அதிமுக நிர்வாகிகளின் குமுறல் ? இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., காதில் விழுகிறதா?

தேர்தல் கமிஷன், என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும், போகவேண்டியவை போய்க் கொண்டு தான் இருக்கின்றன. ஆளும் கட்சியில், வேட்பாளர்களுக்கான, ‘ஆதரவு’ நேற்று முன்தினம் இரவு, தலைமையிடம் இருந்து வந்து சேர்ந்து விட்டதாக தகவல் உலவுகிறது.

அதே நேரம், அந்த ஆதரவு, வேட்பாளர்களால், நிர்வாகிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி குரல்கள் கேட்கின்றன. அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் நம்மிடம் மனம் விட்டு பேசினார்கள். ஆதங்கத்தை கொட்டினார்கள். அதன் தொகுப்பு இது: கட்சிக்கு இது மிகவும் சவாலான தேர்தல். ஆனால், அவசர கோலத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. அடிப்படையா செய்ய வேண்டிய எந்த பணிகளையும் செய்யவே இல்லை.

கடந்த, 2016 தேர்தல் வரையிலும், கூட்டணிக் கட்சியினரை உள்ளடக்கிய தொகுதி கமிட்டி,ஒன்றிய கமிட்டி, நகர கமிட்டி, கிளை கமிட்டி போட்டு தேர்தல் வேலை நடந்தது. அந்த கமிட்டிகள் மூலம் தான் மக்களை குஷிப்படுத்தும் வேலை நடக்கும். அது சரியாக நடக்கிறதா என தலைமை கழகம் ஆள் வைத்து கண்காணிக்கும். ஆனால், இந்த முறை, வேட்பாளருக்குநேரடியாகவே, ‘ஆதரவு’ வந்துவிட்டது. அதிலிருந்து அவர்கள் எவ்வளவு கொடுப்பார்கள்என்பதே தெரியவில்லை. உதாரணமாக, ஒரு வேட்பாளருக்கு, 16 ‘ஆதரவு’ பெட்டிகள் வந்துஉள்ளன. ஆனால், அவர், வெளியில், 12 தான் வந்ததாக சொல்கிறார்.

எனக்கு இவ்வளவு தான் வந்தது என்று ஒன்றியத்திடம் அவர் குறைத்துத் தந்தால், அவரும்அப்படியே குறைப்பார். ஆக கடைசியில், 70 சதவீதம் வாக்காளர்களுக்குப் போக வேண்டியது,வெறும், 30லிருந்து, 40 சதவீதம் பேருக்குத்தான் போகும். அம்மா மறைந்தபின், நிர்வாகிகளான நாங்கள் கொண்டு செல்லும், ‘டிரான்ஸ்பர், போஸ்ட்டிங் லிஸ்ட்’களை அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்களே சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகப் பேசி பணம் கறந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு அமைச்சரை சுற்றிலும், ‘புரோக்கர் டீம்’ இருப்பதால், நிர்வாகிகளால் சம்பாதிக்க முடியவில்லை. தேர்தல் நேரத்திலும் எங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் கண்டிப்பாக அதிருப்தி ஏற்படத்தானே செய்யும்…? ‘டைரக்ட் பெனிபிட் டிரான்ஸ்பர்’ திட்டமெல்லாம் அரசு நலத்திட்ட பயனாளிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கட்சி நிர்வாகத்தில் இது எதிர்மறையாக வேலை செய்யும். இன்னும் நாலைந்து நாட்களுக்குள் இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளிலேயே ஜெயிப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். இதுதான் நிர்வாகிகளின் குமுறல். இ.பி.எஸ்., — ஓ.பி.எஸ்., காதில் விழுகிறதா?