பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்!பணிவின் சிகரமாக வெளிப்படுவார் ! ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஓபிஎஸ்! பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார்.
பெரிய குளத்தில் தேனீர் கடையோடு, பைனான்ஸ் பிசினஸையும் பார்த்துக் கொண்டு, எம்ஜிஆர் இளைஞர் அணியில் செயல்பட்டு வந்த பேச்சிமுத்துவுக்கு பெயர்மாற்றம் செய்து கொண்டால், பெரிய வளர்ச்சி இருக்கும்னு ஒரு ஜோசியர் சொல்ல பன்னீர்செல்வமாக பெயர்மாற்றம் கண்டார்.
1989 ம் ஆண்டு போடித் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது ஜெயலலிதாவிற்கு எதிராக ஜானகி அணி சார்பில் வெண்ணிற ஆடை நிர்மலா நின்றார். ஜெயலலிதாவோட தேர்தல் பணிகளை முன்னின்று செய்த சுலோச்சனா சம்பத் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.பன்னீர்செல்வம்.
அதன் பிறகு 1991 ல் ஜெயலலிதாவின் பொதுக் கூட்டம் பெரியகுளத்தில் நடந்த போது, அந்த மேடையில் சாஸ்டாங்மாக விழுந்து எழுந்து, மற்றவர்களையும் விழத் தூண்டினார்.ஒரு வகையில் அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தவரே ஓபிஎஸ் தான்!
பெரியகுளம் நகர அதிமுக செயலாளர், பெரியகுளம் நகராட்சித் தலைவர் என்று வளர்ந்த பன்னீர்செல்வம், அதன் பிறகு டி.டி.வி தினகரன் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் நின்ற போது, வயது வித்தியாசம் பாராமல், தினகரனையும் பணிந்து வணங்கி, அவர் கட்டளைக்கு ஏற்ப தேர்தல் பணியாற்றி டிடிவி தினகரன் யின் அன்பைப் பெற்றார்.
2001 ஆம் ஆண்டு பிளசண்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்த போது , பிரச்சினையில்லாத- நம்பகத்தனமான ஒருவர் தேவைப்பட்ட போது, சசிகலா மற்றும் தினகரனால் ஜெயலலிதாவிற்கு சிபாரிசு செய்யப்பட்டு முதல்வரானார் 2001ல் பெரிய குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்னீர்செல்வம்.
தனி நபராக சர்வாதிகாரமாக கட்சியையும், ஆட்சியையும் கொண்டு செலுத்த நினைத்த ஜெயலலிதாவிற்கு பன்னீரின் பவ்யம் மிகவும் பிடித்துவிட்டது. ஆகவே, அவரது வளர்ச்சி அதற்குப் பிறகு அபாரமாக இருந்தது. பொதுப் பணித்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் என்பதோடு நிதி அமைச்சர் போன்ற பதவிகள் அவருக்கு கிடைத்தன. இவை அனைத்தும் அவரது திறமை சார்ந்து அவர் பெற்ற பதவிகள் அல்ல. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட விசுவாசத்தின் காரணமாக கிடைத்த வாய்ப்புகளே! சுயமாக ஒரு முடிவுக்கு வரும் தைரியம் இல்லாதவர். சொன்ன வார்த்தைக்கு ஏன்? எதற்கு? என்று எதிர்க்கேள்விகளுக்குள் போகாமல் கட்டுப்படுபவர். பேராசை இருக்கிறது எனினும், விட்டெறிந்ததை பிடித்துக் கொள்ளும் பழக்கம் உடையவர், ஆனால் தனி ஆளுமையாக மலர்வதற்கு வாய்ப்பில்லாதவர்.
இந்த மூன்று பரிமாணங்களுக்கு அன்று முற்றிலும் பொருந்தி போன ஒரே நபராக பன்னீர்செல்வம் இருந்ததால் தான் ஜெயலலிதா அவரைத் தேர்வு செய்தார்<
இதே காரணத்தால் தான் 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிதேவன் குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சிறை சென்ற போதும் பன்னீரே ஆபத்பாந்தனாக முதல்வர் பதவியை பெற்றார்!
