அம்மாவின் ஆசி பெற்ற அண்ணாமலை” !

தமிழகத்தில் எதிர்வரும் சட்ட சபை தேர்தலில் அதிமுக  கூட்டணியில்  பாஜக  போட்டியிடுகிறது. முன்னதாக 40 தொகுதிகள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்த பாஜகவுக்கு இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் 20 தொகுதிகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இதில் கர்நாடகாவில் டிஸ்பியாக இருந்து பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக பொறுத்தவரையில் அதிமுக – திமுக இரு திராவிட கட்சிகளையுமே ஒன்றாகத்தான் பார்ப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

ஆனால்,அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் திமுகவை ஒற்றை எதிரியாக பாஜக வேட்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசிய கட்சியை மாநிலத்தில் நிறுவி தமிழகத்திலும் பாஜக கொடியை தலைமை செயலகத்தில் பறக்க விடும் இலக்கைத்தான் பாஜக கொண்டுள்ளது. அதிமுகவுக்கு அது தெரிந்தும் கூட்டணியை காக்க பொறுமையாக உள்ளது.

அப்படி இல்லையென்றால், ஜெயலலிதாவின் அனைத்து தகுதிகளும் அண்ணாமலையிடம் இருப்பதாக நடிகை நமீதா பிரச்சாரம் செய்ததற்கு எந்த எதிர்ப்பையும் அதிமுக காட்டவில்லை. இருப்பினும், தமிழக மக்கள் பாஜகவினரின் நகர்வுகளை கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.இந்நிலையில், அரவக்குறியில் போட்டியிடும் பாஜக அண்ணாமலையை ஆதரித்து சுவர் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அந்த விளம்பரத்தில், ”மோடியின் ஆசி பெற்ற அண்ணாமலை” என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், உள்ளூர் மக்களின் எதிர்ப்பை கருத்தில்கொண்டும், அதிமுகவினரின் ஓட்டுக்கூட கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் மோடி என்பதை அழித்து, ” அம்மாவின் ஆசி பெற்ற” என்று திரும்ப எழுதப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.