அலெக்ஸ்சாண்டர் ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. !

கருணாநிதிக்கு ஒரு அலெக்ஸாண்டன்னா ஸ்டாலினுக்கு ஆர்.என் ரவியா ?

கவர்னர் அலெக்ஸ்சாண்டர வச்சு காங்கிரஸ் கட்சி எப்படி கருணாநிதிக்கு பிரஷ்ஷர் கொடுத்தாங்களோ அதே ஸ்டைலில் ரவியை களமிறக்கிய பாஜக.. ஸ்டாலினுக்கு கொடைச்சல் குடுக்கவா?

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கிற ஆர்என் ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாரு. அங்க பல்வேறு மாவட்ட பொறுப்புகளை வகித்து வந்தாரு. 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். பீகாரை சேர்ந்தவர்ன்னாலும் கேரளாவில் இருந்த காரணத்தால் தென்னிந்திய அரசியல் இவருக்கு அத்துப்படி. இவரின் தொடர் பணிகள் காரணமா டெல்லியில் கவனம் பெற்றவர் அப்படியே சிபிஐக்கு போனாரு. சிபிஐ மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு முக்கியமான விசாரணைகளை நடத்தி கவனம் பெற்றவர்.இதன் காரணமாகவே மத்திய அரசால் கவனிக்கப்பட்ட ஆர்என் ரவி புலனாய்வு பிரிவுக்கு மாற்றல் ஆனாரு.

அங்கிருந்துதான் அவரின் உண்மையான ஆட்டம் தொடங்கியதுன்னு சொல்றாங்க. இந்த சமயத்தில்தான் தன்னை மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி என்று ஆர்என் ரவி வெளிப்படுத்திக்கிட்டாரு.. அப்போ வடமாநிலங்களில் பல இடங்களில் சுரங்க கும்பல்கள் அடாவடி இருந்தது. சுரங்க மாஃபியாக்கள் அதிக அளவில் இருந்தன. இதை வட மாநிலங்களில் அடக்குவதில் முக்கியமான பங்கு வகித்தார் ஆர்என் ரவி. உளவு அதிகாரி புலனாய்வு அதிகாரியாக இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ஆபரேஷன்களை காங்கிரஸ் ஆட்சியில் கவனித்துக் கொண்டவரு. முக்கியமாக காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத குழுக்களின் இருப்பிடங்கள் குறித்து தொடர்ந்து உளவு தகவல்களை கொடுத்து வந்தார். இந்த சமயத்தில்தான் இவருக்கும் அஜித் தோவலுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டதுன்னு சொல்றாங்க.. புலனாய்வு என்ற ஒற்றை புள்ளியில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 2012ல் இவர் ஓய்விற்கு பின் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்தார். பல்வேறு செய்தி நிறுவனங்களில் கட்டுரைகள் எழுதி வந்தாரு. 2014ல்தான் பாஜக ஆட்சியின் போது மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தின் புலனாய்வு கூட்டுக் கமிட்டியின் தலைவராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டார். இதில் அஜித் தோவலுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். காஷ்மீரில் கடந்த 7 வருடங்களில் நடந்த தொடர் என்கவுண்டர், எங்கு தீவிரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டது, சர்ஜிக்கல் அட்டாக்ஸ், மாவோயிஸ்ட் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்களில் புலனாய்வு தகவல்களை சேகரித்ததில் இவரின் பங்கு அதிகம் இருந்ததாக சொல்லப்படுது.
