பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்

`சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றுவிட வேண்டும்’ என்ற முனைப்பில் தமிழக பா.ஜ.க இருக்கிறது. பிரதமரின் கோவை வருகை, சமுதாயத் தலைவர்களைச் சந்திப்பது என பா.ஜ.க நிர்வாகிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வியூகம் என்ன?

இந்து வாக்கு வங்கி!
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன், தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற நாளில் இருந்தே மாற்றுக் கட்சிகளில் இருந்து பலரும் பா.ஜ.கவில் ஐக்கியமாகத் தொடங்கினர்.

தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, நடிகர் ராதாரவி, இசைமைப்பாளர் கங்கை அமரன், நடிகை நமீதா எனப் பலரும் பா.ஜ.கவில் இணைந்தனர். இவர்களைத் தவிர, குற்றப் பின்னணி கொண்ட நபர்களும் பா.ஜ.கவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் குற்றப் பின்னணியைக் கொண்ட நபர்களைச் சேர்ப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. `இதன்மூலம் தேர்தலில் கலவரம் விளைவிக்கத் திட்டமிடுகிறார்களோ?’ என்ற சந்தேகத்தையும் அரசியல் கட்சிகள் எழுப்பின. இதன்பிறகு அத்தகைய நபர்களைச் சேர்ப்பது சற்றே குறைந்தது. அதேநேரம், `வெற்றிவேல் யாத்திரை’ உள்பட பல்வேறு விவகாரங்களைக் கையில் எடுத்தது தமிழக பா.ஜ.க. இதன் தொடர்ச்சியாக `இந்து வாக்கு வங்கி’ என்ற ஒன்று பிரதானமாகப் பேசப்பட்டது.

இது தி.மு.கவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு கிராமத்தில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ` என்னுடைய துணைவியார் போகாத கோயில்கள் கிடையாது. தி.மு.கவில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பலரும், நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்த பக்தியை நாங்கள் குறை சொல்லத் தயாராக இல்லை. அது அவர்களின் விருப்பம்’ என்றார். இதனைத் தொடர்ந்து கனிமொழியும், `தி.மு.க இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய கட்சி. கலைஞரும் ஸ்டாலினும் இந்துக்களாகக் குரல் கொடுத்தவர்கள்’ என்றார்.

“சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வியூகம் என்ன?” என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம்  கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களை நம்மிடம் தெரிவித்தார். தொடர்ந்து பா.ஜ.கவின் தேர்தல் வியூகங்களை பட்டியலிட்டார்.

8 வியூகங்கள் என்னென்ன?
1. தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிக்கு ஆள்களை நிரப்பும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன. ஒவ்வொரு பூத்துக்கும் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் பெண்கள். இந்தக் குழுவில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமுதாயப் பிரதிநிதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

2. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சமுதாயத் தலைவர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள கொங்கு வேளாளர் சமூகம், நாயக்கர் சமூகம் ஆகியவற்றைத் தவிர்த்து அந்தப் பகுதிகளில் உள்ள மொழிவழி சிறுபான்மை மக்களை அதிகளவில் சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இதே ஃபார்முலாவை அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர்.

3. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை ஒருங்கிணைப்பதற்கென தனியாகக் கமிட்டி ஒன்று போடப்பட்டுள்ளது. அரசின் இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், முத்ரா திட்டத்தில் கடன்பெற்றவர்கள், ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு) திட்டத்தில் பயனடைந்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தக் கமிட்டியின் செயல்பாடு உள்ளது. அந்த வகையில் பயனாளர்களை பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யும் வேலையை பூத் கமிட்டியின் கைகளில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம், ` மத்திய அரசின் திட்டங்களை மிக எளிதாக உங்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். இதுவே, காங்கிரஸ் ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?’ எனப் பிரசாரம் செய்து வருகிறோம்.

4. பிரதமரின் மறுவாழ்வு கடனுதவித் திட்டத்தின்கீழ் ஏராளமான நடைபாதை வியாபாரிகள் பலன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொதுமக்களோடு அன்றாடம் தொடர்பில் இருப்பவர்கள். பா.ஜ.கவின் பிரசார முகமாக நடைபாதை வியாபாரிகளைப் பார்க்கிறோம்.

5. தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தலுக்காக 34 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஒருங்கிணைப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கலாசார குழு, மகளிர் குழு, வாக்குச்சாவடிக் குழு என அதனை வகைப்படுத்தியுள்ளனர். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புப் பணியில் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதற்கு முந்தைய காலகட்டங்களில் என்.டி.ஏ கூட்டணி ஒருங்கிணைப்புப் பணி என்றால், அதில் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது சி.பி.ராதாகிருஷ்ணன் இடம்பெறுவது வழக்கம். இந்தமுறை அண்ணாமலை இடம்பெற்றிருப்பதன் மூலம், வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

6. வெற்றிவேல் யாத்திரைக்குப் பிறகு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இதற்காக பல பகுதிகளில் `முருகன் காவடிக் குழு’ என்ற வாட்ஸ்அப் குரூப் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ளவர்களை வாரம்தோறும் சந்தித்துப் பேசுவதை பா.ஜ.க உள்ளூர் நிர்வாகிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இதன்மூலம் முருக பக்தர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதும் முக்கிய அசைன்மென்டாக இருக்கிறது. இந்தப் பணிகளை எல்.முருகன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

7. பிரதமரின் சென்னை வருகையில் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்து பத்து நிமிடங்கள் பேசினார். `காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே கொடுக்காத அங்கீகாரத்தைப் பிரதமர் கொடுத்திருக்கிறார்’ என அந்த சமூக மக்களிடம் பா.ஜ.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். தென்மாவட்டங்களில் பா.ஜ.கவின் செல்வாக்கு இதன் மூலம் உயர்ந்துள்ளதாகப் பார்க்கிறோம்.

8. தமிழ்நாட்டில் உள்ள பிற சமூகங்களின் உணர்வுகளை மதித்து நடப்பவர்களுக்கு பா.ஜ.கவில் முக்கியத்துவம் கொடுக்க உள்ளனர். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக உள்ளனர். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனும் வி.பி.துரைசாமியும் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.  இங்கு ஓரளவு வெற்றி பெற்றுவிட்டால், கட்சிக்குள் முருகனின் முக்கியத்துவம் அதிகரித்துவிடும்.“ பா.ஜ.கவுக்கு செல்வாக்கு உள்ள பகுதியாக கொங்கு மண்டலம் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் சி.பி.எம் வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார். தமிழகம் முழுவதும் வீசிய எதிர்ப்பு அலையின் காரணமாகவே அவர் வென்றார். இந்தமுறை அப்படிப்பட்ட சூழல்கள் எதுவும் இல்லை. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பலவற்றில் உறுதியாக வெற்றி பெறுவோம்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ நேற்று முன்தினம் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடம் எல்.முருகன் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், `நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனை உணர்ந்து இந்தத் தேர்தலில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இன்னும் ஏராளமானோர் நமது கட்சிக்கு வரவுள்ளனர். கோவை மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறீர்கள். நமது கட்சிக்குப் புதிதாக யார் வந்தாலும் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ எனப் பாராட்டினார்.

`தொடர்ந்து பேசுகையில், “ வேட்பாளர்களுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதிலும் சமூகரீதியான ஃபார்முலாவை தமிழக பா.ஜ.க பயன்படுத்தலாம். இது தங்களுக்குப் பலன் கொடுக்கும் எனவும் நம்புகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளாக கொங்கு மண்டலத் தொகுதிகள், கிருஷ்ணகிரி, சென்னையில் உள்ள நகர்ப்புற தொகுதிகள், தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள், முத்தரையர் சமூகத்தினர் அடர்த்தியாக உள்ள பகுதிகள் ஆகியவற்றை முக்கியமாகப் பார்க்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தகட்ட திட்டங்களை பா.ஜ.க அரங்கேற்ற உள்ளது” என்கிறார்.

அதேநேரம், வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது, சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் உள்ள வள்ளுவரின் படத்தில் குடுமி வைத்திருப்பது, அப்துல் கலாம் நினைவிடத்தில் காவி வண்ணம் போன்றவை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தின. `எதையாவது செய்து தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றப் பார்க்கிறது’ என ம.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொதித்தன. ஆனாலும், குடவோலை முறை, திருக்குறள் எனத் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலையைப் பிரதமர் தொடர்ந்து செய்து வருகிறார்.

