லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. எவ்வளவு இடங்கள்? India TV கருத்துக்கணிப்பு இப்போது நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனறு இந்தியா டிவி -சிஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது. இந்த கணிப்புகளின் படி லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கட்சி கூட்டணியான இந்தியாவை விட அதிக இடங்களில் முன்னணியில் இருக்கும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டது. மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கணிப்புகளை இந்தியா டிவி இன்று வெளியிட்டு வருகிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 144 லோக்சபா தொகுதிகளை கைப்பற்று என்றும் இந்தியக் கூட்டணி 85 இடங்களை வெல்லும் என்றும் பிற கட்சிகள் 36 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பில் இந்தியா டிவி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 21 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறலாம், மீதமுள்ள நான்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் (மொத்தம் 29 இடங்கள்), தேசிய 24 லோக்சபா தொகுதிகளிலும், மீதமுள்ள 5 இடங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குக் கிடைக்கலாம் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் (மொத்தம் 39), திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணி 30 லோக்சபா தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி ஒன்பது இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களிலும், ராஷ்டரிய ஜனதா தாளம் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 16 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறலாம் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில், ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 லோக்சபா தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 7 இடங்களைப் பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 லோக்சபா தொகுதிகளில் ஒன்பது இடங்களில், சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி பெறும் என்றும் , தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 6 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கலாம் என்றும் இந்தியா டிவி -சிஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் தேசிய தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் தொகுதிப் பங்கீட்டில் இறங்கினால், ஐந்து இடங்கள் பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும், அதே நேரத்தில் இந்தியா கூட்டணி மீதமுள்ள இரண்டு இடங்களை வெல்லக்கூடுமாம். ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில், ஆம் ஆத்மி காங்கிரஸுடன் சீட் பங்கீட்டில் நுழைந்தால், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 13 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பு இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கில், மொத்தமுள்ள ஆறு லோக்சபா தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று இடங்களிலும், இந்தியா கூட்டணி இரண்டு இடத்திலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தையும் வெல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் (மொத்தம் 4 இடங்கள்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம். ஹரியானாவில் மொத்தமுள்ள 10 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 8 இடங்களையும், இந்தியா கூட்டணி 2 இடங்களையும் வெல்லலாம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளும் ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 13 இடங்களையும், இந்தியக் கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில், மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் 7ல் NDA வெற்றிபெறலாம் என்றும் மீதமுள்ள நான்கு இந்தியா கூட்டணி வெல்ல வாய்ப்பபு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், அசாமில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 12 இடங்களையும், இந்திய கூட்டணி மற்றும் மற்ற கட்சி (AIUDF) தலா ஒரு இடத்தையும் வெல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், இரண்டு லோக்சபா தொகுதிகளையும் இந்தியாக் கூட்டணி வெல்லலாம். அதேநேரம் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், திரிபுரா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மற்ற வடகிழக்கு மாநிலாங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லக்கூடும் என்றும் கணித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் எப்படி இருக்கும்: மணிப்பூர்: தேசிய ஜனநாயக கூட்டணி 0, இந்தியா 2, அசாம்: தேசிய ஜனநாயக கூட்டணி 12, இந்தியா 1, மற்றவை 1, மிசோரம்: எம்என்எப் -1, மேகாலயா: என்பிபி 1, யுடிஎபி 1, நாகாலாந்து: என்டிபிபி 1, அருணாச்சல பிரதேசம்: பாஜக 2, திரிபுரா: பாஜக 2, சிக்கிம்: எஸ்கேஎம் 1. நேற்று மொத்தம் 265 இடங்களுக்கான கணிப்பினை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கர்நாடகா மேற்கு வங்கம், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்பட மற்ற மாநிலங்களில் 278 இடங்களுக்கான கணிப்புகளை இன்று இந்தியா டிவி வெளியிட்டு வருகிறது.
தற்போது வரை 534 தொகுதியில் 411 இடங்களுக்கான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 228 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 146 இடங்களிலும் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் 36 இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. “இந்தியா”வுக்கு நோ.. 2024 தேர்தலிலும் மோடிக்கு கை கொடுக்கும் குஜராத்.. கருத்துக் கணிப்பில் தகவல் இன்று வெளியிட்ட கணிப்பில் குஜராத் மாநிலத்தில் 26 இடங்களிலும் பாஜகவே வெல்லும் என்றும், கர்நாடகாவில் 20 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக 12 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டிவி -சிஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள தொகுதிகளுக்கான கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இன்று இரவுக்குள் முழு நிலவரத்தையும் இந்தியா டிவி வெளியிட்டு விடும்.