ஆனால், அந்த எட்டுமாத பொறுப்பை பெற்ற பன்னீர்செல்வம் பழைய பன்னீர் செல்வமாக இல்லை. பணம் சேர்ப்பதில் படுகுறியாக இருந்தார்! ஆட்சி நிர்வாக ரீதியாக மட்டுமின்றி, கட்சி நிர்வாக ரீதியாகவும் ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் தானே இருப்பதாக பலரிடமும் எம்.எல்.ஏ சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி வசூல் வேட்டையிலும் இறங்கினார். சேகர் ரெட்டிக்கு தமிழக ஆற்று மணல் படுகைகளை சுரண்டிக் கொழுக்க வாய்ப்பளித்தார். இது போன்ற காரணங்களால் ஜெயலலிதா இவரை தள்ளி வைத்து, எச்சரிக்கும் நிலைமையும் உருவானது. சசிகலாவின் கடும் கோபத்திற்கும் ஆளானார். இவரது தம்பி ராஜா உள்ளிட்ட குடும்பஸ்தர்களும் ஏகப்பட்ட மோசடி மற்றும் சுருட்டல்களில் ஈடுபட்டனர்! இந்த இருபதாண்டுகளில் ஒபிஎஸ்சால் தமிழ்நாடு பெற்ற நன்மை என்று எதுவுமே இல்லை!
2016 தேர்தலில் ஒபிஎஸ்க்கு தேர்தலில் நிற்க சீட்டு கிடைக்குமா என்ற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது! பிறகு தன் தவறுகளுக்கெல்லாம் வருந்தி, திருந்திவிட்டதாக கண்ணீர்விட்டே ஒபிஎஸ் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.
இதையெல்லாம் இப்ப சொல்ல வேண்டிய காரணம் என்னன்னா 2016 தேர்தலில் தனக்கான வாய்ப்பு பெறுவதற்கே தவியாய் தவித்த ஓபிஎஸ் தான், இன்று அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பல பேருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு தரக் கூடிய நிலையில் இருக்கிறார்
ஆனால், இதைக் கொண்டு ஒபிஎஸ் இன்று அந்த கட்சியின் ஒரு பெருந்தலைவராக உருவாகிவிட்டார் என்று முடிவுக்கு வருவதற்கு இடமில்லை!
வருங்காலத்தில் ஒரு பெருந்தலைவராக உருவெடுக்கும் தகுதி ஓபிஎஸ்சுக்கு இருக்கும் என்றால், அவர் ஜெயலிதாவின் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கவே முடியாது. சுயமற்ற மனிதன் என்று தெளிவாக முடிவெடுத்ததால் தான் முதன் முதல் எம்.எல்.ஏ ஆனவரும், அமைச்சரவையில் பதினான்காம் இடத்தில் இருந்தவருமான பன்னீர்செல்வத்தை தேடிக் கண்டுபிடித்தார் ஜெயலலிதா!
15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக அதிமுகவின் பொருளாளர் பொறுப்பு வகித்த ஒபிஎஸ், தான் சார்ந்த தென் மாவட்டங்களிலாவது கட்சியை வளர்த்திருப்பாரா? நம்பிக்கையான தளபதிகளை கண்டெடுத்திருப்பாரா? பலருடைய வளர்ச்சிக்கும் பங்களித்திருப்பாரா…? அரசு வேலை வாய்ப்பு சார்ந்தவற்றில் எளிய தொண்டர்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் வாய்ப்பு பெற கைகொடுத்திருப்பாரா..? எதுவுமே இல்லை! தனக்கு கிடைத்த முக்கியத்துவம் எல்லாவற்றையுமே காசு பார்க்க மட்டுமே வாய்ப்பாக்கிக் கொண்டார் ஒபிஎஸ் அதனால் தான் அவர் என்றென்றுமே ஒரு தனி மனிதராக குடும்ப வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவராக காட்சியளிக்கிறார்.
இதனால் தான் பாஜக மேலிடம் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போதே பன்னீர் செல்வத்தை கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வத்தின் வீட்டில் ரெய்டு நடத்தியது பாஜக அரசு! ஆகவே, பாஜக தான் பெரிய மேலிடம், இனி அவர்களுக்கு விசுவாசமாகயிருப்பதே வாழ்க்கை தர்மம் என வகுத்துக் கொண்டார் ஓபிஎஸ். இதனால் தான் அப்போலோவில் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போது ஒபிஎஸ்டம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்கும்படி பாஜக மேலிடம் வலியுறுத்தியது. இதற்கு சசிகலா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட போது, அன்றைய ஆளுனர் வித்தியாசாகர் ராவ், அமைச்சரவையை வழி நடத்தும் தலைமைப் பொறுப்பை பன்னீர் செல்வம் பார்ப்பார் என்று ஆணை வெளியிட்டார்.(அக்டோபர்-5). அதைத் தொடர்ந்து டிசம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு பன்னீர் தலைமையில் அதிமுக அமைச்சரவை அமைந்தது. அதாவது, ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுக தலைமைகுழு ஒன்றாக கூடி சேர்ந்து எடுத்த முடிவல்ல, பன்னீர் முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என்பது! அதாவது, பன்னீர்செல்வத்தை முதல்வாராக்கியது பாஜகவின் விருப்பமாக யிருந்தது!
