டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்?

அவருக்காக லாபி பண்ணாதீங்க.. கடுகடுத்த சசிகலா! வேறு வழியே இல்ல.. டிடிவிக்கு டெல்லி வைக்கும் செக்?

சசிகலா.. டிடிவி தினகரன் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. அப்போது இரட்டை இல்லை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் உள்ளது.

டிடிவி தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைதும் செய்தனர். பல்வேறு மோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் என்பவர்தான் இதற்கு புரோக்கர் பணிகளை செய்து, டிடிவியை ஏமாற்றியதாகவும் புகார் உள்ளது.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் ஏப்ரல் 8-ஆம் தேதி ஆஜராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.டிடிவி தினகரன் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்கு உள்ளது. முன்னதாக விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற சட்ட ஆலோசனைகளை கேட்டு வந்தாராம் தினகரன். ஆனால் அவரது வழக்கறிஞர்களோ, முதல் முறை என்பதால் ஆஜராகி விடுங்கள். அதன் பிறகு ஆஜராவதில் விலக்கு பெறலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்களாம். இதனால் கண்டிப்பாக அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரனும்.. நானே இந்த விஷயத்தை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன். சம்மன் வந்தால் ஆஜராக வேண்டியதுதான். இதில் என்ன இருக்கிறது என்று நிதானமாக குறிப்பிட்டார். அமுங்கி கிடந்த அந்த வழக்கு திடீரென உயிர்பெற்றதில் தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சசிகலாவும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதாவது, இரட்டை இலை விவகாரத்தில் தனது டெல்லி சோர்ஸ் மூலம் டிடிவியை காப்பாற்றி வந்தவர் சசிகலா என்று கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் தற்போது உறவு சரியாக இல்லை. இருவருக்கும் இடையில் சில மனஸ்தாபங்கள் உள்ளன. நடராஜன் நினைவு நாளில் கூட இருவரும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அ.ம.மு.க.வை கலைத்து விட்டு அக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை அதிமுகவில் சேரச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்றும் தினகரனுக்கு கட்டளையிட்டிருக்கிறார் சசிகலா என்றும் கூட தகவல்கள் வருகின்றன.

ஆனால், சசிகலா சொல்வதை தினகரன் கேட்கவில்லை. இதனால் தினகரன் சசிகலாவுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகரிடம் வாக்கு மூலம் வாங்க அமலாக்கத்துறை திட்டமிடுவது குறித்து சசிகலாவுக்கு அந்த டெல்லி சோர்ஸ் தெரிவித்திருக்கிறது. அப்போது, தாராளமாக வாங்கட்டும். தினகரனுக்கும் நமக்கும் தொடர்பில்லை.தினகரனுக்காக எந்த லாபியும் டெல்லியில் செய்ய வேண்டாம் என சொல்லி விட்டார் சசிகலா. இந்த நிலையில்தான் சுகேஷிடம் தினகரனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்கிய கையோடு தினகரனுக்கு சம்மனும் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. ஆக, தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறை வேகமாக இயங்க சசிகலாவும் ஒரு காரணம் என்பதாக அ.ம.மு.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த விவகாரதோடு தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத்தின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்று இவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் திடீரென நேற்று முதல்நாள் இரவு இவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.