அ.ம.மு.க.,வுக்கு தலைமை ஏற்பு? சசிகலாவின் ‘சைலன்ஸ்’ பின்னணி

‘சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது’ என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அதிரடியாக தெரிவித்த பின், சசிகலா ஒரு வாரமாக, ‘வீடியோ, ஆடியோ’ வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.

சமீபத்தில், டில்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., சந்தித்து பேசினர். அப்போது, ஓ.பி.எஸ்.,சிடம், ‘சசிகலா மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்படுவாரா?’ என்ற கேள்விக்கு, ‘சசிகலாவால் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது’ என, அதிரடியாக தெரிவித்தார்.
சசிகலாவுக்கு திரைமறைவில் ஆதரவு அளித்து வந்ததாக கூறப்பட்ட ஓ.பி.எஸ்., டில்லி பயணத்திற்கு பின், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது, சசி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், அவர் ஒரு வாரமாக, ஆடியோ, வீடியோவில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., திரும்பியதற்கு கைமாறாக, மத்திய அமைச்சரவையில், அவரது மகன் ரவீந்திரநாத்திற்கு பதவி வழங்க, பா.ஜ., மேலிடத்திடம் இ.பி.எஸ்., பரிந்துரை செய்துள்ளார் என, கூறப்படுகிறது.இதையடுத்து, ‘அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவி தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு பாதகமாக தீர்ப்பு வருமானால், அவர் அ.தி.மு.க.,வை கைப்பற்றும் முடிவை கைவிட வேண்டும்.அதற்கு பதிலாக, அ.ம.மு.க., தலைவராக பொறுப்பேற்க வேண்டும்’ என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:’சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க முடியாது’ என, ஓ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். பா.ஜ., மேலிடம் பச்சைக்கொடி காட்டியதால் தான், இந்த முடிவை அவர் அறிவித்து உள்ளார். எனவே, இனிமேல் அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கும் கோஷத்தையும், திட்டத்தையும், சசிகலா கைவிட வேண்டும். அதற்கு பதிலாக, அ.ம.மு.க.,வுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும்.கொரோனா ஊரடங்கு முடிந்ததும், சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டால், அவரை வரவேற்க அ.தி.மு.க., தொண்டர்கள் வரப் போவதில்லை. அ.ம.மு.க.,வினர் தான் வருவர். எனவே, சுற்றுப்பயணத்திற்கு முன்,
அவர் அ.ம.மு.க., தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-