பாஜக வேட்பாளர் வெற்றிபெற வழி வகுத்துக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..? ஆத்திரத்தில் அதிமுக..!

பாஜக வேட்பாளர் வெற்றிபெற வழி வகுத்துக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..? ஆத்திரத்தில் அதிமுக..!

அதிமுகவின் முக்கியமான அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என வியூகம் அமைத்து ஸ்ட்ராங்கான வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அதனால் தன்னை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜுவை எதிர்த்து டி.டி.வி.தினகரனே களமிறங்கி விட்டார். மற்றொருவர் டி.டி.வி.தினகரன் பெரிதும் நம்பிய இசக்கி சுப்பையா. நட்டநடு ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டாரே… யார் போனாலும் பரவாயில்லை. ஆனால் இசக்கி சுப்பையா போயிருக்கக்கூடாது என பல நாட்கள் புலம்பி இருக்கிறார் டி.டி.வி. ஆகவே நம்பிக்கை துரோகத்தை வேரறுக்க அம்பாசமுத்திரத்தில் அமமுக சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

ஆனால், பாஜக போட்டியிடும் திருநெல்வேலியில் மட்டும் ஜகா வாங்கி வருகிறார் டி.டி.வி.. இங்கே பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். தேவர் சமூகத்தை சேர்ந்த இவர் விஷயத்தில், தினகரன் மென்மையான போக்கை கையாள்வதாக, அவரது கட்சியினரே சொல்கின்றனர். கடந்த முறை, 601 ஓட்டுக்களில் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தார். அதற்கு காரணம், அவரது ஜாதிக்காரரான மாடசாமி. இவர், தே.மு.தி.க., வேட்பாளராக போட்டியிட்டு, 8,640 ஓட்டு வாங்கினார்.

இந்த முறை கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,வுக்கு அந்த தொகுதியை கொடுக்காமல், அ.ம.மு.க.,வுக்காக வைத்துக் கொண்டார் டி.டி.வி. நயினாருக்கு எதிராக, அ.ம.மு.க., வேட்பாளரை நிறுத்தி ஆட்டம் காட்டப் போகிறார் என, பலரும் எதிர்பார்த்தனர். அதேபோல், தினகரனும், தன் கட்சியின் அமைப்பு செயலர் பால்கண்ணனை வேட்பாளராக அறிவித்தார். மாடசாமி களம் இறங்க முடியாமல் போனாலும், இது, சரியான போட்டி தான் என பலரும் நினைத்தனர். ஆனால் பால்கண்ணன் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரு மனுவில் தவறு, பிழை இருந்தால், இன்னொரு மனு சரியாக இருக்கும் என, அனுபவசாலிகளே நாலைந்து வேட்பு மனு போடும் சூழலில், பால்கண்ணன் பலர் சொல்லியும் கேட்காமல், ஒரே ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். கமல் கூட்டணியில் தொகுதியை கேட்டு வாங்கிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனுவும், இதே போல தள்ளுபடியானது. டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சிவகுமார் வேட்புமனுவில், அவரது கட்சியின் அங்கீகார கடிதம் இணைக்கப்படவில்லை. ஆகவே, அவர் ஒரு சுயேச்சையாக களம் காண்கிறார். இப்படி எல்லாம் கைகூடி வருகிறது பாஜகவுக்கு.  எம்.எல்.ஏ., லட்சுமணனை மீண்டும் நிறுத்தியிருக்கிறது, தி.மு.க., இவர் முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்ரமணியனின் வாரிசு. ஆக, திருநெல்வேலியில், பா.ஜ., – தி.மு.க., இடையேதான் நேரடி போட்டி. ஆக, டி.டி.வி.தினகரன்பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? அல்லது நயினார் நாகேந்திரனுடன் டீல் செய்து கொண்டாரா என பலரும் சந்தேகிக்கின்றனர்.