அதிமுகவைத் துரத்தும் பாஜக ?

அதிமுகவைத் துரத்தும் பாஜக ? நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக ஜெயிக்கணும்னா அதிமுகவுடன் கூட்டணி வச்சே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்குது.

சசிகலாவை மையமாகக் கொண்டு அதிமுகவிற்குள் ஒரு புயல் உருவாகியிருக்குது இது எல்லாருக்கும் தெரியும்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமாக வாக்கு அறுவடை செய்யணும் அதற்கேற்ப பாஜக வியூகங்களை வகுத்து வருது.இதுவரை தோள் கொடுத்து வருகிற அதிமுகவுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்து பலமேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுது.
சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகத்தான் இருக்கும்ங்கிற கருத்து அதிமுகவுக்குள் இருக்குது.மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் மீதமிருக்கும் ஒருசில இடங்களிலும் தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிடணும்ங்கிற வெறியோட திட்டமிட்டு அதற்கேற்பக் காய் நகர்த்திவருது பாஜக. கோவா தொடங்கி கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் எம்.எல்.ஏ.க்களைக் கொள்முதல் செய்து அந்தக் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. திரிபுராவில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை மொத்தமாக அமுக்கி, அதிகாரப் பசியைத் தீர்த்துக்கொண்டது.

இப்படி நாடு முழுவதிலும் பல்லாங்குழி ஆடிவரும் பாஜகவின் பாச்சா பலிக்காத ஒருசில இடங்களில் தமிழகமும் ஒன்று. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பாஜக, பல்வேறு செப்படி வித்தைகளை அரங்கேற்றியும் தமிழக மக்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தலிலும் அந்தக் கட்சிக்குத் தோல்வியே கிட்டியது.

இந்தநிலையில் எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமாக வாக்கு அறுவடை செஞ்சிடணும்ங்கிறதுல குறியாக இருக்கும் பாஜக, அதற்கேற்ப வியூகங்களை வகுத்துச் செயலாற்றிவருகிறது. அரசியல் வெற்றிக்குக் கூட்டணி பலம் மிகவும் அவசியம் என்பது அந்தக் கட்சிக்கு நல்லாவே தெரியும். இதன் காரணமாக, தங்களை தூக்கிச் சுமக்கும் அதிமுக பலமுடன் இருக்க வேண்டும் என பாஜக நினைப்பதில் தவறில்லை. தானே இந்த அடிப்படையிலேயே பிரிந்துகிடந்த பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிச்சாமியையும் பாஜக சேர்த்து வைத்தது. அதுவும் அன்றைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில.

பாஜக போடும் யதார்த்தக் கணக்கு

இந்தப் பழைய கதையெல்லாம் இப்போது எதுக்குங்கிறீங்களா? காரணம் இருக்குது. தமிழகத்தில் தாமரை வெற்றிகரமாக மலர்ந்துவிட்டதாகக் காவி பரிவாரங்கள் மீடியாக்களில் பொளந்துகட்டினாலும் உண்மை நிலவரம் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். தப்பித் தவறித் தனித்துப் போட்டியிட்டால் குமரி மற்றும் கொங்கு மண்டலத்தின் ஒருசில மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மண்ணைத் தான் கவ்வணும்ங்கிற நிலையில்தான் அந்தக் கட்சி இருக்குது. அதனால தோள் கொடுக்கும் அதிமுகவுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்து பலமேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாகக் சொல்லப்படுது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியிடம் பேசும்போது, அவர் என்ன சொல்றாருன்னா ?“வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறணும்ங்கிறதுல எங்கள் கட்சித் தலைமை தீவிரமாக இருக்குது. குறைஞ்சது 10 எம்.பி.க்களையாவது ஜெயிக்க வச்சிடணும்ங்கிறதுல உறுதியாக இருக்கிறோம். பலவீனமான அதிமுகவால் இதற்கு உதவ முடியாது. அதனால நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறிக் கிடக்கும் அந்தக் கட்சியினரை ஒன்றுபடுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருது. இதன் அடிப்படையிலேயே தமிழகத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவிச்சிருந்தாரு. ஆனால் அதை வேறு மாதிரி சிலர் திசைதிருப்பிவிட்டனர். எனவே வேறு வழியின்றி அண்ணாமலை அதற்கு விளக்கமளிக்க வேண்டியதாயிடுச்சி” என்று சொன்னவர் சசிகலா விஷயத்தில் கட்சியின் அணுகுமுறையையும் விளக்கினார்.

பாஜகவைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். இதற்காக யாருடன் சேரவும், யாரிடமிருந்து விலகவும் தயங்காது. நாடு முழுவதும் இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். தற்போதைய சூழலில் ஆட்சி அதிகாரத்தை இழந்து அதிமுக பலவீனமான நிலையில் உள்ளது. இதனால் சசிகலாவும் அந்தக் கட்சியும் இணைவதுதான் சிறந்ததாக இருக்கும். இதற்காக எங்கள் கட்சி சார்பில் சில ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருது. அதிமுகவின் பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இதற்குப் பச்சைக்கொடி காட்டினாலும் சி.வி சண்முகம், ஜெயக்குமார், வேலுமணி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சு கிட்டே தான் வர்றாங்க.. இன்னும் காலம் இருக்குது. எதிர்ப்பாளர்களை எப்படி சாமளிப்பதுங்கிற வித்தை எங்களுக்குத் நல்லாவே தெரியும்ங்கிறாரு அவர்.

அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்குது.

பாஜகவின் இந்த அதிரடி வியூகம் பற்றிய தகவல்களால் அதிமுகவிற்குள் பெரும் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. “மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமா? சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நாங்கள் பட்ட பாடுகளை மறக்க முடியுமா? இந்த நிலையில் மீண்டும் சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகத்தான் இருக்கும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுபான்மையினர் வாக்குகளை மீண்டும் பெற பாஜக கூட்டணியை முறித்துக்கொள்ளணும்ம்ங்கிற குரல் கட்சிக்குள் வலுத்துவருது. இந்தநிலையில் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?ன்னுஒரு தரப்பினர் சீறுகின்றனர்.

அதேநேரம் எதார்த்த நிலைமைகளை அறிந்த மற்றொரு தரப்பினரோ, “சர்வ பலத்துடன் மத்தியில் ஆட்சிபுரியும் கட்சி பாஜக. அதனால அவங்க சொல்றதை எடுத்த எடுப்பிலேயே தட்டிக் கழிக்க முடியாது. சசிகலா விஷயத்தில் டெல்லி சொல்வதைக் கேட்டாக வேண்டிய நிலைதான் ஏற்படும்ங்கிறாங்க.ஆக மொத்தத்தில் சசிகலாவை மையமாகக் கொண்டு அதிமுகவிற்குள் ஒரு புயல் உருவாகியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். இந்தப் புயலால் யாருக்கு எவ்வளவு பாதிப்பு என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.