேயராக பொறுப்பேற்றாலும் பரவாயில்லை,ஆனால் திமுக கோவையில் வெல்லக் கூடாதுன்னு நடிகர் கமல் ஹாசன் முடிவு செய்துள்ளாராம். திமுக சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பாக எஸ்.பி வேலுமணி என பெருந்தலைகள் மோதிக் கொள்கின்றனர். இதையெல்லாம் அலசிப்பார்த்த கமல் ஹாசன், கோவையை சேர்ந்த கல்லூரி அதிபர் அனுஷா ரவி என்பவரை கோவை மேயர் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இவர் யாருன்னா நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்   திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.செந்தில் பாலாஜி,எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக களத்தில் நின்று, செலவு செய்ய இவர் சரியாக இருப்பாருன்னுதான் கமல் ஹாசன் இவர் பெயரை டிக் அடித்து வைச்சிருக்கிறாருன்னு சொல்றாங்க. நாளுக்கு நாள் கோவை மாவட்ட அரசியல் களத்தில்  பல்வேறு ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது.

ஒருவர் அதிமுகவில் இருப்பவர்.மற்றொருவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றவர்.முன்னாள் அமைச்சரும்,இன்னாள் அமைச்சரும் போட்டிபோட்டு கொண்டு வேலை செய்வதால், நிச்சயம் இந்த முறை விட்டமின் ‘ப’விற்கு குறைவே இருக்காது என்றே சொல்லலாம்.மாநகராட்சி தேர்தலுக்கு இப்போதே சூடுபிடித்துள்ள கோவையை, யார் கைப்பற்றுவார் என்று கோவை மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.இதில் யார் ஜெயிப்பார்கள், தன்னுடைய முழு வலிமையை காட்டும் ‘எஸ்.பி வேலுமணியா’ ? இல்லை பீஸ்ட் வேகத்தில் செல்லும் ‘செந்தில் பாலாஜியா’ ?யார் கோவையை கைப்பற்றுவார் என்று பார்ப்போம்.

அதுவரை காத்திருப்போம்…. நாமும்