“ சமூகரீதியாக ஒன்றிணைப்பது கணிசமான பலன்களைக் கொடுத்தே தீரும். இதுநாள் வரையில் பா.ஜ.க என்பது மதச்சார்புள்ள கட்சி எனப் பேசப்பட்டு வந்தது. இப்போது, `சாதி,மத பேதமற்ற கட்சி’ என்றும் `மக்கள் நலனுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் கட்சி’ என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிற கட்சிகளில் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரும் பா.ஜ.கவை நோக்கி வருகிறார்கள். திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் நம்பி வருகின்றனர். இவை அனைத்துமே வளர்ச்சியைக் குறிக்கிறது. தேர்தல் முடிவில் சட்டமன்றத்தில் அதிகப்படியான பிரதிநிதிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்” என்கிறார்.

“வள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது சரியா?” என்றோம்.
“ இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கின்றன. இது பா.ஜ.கவின் திட்டம் கிடையாது, வள்ளுவர் தலையில் என்ன மாதிரியான முடி வைத்திருந்தார் என யாராவது கூற முடியுமா?” என்கிறார். மேலும், “ தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது என்றோ, மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டு சட்டமன்றத்துக்கு அனுப்பிவிடுவார்கள் என்றோ நான் நம்பவில்லை. ஆனால், எங்கள் கட்சியின் வளர்ச்சி அமோகமாக இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் வெற்றி பெறுவோம். எடப்பாடி கவர்ச்சிகரமான தலைவரா என்றால் இல்லை. அவருடைய அனுபவம், பதவி ஆகியவற்றால் மக்கள் அவரை அங்கீகரிக்கலாம். எங்கள் தலைவர் முருகனின் வேகமான செயல்பாடு, கட்சிக்கான பணிகள், செயல் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் மக்கள் தலைவராகவும் அங்கீகரிக்கப்படலாம். எங்கள் கட்சியில் வாய்ப்புக் கேட்டு போட்டியிடுவதற்கு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். எனவே, சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்” என்றார்.

தேர்தலில் பலன் கொடுக்குமா?
“தமிழக பா.ஜ.கவின் செயல்பாடு வாக்குகளாக மாறுமா?” என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ பா.ஜ.க எப்போதுமே குறுகிய காலத்திட்டங்களை வைத்திருப்பதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் நீண்டகாலத் திட்டங்களை முன்னெடுப்பது அவர்களின் வழக்கம். இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டமாக அவர்கள் எதையும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ தென்மாவட்டத்தில் பரவலாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற அறிவிப்பு அந்தச் சமூக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், இடைநிலை சமூகங்கள் மத்தியில் ஊடுருவி அவர்களின் சமூகப் பெருமையை அதிகரிக்கும் வேலையை பா.ஜ.க செய்து வருகிறது. இதன்மூலம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவே பார்க்கிறேன். மதமும் சாதியும் கைகோப்பது போலச் செயல்படுகின்றனர். இங்கு இந்து என்ற கண்ணோட்டத்தைவிட சாதி உணர்வுதான் அதிகமாக இருக்கிறது. அதனைக் கவர்வதற்கான வேலைகளில் பா.ஜ.கவினர் ஈடுபடுகின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம் சிந்தாந்தரீதியாக செயல்படாத நிலையில், பா.ஜ.கவினர் தங்களின் சிந்தாந்தத்தைப் பரப்பி வருகின்றனர். இதன்மூலம் தேர்தலில் வெற்றி கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது” என்கிறார்.

தமிழ்நாட்டில் காலூன்ற, பாஜக பல்முனை உத்திகளைக் கையாள்கிறது. தங்களது `ஆவேச’ அணுகுமுறை மூலம், பல பகுதிகளில் மக்களின் கவனத்தை ஈர்த்துவருவதாக அக் கட்சியினர் நம்புகின்றனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கு அந்த அணுகுமுறை எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதை எளிதில் கணிப்பது கடினம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.