அ.தி.மு.க-வில் அறிக்கைப் போர் பஞ்சாயத்து ஓய்ந்திருக்கிறது. !

அ.தி.மு.க-வில் அறிக்கைப் போர் பஞ்சாயத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுக்கொரு அறிக்கையை தனித்தனியாக வெளியிட்டதும், பன்னீரின் அறிக்கைகள் அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுது. இதனைத் தொடர்ந்து உஷாரான அ.தி.மு.க தலைமை, பன்னீரின் அறிக்கைகளை அ.தி.மு.க-வின் லெட்டர் பேடில் இருந்தே வெளியாக நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மே 24-ம் தேதி கொரோனா தடுப்புப் பணிகளில் தி.மு.க-வினர் தலையிடுவதை தடுக்கக் கோரியும், மே 25-ம் தேதி இ பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதை சுட்டிக் காட்டியும் பன்னீரிடமிருந்து அ.தி.மு.க லெட்டர் பேடில் அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கைகள்கூட அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படவில்லை. அ.தி.மு.க ஐ.டி விங் பக்கத்தில் மட்டும் பதிவேற்றியிருக்கிறார்கள். கட்சியின் தலைவரான பன்னீர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுதான் வருகிறார்.

“அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உச்சபதவி. அந்தப் பொறுப்பை வகித்திருப்பவர் வெளியிடும் அறிக்கைகள் கட்சியின் சமூக வலைத்தள கணக்குகளில் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?” என்று கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அவங்க பஞ்சாயத்தே பெருசா இருக்கு. இதுல அறிக்கையை கவனிக்க அவங்களுக்கு நேரமேது” என்று சலித்தபடி விவரங்களைக் கொட்டினார்கள்.

“தேர்தல் சமயத்தில், கட்சியின் ஒவ்வொரு அணிக்கும் செலவுக்காக ஒரு தொகை ஒதுக்கப்பட்டது. இதன்படி, ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட அ.தி.மு.க-வின் தொழில்நுட்பப் பிரிவு அணிக்கு தலா 12 லட்சங்கள் வீதம் மாதம்தோறும் கட்சியிலிருந்து செலவுக்கு தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மண்டல வாரியாக செய்யப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து திட்டத்தை விளக்கிய தேர்தல் வியூக பொறுப்பாளர் ஒருவர்தான், ஐந்து மாதங்களுக்கு இந்த தொகையை கட்சியின் தலைமையிலிருந்து அணிக்குப் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றார். கட்சித் தலைமை மாதா மாதம் தொகை அளித்தும்கூட, ஒரு ரூபாய்கூட மண்டல நிர்வாகிகளுக்கு வரவில்லை. பணம் வந்துவிடும் என்கிற நம்பிக்கையில், நிலம், வீட்டை அடமானம் வைத்து கட்சிக்காக செலவழித்தவர்கள் ஏராளம். அந்த வியூக பொறுப்பாளர் பணம் அளிப்பார் என்கிற நம்பிக்கையில் 44 லட்சம் ரூபாய்க்கு கடனாளி ஆகியிருக்கிறார் மண்டல பொறுப்பாளர் ஒருவர்.தேர்தல் முடிந்ததும் ஓய்வெடுக்கப் போய்விட்டார் வியூக பொறுப்பாளர். ஆனால், கடன் வாங்கி செலவழித்த நிர்வாகிகள் பலரும் வட்டிகூட கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதை கட்சித் தலைமையிடம் சொல்வதற்கும் ஆளில்லை என்பதால், அ.தி.மு.க-வின் தொழில்நுட்ப அணியே தள்ளாடி நிற்கிறது. இந்தக் குழப்பங்கள் இருப்பதால்தான், கட்சியின் சமூக வலைத்தளக் கணக்குகளை நிர்வகித்து வந்த மூத்த நிர்வாகிகள் ஒதுங்கிவிட்டனர். மீதமிருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால், அவர் பெயரில் வெளியாகும் அறிக்கைகளை மட்டும் பதிவேற்றம் செய்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் ஐ.டி விங் என்பது இன்றைய டிஜிட்டல் உலகில் உயிர் சுவாசமாகிவிட்டது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே தலைவர்களின் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். இனியும் அஜாக்ரதையாக இருக்காமல், அ.தி.மு.க-வின் ஐ.டி விங்கில் நிலவும் பிரச்னைகளை கட்சித் தலைமை கேட்டறிந்து களைய வேண்டும்” என்றனர்.

சீனியர் நிர்வாகிகள் கூறிய குற்றச்சாட்டை, அ.தி.மு.க ஐ.டி விங்கின் மண்டல பொறுப்பாளர்கள் இருவர் உறுதிப்படுத்தினர். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் வியூக பொறுப்பாளர் மீது ஏற்கெனவே சீட்டுக்குப் பணம் பெற்ற குற்றச்சாட்டும், மீடியா புரமோஷன் என்கிற பெயரில் கோடிகளில் சுருட்டிய குற்றச்சாட்டும் உள்ளது. இதில், இப்போது அ.தி.மு.க ஐ.டி விங்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்திருக்கும் குற்றச்சாட்டும் சேர்ந்திருக்கிறது. ஏற்கெனவே தலைவிரி கோலமாக ஆடும் பிரச்னைகளுக்கு மத்தியில், ‘பணத்தை காணோமுங்க’ பஞ்சாயத்தும் அ.தி.மு.க-வில் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. ஆட்டத்தில் எத்தனை தலைகள் உருளப் போகிறதோ தெரியவில்லை.