பிரதமர் அலுவலகத்தின் குட்புக்கில் இருந்தவருக்கு நாகாலாந்தில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சி குழுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் தொடக்கத்தில் நல்ல பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டாலும் போக போக, ஆளுநராக இவரின் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காத காரணத்தால் இப்போ தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுது.  இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வர்றது. இலங்கையில் தொடர்ந்து சீனாவின் கை நீண்டு வர்றது. அங்கு சீனா தனி ஆட்சி அதிகாரம் கொண்ட பகுதிகளை நிர்வகித்து வர்றது. அதோட கேரளா எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக மாவோயிஸ்டுகள் இருப்பு அதிகரிக்கிறது. இதெல்லாம் போக கேரளாவில் இருந்து சிலர் ஐஎஸ் படையில் சேர்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வரும் நிலையில்தான், முக்கியமான நேரத்தில் புலனாய்வு அதிகாரியான ரவி தமிழ்நாடு வந்துள்ளார். தென்னிந்தியாவில் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. கர்நாடகா தவிர வேறு எங்கும் பாஜக ஆட்சி இல்லை. இப்படிப்பட்ட நிலையில் பாதுகாப்பு ரீதியாக முக்கியமான நபர் இங்கே இருக்க வேண்டும். பாதுகாப்பு ரீதியாக இப்படி ஒருவர் தேவை என்பதாலேயே ரவியை. பாஜக தமிழ்நாட்டுக்கு அனுப்பி உள்ளது.  தென்னிந்திய அரசியல் தெரிந்தவராகவும் இருக்கணும். அதோடு புலனாய்வு துறையில் வல்லவராகவும் இருக்கணும்ங்கிறதால் இவர் தமிழ்நாடு வந்துள்ளார். தென்னிந்திய அரசியல் குறித்து கரைச்சு குடிச்சவருங்கிறதால் இவரின் வருகை அதிக முக்கியத்துவம் பெறுது. மிகவும் கண்டிப்பான நபர்ங்கிறதால இவருக்கும் திமுக அரசுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்குது. பன்வாரிலால் புரோஹித் போல இவர் திமுக அரசோடு நட்பாக செல்வாரா அல்லது கடும் நிலைப்பாடுகளை எடுப்பாரா என்பது போக போகத்தான் தெரியும்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்என் ரவியின் நியமனம் காரணமாக பலதரப்பட்ட அரசியல் கேள்விகள், விவாதங்கள் நடக்க தொடங்கியாச்சு. ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தரப்பட்ட பிரஷர் போலவே இப்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்திய அரசு ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்குமோ என்ற கேள்விகள் எழுந்திருக்குது. ஆளுநர் ஆர்என் ரவியின் நியமனம் குறித்து பார்க்கும் முன் பழைய ஆளுநர் அலெக்ஸ்சாண்டரின் கதையை சுருக்கமாக பார்க்கலாம். 1996 முதல் 1998 வரை தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் பி. சி. அலெக்சாண்டர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தப்போ பி. சி. அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆர்என் ரவி முன்னாள் ஐபிஎஸ் என்றால் பி. சி. அலெக்சாண்டர் முன்னாள் ஐஏஎஸ். இப்போது இருப்பது போல திமுக அப்போது காங்கிரசோடு கூட்டணியில் இல்லை. 1987 எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அணி, ஜானகி அணிண்ணு கட்சி இரண்டாக உடைந்தது. சட்டசபையிலும் இதனால் பெரும்பான்மை நிரூபிக்க பெரிய மோதல் ஏற்பட்டது . இதனால் நடந்த தொடர் அரசியல் சம்பவங்களை அடுத்து தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து ஆண்டவர்தான் பி. சி. அலெக்சாண்டர்.  பி. சி. அலெக்சாண்டர் அப்போது அதிமுகவில் நிலவிய மோதல் காரணமாக கண்டிப்பாக அக்கட்சி பெரும்பான்மை பெறாது என்ற அரசியல் வல்லுநர்கள் கணித்தனர். எம்ஜிஆர் இல்லாத நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு அமரும் பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது. அப்போது திமுகவிற்கு சவாலாக இருந்தது அதிமுக கிடையாது. ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர்தான். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் இந்திய ஆட்சி அதிகாரங்களை கரைத்து குடித்தவர். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிக மிக நெருக்கமானவர். அப்போ ஆளுநர் ஆட்சி என்றாலும், கிட்டத்தட்ட வலுவான முதல்வர் போல பி. சி. அலெக்சாண்டர் செயல்பட்டார். ஆளுநர் ஆட்சியை பயன்படுத்தி தனி கூட்டணியில் இருந்த காங்கிரஸ் எப்படியாவது திமுக, அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சி எடுத்துச்சி. திமுக, காங்கிரஸ் உறவு பிளவுபட்டு இருந்த நேரம்அது. பி. சி. அலெக்சாண்டர்தான் திமுகவின் பிரச்சாரத்திற்கும், கருணாநிதிக்கும் சவாலாக இருந்தார். முன்னாள் ஆட்சி பணியாளரான பி. சி. அலெக்சாண்டரின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வைக்கும் திட்டத்தில் ராஜீவ் காந்தி இருந்தார், இதனால தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ராஜீவ் காந்தி மிக தீவிரமாக கவனம் செலுத்தினார். பல முறை தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டாரு. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுகவின் 2 அணிகளையும் வீழ்த்தி திமுக மாபெரும் வெற்றிபெற்று 150 இடங்களோடு ஆட்சியை பிடித்தது. அப்போது பி. சி. அலெக்சாண்டர் கருணாநிதிக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனம் போல பார்க்கப்பட்டார். அப்போது ஒரு எக்ஸ் ஐஏஎஸ் அதிகாரி எப்படி கருணாநிதிக்கு சவாலாக இருந்தாரோ அதே போன்று பி. சி. அலெக்சாண்டர் ஸ்டைலில் தற்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவியை களமிறக்கி உள்ளது பாஜக. சிபிஐ போலீஸ், சிபிஐ, புலானய்வு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் என்று பல பிரிவுகளில் முக்கிய பொறுப்புகள், அசாம் ஆளுநர் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி அதிகம் கவனிக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்என் ரவிவை தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்தது அலெக்சாண்டர் நியமனத்திற்கு இணையான விஷயமாக பார்க்கப்படுது. ராஜீவ் காந்திக்கு எப்படி ஒரு அலெக்சாண்டர் இருந்தாரோ பிரதமர் மோடிக்கு ஆர்என் ரவி அப்படி இருப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. முக்கியமாக தமிழ்நாடு அரசியலில் தற்போது மாநில சுயாட்சி கொள்கைகள் உச்சத்தில் உள்ளது. ஒன்றிய வார்த்தை பிரயோகம், நீட் எதிர்ப்பு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள், சுயாட்சி முழக்கங்கள், அதிமுகவிற்கு எதிராக நீளும் வழக்குகள், அவ்வப்போது எழும் சில திராவிட நாட்டு கோரிக்கைகள் என்று மிக முக்கியமான கட்டத்தில் ஆர்என் ரவியை பாஜக தமிழ்நாடு ஆளுநராக களமிறக்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலினுடன் முந்தைய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் நினைத்ததை விட இணக்கமாகவே பழகினார்.  ஆளுநர் புரோஹித் பெரிய அளவில் திமுகவிற்கு சவாலாக இல்லாத நிலையில்தான் தற்போது ஆர்என் ரவி களமிறக்கப்பட்டு இருக்கிறார். திமுகவின் ஆட்சிக்கு சவாலாக இவர் இருப்பார் என்று இப்போது அரசியல் வல்லுநர்கள் பேச தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தரப்பும் இந்த ஆளுநர் நியமனத்தை எதிர்த்துள்ள நிலையில், திமுக தரப்பு அதிகாரபூர்வ வரவேற்பு மட்டுமே கொடுத்துள்ளது. ஸ்டாலினுக்கு இவர் எவ்வளவு சவாலாக இருப்பார்.. அலெக்ஸ்சாண்டர் பாணியில் திமுகவிற்கு குடைச்சல் கொடுப்பாரா ங்கிறது போக போகத்தான் தெரியும்.