அதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது?
தமிழக அரசியலில் திமுகவின் நேரடி எதிரி பாஜகதான் என்று சில பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கு அதிமுக தலைமை பதில் அளிக்காததால் அப்செட்டில் உள்ளார்கள் தொண்டர்கள். அதிமுக கொள்கையின் அடி மடியில், கூட்டணி கட்சியான பாஜக கை வைத்து விட்டது என்று அதிமுக தொண்டர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் புலம்புவதை கவனிக்க முடிகிறது.
ஒரு கட்சியையும் விட்டு வைக்காத நமக்கே அதிமுக தலைகள் தண்ணி காட்டுறாங்களே… ஏமாந்து போன பங்காளி கட்சி இரு கட்சிகளின் ஆட்சி 1967ம் ஆண்டு காங்கிரசை தோற்கடித்து முதல் முறையாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. அது முதல் இதுவரை தேசிய கட்சி எதுவும் தமிழ்நாட்டை ஆள முடிந்தது இல்லை. திமுகவிலிருந்து எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியது முதல் இவ்விரு கட்சிகளும்தான் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. ஒரு சில விஷயங்களில் வேறுபாடு இருந்தாலும், இரு கட்சிகளுமே, கல்வி, மருத்துவம், சமூக நீதி போன்ற கொள்கைகளில் ஒரே மாதிரியாக பயணித்து வந்துள்ளன. இந்த கொள்கைகளில் எந்த கட்சி ஆட்சியிலாவது இடரினாலும் அடுத்த கட்சி அதை சுட்டிக் காட்டி நேர் வழிக்கு கொண்டு வந்துவிடும். இதனால்தான் இட ஒதுக்கீடும், இந்தி திணிப்பு எதிர்ப்பும் இன்னும் தமிழ்நாட்டில் உயிர்ப்போடு உள்ளன. மக்கள் மனநிலை மக்களும்,
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 2016 தேர்தல் வரை ஒவ்வொரு 5 வருடங்களும் மாறி மாறி இரு கட்சிகளுக்கும்தான் ஓட்டு போட்டனர். 2016ல் அதிமுக 2வது முறையாக ஜெயலலிதா தலைமையில் முதல் முறையாக மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது வரலாறு. ஆனால் வேறு யாருக்கும் இந்த அரசியலில் இடம் இல்லை. திமுக எதிர்ப்பு என்ற ஒன்றுதான் அதிமுகவின் பிரதான ஆயுதம். கருணாநிதியை ஜெயலலிதா என்ன வார்த்தையால் பிரச்சாரத்தின்போது மக்களிடையே கொண்டு சென்று சேர்த்தார் என்பதை நாடறியும். பதிலுக்கு ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற விஷயங்களை பட்டியலிட்டு விமர்சனத்தை முன் வைப்பார் கருணாநிதி. எதிர்க்கட்சிகள் அல்ல, எதிரிக் கட்சிகள் பெரும்பாலும், அதிமுக பிரச்சாரங்கள் என்பது கருணாநிதி என்ற தனி மனிதரை தாக்கும் அரசியலாகத்தான் இருக்கும். ஜெயலலிதா முதல் குண்டு கல்யாணம் வரை, சரமாரியாக கருணாநிதியை விமர்சனம் செய்வார்கள். திமுகவுக்கு எதிரி அதிமுக என்ற மனநிலைக்கு மக்களை கொண்டு வந்தது இந்த பிரச்சாரம். திமுக நிர்வாகிகள் இல்லத்தில் நடைபெறும் நல்லது கெட்டதற்கு சென்ற அதிமுகவினரை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கட்சியிலிருந்து நீக்குவார் ஜெயலலிதா. கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றார். ஜெயலலிதா ஆட்சியில், நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இப்படியாக எதிர்க்கட்சிகள் என்பதை விட எதிரிக்கட்சிகள் என்ற ரீதியில் போய்க் கொண்டு இருந்தது அப்போதைய அரசியல். தொடரும் யுத்தம் ஏன்.. கருணாநிதி மறைவின்போது கூட மெரினா கடற்கரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, நினைவிடம் கட்ட இடம் தர மறுத்தது, அந்த பழைய விரோதங்களின் தொடர்ச்சி என்றுதானே பேசப்பட்டது.
