கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ?

கொங்கு நாடு யாருக்கு ? திமுகவுடன் முட்டி மோதும் பாஜக ? என்ன செய்யப் போகிறது அதிமுக ? பாமக.வும் களத்தில் இறங்கி விட்டது !

கொங்கு நாடு என்று உச்சரிக்கப்பட்ட நாள் முதலாக, இந்துமத ஆதரவாளர்கள் கூட்டம் உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரையிலான கரூரை உள்ளடக்கிய 9 மாவட்டங்களில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு அடங்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக.வை விட அதிகமான தொகுதிகளில் அதிமுக கூட்டணிதான் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாயங்கள், கொங்கு மற்றும் வன்னியர்கள் மட்டுமே. குறிப்பா சொல்லணும்னா என்றால், கோவையில் உள்ள 10 தொகுதிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள் ஆக மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 20 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றிருக்கிறது.

கொங்கு மண்டலமாக அடையாளப்படுத்தப்படும் இந்த 9 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் உள்ள இரண்டு ஆளுமைகள், திமுக.வுக்கு சிம்ம சொப்பனமாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.. ஒருவர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இவரிடம் திமுக.வின் கஜானாவைவிட பல மடங்கு அளவுக்கு செல்வம் அபரிதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொருவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதிமுக ஆட்சியில் இருந்த போதே ஒட்டுமொத்தமாக கட்சியின் செலவினங்களுக்கு பணம் செலவழித்தவராக அடையாளப்படுத்தப்பட்டவர்.

இந்த இருவரில் முன்னவரான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும்கட்சியான திமுக.வின் எந்தவிதமான உருட்டல் மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் துணிவோடு இருப்பதாகவே அவரது விசுவாசிகள் சொல்கிறார்கள்.
அதற்கு காரணம், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தன்னை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டர்கள் என்கிற அசாத்திய நம்பிக்கைதான்.பிஜேபியின் உண்மை முகம் தெரியலைன்னு நெனைக்கிறேன். இரண்டாமவர் எஸ்.பி.வேலுமணி, பேச்சில ஸ்டராங்காக இருந்தாலும், செயல்ல கொஞ்சம் வீக்காக இருப்பவர். தனது ஊழல் தொடர்பாக திமுக அரசு கைது நடவடிக்கைகளில் இறங்கி தன்னை சிறையில் அடைத்து விடுமோங்கிற பயத்தில ரொம்பவே பயந்து போய்த்தான் இருக்காராம்.

கைது நடவடிக்கை மற்றும் சிறை வாழ்க்கையில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, முன்னவர் போல, டெல்லியை நம்பாமல், திமுக.வில் உள்ள பவர்ஃபுல் அமைச்சர்களிடமே டீலிங் பேசி வருவதாக, அவரது பினாமிகளின் அடிமைகள் தகவல்களை கசிய விடுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பாதித்த பணத்தில் சில ஆயிரம் கோடிகளை திமுக பக்கம் தள்ளிவிட கூட தயாராக இருக்கிறேன். தன்னை வழக்குகளில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று நடத்திய பேச்சுவார்த்தை கிட்டதட்ட வெற்றி அடைந்துவிட்டதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் எஸ்.பி.வேலுமணி.

அவரின் உற்சாகம், அவரது சிஷ்ய கோடிகள் வரை பரவியதையடுத்து, அமைச்சராக இருந்த காலத்தில் எந்தளவுக்கு அவரது வீட்டில் கூட்டம் களை கட்டியதோ, அதே அளவுக்கு இன்றைக்கும் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் சகஜமாக எஸ்.பி.வேலுமணியை சந்தித்து உதவிகளைப் பெற்று வருகிறார்களாம். இப்படி, எஸ்.பி.வேலுமணியும், எடப்பாடி பழனிசாமியும் மிகுந்த தைரியத்தோடு, திமுக ஆட்சிக்கு எதிராக சவடால் விடத் தொடங்கியதையடுத்து, கொங்கு மண்டல அதிமுக.வில் இன்னமும் உற்சாகம் குறையாமல் வேலை செய்து வருகிறார்களாம். அந்த உற்சாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொங்கு நாடு முழக்கமும் பரவலாக எதிரொலிக்க செய்து வருகிறது.

கொங்கு நாடு அமைந்தால், கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சராக இருப்பார் என்பதால், அந்த மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களும், நேரடியாகவே எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா வகையிலும் துணை நிற்க தொடங்கிவிட்டார்களாம். கொங்கு மண்டலத்தில அதிமுக ஜெயிக்க என்ன காரணம்னு ஏற்கெனவே ஒரு பதிவு போட்ருக்கேன்.

கொங்கு மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் தருமபுரி, நீலகிரியை தவிர மற்ற 7 மாவட்டங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம்,குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவருமே பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர்கள்தான். மேலும், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வலிமையான பொருளாதார கட்டமைப்புடனே இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவோடு பல லட்சம் வட இந்தியர்கள் கோவை, நீலகிரி மாவட்டம் முழுவதிலும் பரவியிருக்கிறார்கள்.

அதிமுக ஆதரவு தொழிலதிபர்கள் போல, பாஜக ஆதரவு வட இந்திய தொழிலதிபர்களும், கொங்கு மண்டலத்தில் பாஜக கொடி உயர பறக்க, பல்லாயிரம் கோடி ரூபாயை திரட்டி தயாராகவே வைத்திருக்கிறார்கள். கோவை அளவுக்கே தமிழக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் வட இந்திய மக்கள் பெரும்பான்மையாக உள்ளதுடன், பாஜக ஆதவு மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

வரும் காலத்திலும் வட இந்திய மக்களின் எண்ணிக்கை இந்த 9 மாவட்டங்களிலும் பல லட்சமாக உயரும் வகையில், ரகசிய நடவடிக்கைகளை தீட்டிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தளவுக்கு வட இந்திய தொழிலதிபர்கள் அரசியல், ஆட்சி அதிகார செல்வாக்குகளை அனுபவித்து வந்தார்களோ, அதில் கொஞ்சம் கூட குறையாமல்தான் திமுக ஆட்சியிலும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கொரோனோ தொற்று காலத்தைச் சொல்லாம்.

