அண்ணாமலையை சினம் கொள்ள வைத்த நகைச்சுவை நிகழ்ச்சி

ஊடகங்களை மிரட்டி பணியை வைத்துவிடலாம் என்ற சிந்தனைப்போக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு செல்வாக்கு படைத்த தலைவருக்கும், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அளவுக்கு இருந்திருக்குமா? சந்தேகம்தான் என்கிறார்கள் அனுபவமிக்க அரசியல் கள ஆய்வாளர்கள்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காலத்திலேயே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் பேச்சும், செயல்களும் ஊடகத்திற்கு எதிராகதான் இருந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக் கொண்ட பிறகு, எதேச்சதிகாரப் போக்கு பன்மடங்கு அதிகரித்துவிட்டதாக குமறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.அரசியல் மேடைகளில், நேர்காணல்களில் விமர்சனங்கள் தாறுமாறாகதான் இருக்கும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பார் முன்னாள் போலீஸ் அதிகாரி என்று என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இளம்தலைமுறையினரிடம் உள்ள பக்குவம் கூட கே.அண்ணாமலையிடம் இல்லை என்பதும், பொது வெளியில் கூட நிதானம் இல்லாமல் பக்குவமற்ற போக்கை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் தமிழக பாஜகவுக்கு சாபக்கேடாக மாறிவிட்டது என்று அனல் கக்குகிறார்கள் தேசிய உணர்வாளர்கள்.

பேட்டி வழங்கும் நேரங்களில் ஊடகவியலாளர்களை நேருக்கு நேராக மிரட்டும் பாணியை தற்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் கே.அண்ணாமலை, பொழுதுபோக்கு ஊடகங்களில் வரும் காட்சிகளைக் கூட சகித்துக் கொள்ளாமல், மத்திய பாஜக அரசிடம் புகார் செய்யும் அளவுக்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை பார்க்கும்போது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவர், சிறுப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்வதை கண்டு சிரிப்பதா, அழுவதா என்று கூட தெரியவில்லை என்கிறார் நடுநிலையான மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.இப்படி பல்வேறு தரப்பினரைரும் கொந்தளித்து கே.அண்ணாமலைக்கு எதிராக பொங்கும் அளவுக்கு அப்படி என்னதான் அவர் செய்துவிட்டார். ? 15 மணிநேரத்திற்கு முன்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒருபதிவுதான், அரசியலை கடந்தும் ஜனநாயகவாதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொங்கல் திருநாளையொட்டி தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சிறுவர்கள் பங்கேற்ற கலகலப்பான நிகழ்ச்சி ஒன்றை, எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று சொல்லியிருக்க முடியாது. ஆனால், அந்த நிகழ்ச்சி குறித்து கே.அண்ணாமலை பதிவு செய்த ஒரு கருத்தால், நேற்றிரவில் இருந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி வைரலாகி வருகிறது. உலகெங்கும் இருக்கும் தமிழர்கள், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் தீயாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..குழந்தைகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள வசனங்கள், அரசியல் களத்தில் பல்லாயிரக்கணக்கானோரால் பல ஆண்டுகளாகவே பொது வெளியில் பகிரங்கமாகவே பேசப்பட்டு வருபதைதான்.

நகைச்சுவையான ஒரு நிகழ்ச்சி என்று அதை தவிர்த்துப் போயிருந்தால், மத்திய பாஜக அரசின் மானம், இந்தளவுக்கு காற்றில் பறந்து இருக்காது என்கிறார்கள் தமிழக பாஜகவைச் சேர்ந்த அனுபவமிக்க அரசியல்வாதிகள்..

கே.அண்ணாமலையை சினம் கொள்ள வைத்த நகைச்சுவை நிகழ்ச்சி இதுதான்…

சிறுவர்களின் நகைக்சுவை நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிய தனியார் தொலைக்காட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் முருகனிடம் புகார் தெரிவித்துள்ளார், பாஜக தலைவர் கே.அண்ணாமலை. அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் கே.முருகன். அதைதான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கே.அண்ணாமலை.

தலைவர் எட்டடி பாய்ந்தால் அவரது விசுவாசிகள் பதினாறு அடி பாய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பாஜக ஐடி விங்க் நிர்வாகி, அந்த தனியார் தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.பாஜக தலைவர் கே.அண்ணாமலை கையில் எடுத்துள்ள மிரட்டல் அரசியல் பாணி, தமிழக மக்களிடம் எடுபடுமா?