ஆனால் இப்போது திடீரென ஒரு பேச்சு தமிழக அரசியலில் எழத் தொடங்கியுள்ளது. திமுகவுக்கு தமிழக அரசியலில் ஒரே எதிரி நாங்கள்தான் என்கின்றனர் சில பாஜக தலைவர்கள். கடந்த ஒரு வாரமாக ஊர் ஊராக இதே விஷயத்தை திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள், பாஜக தலைவர்கள். ஆனால், இதுவரை அதிமுக தரப்பிலிருந்து பெரிய தலைவர்கள் யாரும் இதைப் பற்றி பேசவில்லை. கேரள அரசியல் கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரசும்தான் தொடர்ந்து களத்தில் போட்டியிடும் கட்சிகளாக உள்ளன. அங்குள்ள சினிமாக்களிலும் இவ்விரு கட்சிகளை முன்னிறுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே வீட்டில் அப்பா ஒரு கட்சி, மகன் இன்னொரு கட்சி என காட்சிகள் இருக்கும். அது அவர்கள் வாழ்வியலோடு கலந்து விட்டது. தமிழகத்திலும், திமுகவும், எம்ஜிஆரும் எப்படி தமிழக அரசியல் வாழ்வியலோடு கலந்தவர்கள் என்பதை, சார்பட்டை பரம்பரை திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. குத்துச்சண்டையில் கூட கட்சிகள் அங்கம் வகித்த காலகட்டங்களை அப்படியே காட்டியது அந்த படம். இப்போதும் கூட திமுக, அதிமுக உள்ளூர் தலைவர்கள் ஊருக்கு ஊர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இளைஞர்களுக்கு பேட், ஸ்டெம்பு என வழங்கி கவருவதும் இந்த அரசியலின் வழி வந்தவைதானே.
அதேநேரம், பாஜக என்பது தமிழ்நாட்டுக்கு அறிமுகமில்லாத கட்சியாகத்தான் இருந்து வந்தது. “சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த நல்ல பெயருக்காக அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 தொகுதிகளை வெல்ல முடிந்துள்ளது. ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதை போல அதிமுக இருக்கும் இடத்தையே தட்டி பறிப்பது போல திமுக எதிரி நாங்கள்தான் என நான்கே தொகுதிகளை வைத்துக் கொண்டு பேசுவது நல்லா இல்லை ஆமா..” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத, ஒரு அதிமுக ஆதரவு நிர்வாகி. பீகார், மகாராஷ்டிரா மாதிரி மேலும் அவர் கூறுகையில், “பீகாரில் இப்படித்தான், நிதிஷ் குமாரோடு சேர்ந்து கொண்டு அவரது கட்சியையே கீழே தள்ளி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது பாஜக. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்துதான் அந்த மாநிலத்தில் செல்வாக்கை வளர்த்தது. ஆனால் முதல்வர் பதவி ஆசையில் கூட்டணியை முறித்தது. இப்போது சிவசேனாவை எதிரியாக நடத்துகிறது.
எனவேதான் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சரியில்லை என்று அப்போதே அதிமுக தலைமைக்கு கூறினோம்.. இப்போதாவது, அதிமுக தலைமை விழித்துக் கொண்டு, குறைந்தபட்சம், திமுகவுக்கு நாங்கள்தான் அரசியல் எதிரி என்பதை பதியவைக்க வேண்டும்..திமுகவை தீய சக்தி என்று கூறுவதுதான் ஜெயலலிதாவின் பிரச்சார அடி நாதம். திமுக கூடாது என்று தனித்து கட்சி துவங்கியவர் எம்ஜிஆர். இப்போது அதிமுக தலைமை பேசாமல் இருந்தால், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்குமே அது எதிரானது..” என்கிறார் ஆதங்கத்தோடு. சமூக வலைத்தளங்களில் பல அதிமுக ஆதரவாளர்கள் கருத்துமே கூட இதுவாகத்தான் இருக்கிறது.