வட இந்திய கூலி தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், அவர்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்கிக் கொண்டிருக்கும் வட இந்திய தொழிலதிபர்கள், கொரோனோ தொற்றில் இருந்து பாதுகாக்க, வட இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியையும் முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வடஇந்தியர்களுக்கு மட்டும் நாள்தோறும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும், பிரதமர் மோடியின் போட்டோவை போட்டு, மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி முகாம் என வெளிப்படையாக பிரசாரம் செய்யும் வகையில், விளம்பர ப் பலகைகளை வைத்தே நாள்தோறும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த முகாமில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நுழைய முடியாத அளவுக்கு தடுப்புவேலி அமைத்து, வட இந்தியர்கள் மட்டுமே முழுமையாகப் பயனடையும் வகையில் செய்கிறார்கள். இதனைப் பார்த்து, அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள், தங்கள் பகுதியில் தடுப்பூசி முகாமை நடத்த உதவாமல், வட மாநில மக்களின் சங்க நிர்வாகிகளுக்கு உதவிக் கொண்டிருக்கும் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி துறை அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இப்படி, அதிமுக.வும் பாஜக.வும் தங்களது கட்சிகளை வலுவாக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி உடன்பிறப்புகளான திமுக நிர்வாகிகள், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, எதிர்முகாமின் மாயாஜாலங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் கொரோனோ தடுப்புப்பணிகளை மேற்கொள்ள இரண்டு அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி என இரண்டு பேரை திமுக தலைமை நியமித்திருந்த போதும், இரண்டு பேருமே திமுக ஆட்சிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல பெயரை பெற்று தருவதற்குப் பதிலாக தத்தம் உறவினர்களின் பொருளாதார நிலையை எந்தளவுக்கு உயர்த்துவது என்றே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களாம்.உடன்பிறப்புகள் புலம்புகிறார்கள்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் புடை சூழ இருப்பதையே பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், திமுக முன்னணி தலைவர்கள், எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே தொண்டர்களை அரவணைக்கிறார்கள். ஆளும்கட்சியாக மாறியவுடன் உறவினர்களை அரவணைப்பதில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் ஒன்றிய, நகர அளவில் பதவிகளில் உள்ள திமுக உடன்பிறப்புகள்.

ஆட்சிஅதிகாரத்தை வைத்து பொருளாதார நிலையை எப்படி உயர்த்துவது என்பதிலேயே முழுநேரமும் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்களால், கொங்கு மண்டலத்தில் ஒருகாலத்திலும் திமுக செல்வாக்கை உயர்த்த முடியாது. உள்ளாட்சித் தேர்தலிலும், அதற்கடுத்த எம்.பி. தேர்தலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணிதான் அரசியல் அறுவடையை அமோகமாக செய்யுமே தவிர, அந்தந்த தேர்தல்களிலும் திமுக.வுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் காத்திருக்கும் என நொந்து கொள்கிறார்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த திமுக முன்னணி நிர்வாகிகள்.

தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்காக இருக்கும் பாமக, கொங்கு மண்டலத்தை கைப்பற்றி பாமக ஆட்சியை நிறைவேற்ற வியூகம் வகுத்து களப்பணியை தொடங்கிவிட்டது. ஆனால், ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கோட்டை விட்ட திமுக, சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த தேர்தல்களிலாவது அதிமுக.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த, இப்போதிருந்தே களப்பணியை விரைவுப்படுத்த வேண்டும். ஆனால், அதற்கான எந்தவொரு துரும்பையும் திமுக தலைமை இதுவரை கிள்ளிப் போடவில்லை.

இந்தியாவில் சிறந்த முதல்வராக பெயர் எடுத்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இனி வரும் நாட்களிலாவது கொங்கு மண்டலத்தில் திமுக.வை வலிமைப்படுத்த தனிக் கவனம் செலுத்த வேண்டும். இரண்டு, இரண்டு மாவட்டமாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட நிர்வாகிகளை தவிர்த்துவிட்டு, ஒன்றிய, நகர அளவிலான திமுக நிர்வாகிகளை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கேட்க வேண்டும். அப்போதுதான், கொங்கு மண்டலத்தில் திமுக.வை வலுப்படுத்துவதற்கு தடையான இருக்கும் உண்மையான காரணங்கள் முதல்வருக்கு தெரிய வரும். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், நேரடியாக களத்தில் குதிக்கவில்லை என்றால், வெகு விரைவாக பாஜக, கொங்கு மண்டலத்தில் ஸ்ட்ராங்காக கால் ஊன்றி விடும். கொங்கு நாடு தனி மாநில முழக்கமும், மூலை முடுக்கெல்லாம் பரவி, திமுக ஆட்சிக்கு தலைவலியைக் கூட உருவாக்கிவிடும்.

பாஜக சார்பில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கொங்கு நாட்டை குறி வைத்தே காய் நகர்த்தி வருகிறார்கள். அரசியலில் எந்தவிதமான பின்புலமும் இல்லாத இவர்களின் கைகள் ஓங்கினால், அது திமுக.வுக்கு மிகப்பெரிய இழப்பாக மாறிவிடும்னு கவலையோடு பேசுகிறார்கள் கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக நிர்வாகிகள்.