அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு !

அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு; என்ன செய்கிறார் நிர்மலா சீதாராமன்?

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனத்தை இந்தத் திட்டத்தின்மூலம் பெற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் வசமிருக்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பதி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனத்தை இந்தத் திட்டத்தின்மூலம் பெற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொதுவாக, ஒரு நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகினால்தான் அந்த நாட்டில் வேகமான வளர்ச்சி அடையும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இப்படித்தான் அதிவேக வளர்ச்சி கண்டது. நம் நாடும் மிகப் பெரிய வளர்ச்சி காணவேண்டுமெனில், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என மத்திய மிகப் பெரிய அளவில் திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என்பதால், இதற்குத் தேவையான நிதியைத் திரட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின் பகிர்மானம் தொடர்பான பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்று பணமாக்குவதன் மூலமே இந்த ரூ.6 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் திரட்டப் போவதாகத் தெரிவித்துள்ளது. உதாரணமாக, நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைத் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்க அனுமதி வழங்குவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும்.

நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட ஆயில் பாண்டுகள்; பெட்ரோல் விலையைக் குறைக்காததற்கு இதுதான் காரணமா?
அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனம் கிளம்பியிருக்கிறது. அரசின் இந்த முடிவு மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும்தான் சாதகமாக அமையும். சாலைவசதிகள் மற்றும் மின்சார வசதியை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள், இனி அதிகமான கட்டணத்தைச் செலுத்தி பயன்படுத்த வேண்டியிருக்கும் என்கிற விமர்சனம் பரவலாகவே எழுந்துள்ளது.

ஆனால், கொரோனா போன்ற பேரிடரால் வளர்ச்சிப் பணிக்கான நிதி இல்லாமல் மத்திய அரசாங்கம் ஏற்கெனவே தவித்துவருகிறது. இந்த நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை இப்படித் திரட்டாவிட்டால், வேறு வகையில் திரட்ட முடியாது என ஆளும்கட்சி தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டு வருகிறது. சுருக்கமாக, இந்தத் திட்டம் உருவாக்கும் சர்ச்சை அடுத்த சில நாள்கள் வரை நம் கவனத்துக்கு வந்துகொண்டே இருக்கும்!

”காங்., ஆட்சியிலும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்கப்பட்டன; அதை ராகுல் மறந்து விட்டாரா,” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிப்படை கட்டமைப்பு துறையில், பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றின் சொத்து மதிப்பிற்கேற்ப முழு அளவிலான பயன் மற்றும் வருவாய் கிடைக்காத நிலை உள்ளது.

இதையொட்டி, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்கி, குறித்த காலத்திற்குப் பின், மீண்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.

‘தேசிய சொத்துக்களை பணமாக்குதல்’ என்ற இந்த திட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு, அத்தொகை மீண்டும் அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யப்படும். இதற்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில், மும்பையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன. மும்பை – புனே விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. புதுடில்லி ரயில்வே நிலையத்தை குத்தகைக்கு விட, தனியார் நிறுவனங்களிடம் ஏன் விண்ணப்பம் பெறப்பட்டது.

அப்போது ஏன் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது என்ன அவர்களின் குடும்ப சொத்தா?டில்லியில், ஒரே ஒரு காமன்வெல்த் விளையாட்டு மூலம் எவ்வளவு பணம் சுருட்டப்பட்டு, பல பினாமி கணக்குகளில் போடப்பட்டது தெரியாதா?தேசிய சொத்துக்களை பணமாக்குதல் திட்டம் பற்றி எதுவும் தெரியாமல் ராகுல் பேசுகிறார். இத்திட்டத்தில், சொத்துக்கள் விற்கப்படாது. மீண்டும் அரசு வசமே ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வரும், திரிண முல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”தேசிய சொத்துக்களை விற்பதற்கு, அவை மோடி அல்லது பா.ஜ.,வுக்கு சொந்தமானவை அல்ல,” என, மம்தா கூறியுள்ளார்.

மாவட்டத்திற்கு ஒரு திட்டம்
மும்பையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வங்கிகள், அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மாவட்டத்திற்கு ஒரு திட்டம் வீதம், நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள், தொழில் வர்த்தக கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்து பேசி, குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.