கிணத்துக்கடவு தொகுதியில் நேற்று முன்தினம், தி.மு.க., வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பிரசாரம் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி. அப்போது அவர் ஆ.ராசாவின் ஆபாச பேச்சை, ‘ஓவர்டேக்’ செய்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிட்டு, ‘ஒருவர் அம்மாவாம்; இன்னொருத்தர் அப்பாவாம்… இது என்ன உறவு?’ என, தயாநிதி கேட்டார்.
இந்த பேச்சு, அ.தி.மு.க., மட்டுமின்றி பாரதிய ஜனதா வட்டாரத்திலும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிரசார வேகத்தில் ஒரு, ‘ப்ளோவில்’ பேசி விட்டார் என இதை கடந்து போகவும் வழி இல்லை. ஏனென்றால், ‘இந்த கருத்தை நான் சொன்னால் குய்யோ முறையோ என கூச்சல் போடுவார்கள். ஆனால் இதை சொன்னவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி’ என, நிதானமாக சொன்னார் தயாநிதி. எனவே, தான் சொல்லப்போகும் கருத்து எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை முழுவதுமாக உணர்ந்தே அவர் பேசினார் என்பது தெளிவாகிறது.
‘தயாநிதி சொல்வது போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இரு தலைவர்களையும் இணைத்து கருத்து சொல்லவில்லை. ஜெயலலிதாவை தாய் போன்றவர் என்றும், மோடியை தந்தைக்கு நிகரானவர் என்றும் மரியாதையில் தான் குறிப்பிட்டார். தயாநிதிதான் விஷமத்தனமாக, இரு பெரும் தலைவர்களின் பெயர்களையும், தப்பான அர்த்தத்தில் இணைத்து பேசி தாய், தந்தை ஆகிய புனிதமான உறவுகளை கொச்சைப்படுத்தி விட்டார். கருணாநிதியில் தொடங்கி அவரது குடும்பம் மொத்தமும் பெண்களை எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை’ என, ஒரு சீனியர் அமைச்சர் கொதிப்புடன் குறிப்பிட்டார்.
தி.மு.க.,விலும், தயாநிதியின் பேச்சு அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. தி.மு.க., ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு வேட்டு வைப்பது போல், தி.மு.க., தலைவர்களே பேசி வருவதை கண்டு, ஸ்டாலினும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.