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவால் நீண்ட காலம் மறுக்கப்பட்டு வந்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு மசோதா ஆகியவற்றுக்கு உடனடியாக கையெழுத்து போட்டார். அத்துடன் டி.என்.பி.எஸ்.சியில் தமிழரல்லாத – வட மாநிலத்தார்- தேர்வு எழுதி, தமிழகத்தில் அரசு பதவிகளை பெறுவதற்கும் வழி ஏற்படுத்தி கொடுத்து கையெழுத்திட்டார். இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநில முதலமைச்சரும் இது போன்ற ஒரு துரோகத்தை தன் சொந்த மாநிலத்திற்கு செய்ய துணிந்ததில்லை! இதன் மூலம் தன் பதவி சுகத்திற்காக பல லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார் ஓபிஎஸ்! இதில் எந்த குற்றவுணர்வும் இன்று வரை அவருக்கு கிடையாது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகமெங்கும் பெரும் நெருப்பாய் தீக்கொழுந்து விட்டு எரிந்த போது, அந்த தடையை நீக்கியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டது மத்திய அரசு. அது மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போராட்டம் வழியே பாஜகவிற்கு எதிரான உணர்வுகளும் வலுப்பெற்றன. இதை அறிந்தவுடன் தங்களுக்கு வாராது வாய்த்த இந்த அடிமை பன்னீர்செல்வம் பதவியும், செல்வாக்கும் பறிபோய்விடக் கூடாது என்று பயந்து போன பாஜக அரசு பன்னீரை டெல்லி வரவழைத்து தடையை வாபஸ் வாங்கியது.
உண்மையில், அது போராடிய இளைஞர்களின் வெற்றி. ஆனால், அதை பாஜக ஆதரவு சக்திகள் பன்னீர் வெற்றியாக மாற்றி, சோஷியல் மீடியாவில் டிரண்ட் செட் செய்தனர். தற்போது, அதற்கு நன்றிகடனாக ஓபிஎஸ் மோடியை ஜல்லிக் கட்டு நாயகன் என்கிறார். உண்மையில் ஓபிஎஸ் அரசு ஜல்லிக்கட்டில் போராடிய இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய மீனவர்களை கடுமையாகத் தாக்கி, பல பொய் வழக்குகளை போட்டது என்பதே உண்மை!
பாஜக மற்றும் மோடி மீதான விசுவாசத்தில், இன்றைக்கு இந்தியாவிலேயே தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று ஓபிஎஸ்ம் அவர் மகன் ரவீந்திரநாத்தும் நிரூபித்து வருகின்றனர். ஒரு வகையில் அதிமுகவையே பாஜகவின் திராவிட விங்காக மாற்றிவிட்டார் ஓபிஎஸ். அவருக்கு போட்டியாக தானும், பாஜக விசுவாசத்தை காட்டினால் தான் பதவியை தக்க வைக்க முடியும் என எடப்பாடியும் பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத திட்டங்களுக்கும் கண்ணை மூடிட்டு செயல்பட வேண்டியவாராகி விட்டார்.
இந்த வகையில் தான் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குடியுரிமை மசோதா, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் திட்டங்கள்..என அனைத்துக்கும் துணை போனது அதிமுக ஆட்சி! தன்னுடைய சொந்த தொகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி எந்த கவலையும் இல்லாதவராகவே – அதிகார போராட்டத்திலும், சொத்துக் குவிப்பிலுமே (தோராயமாக ரூ75,000 கோடிகள் சொத்து) – பன்னீர்செல்வம் தன் பதவிக் காலம் முழுமையும் செலவிட்டார். அதுவும் தன் சொந்த தொகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கான நிலத்தை ஆக்கிரமித்ததால், மக்கள் அவருக்கு எதிராக போராடிய சம்பவங்களும் நடந்தன! இதனால் தான், பன்னீர்செல்வம் சொந்த தொகுதியிலேயே மக்களின் கடும் அதிருப்தியை சந்தித்தார். கரன்சி மழை பொழிய வைத்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என நம்புகிறார். ஆனால், தங்க தமிழ் செல்வன் அதற்கு எல்லா வகையிலும் செக் வைத்ததாக தெரிய வருது!
ஓபிஎஸ் வெற்றி, அது பாஜக வெற்றி பெற்றதாகத் தான் அர்த்தமே தவிர, அதிமுக வென்றதாக அர்த்தமில்லை. இது தான் அதிமுகவில் இருக்கும் அடிமட்டத் தொண்டன் தொடங்கி அனைத்து மக்களின் உணர்வுமாகும். அந்த அளவுக்கு சொந்த கட்சியின் நலனைவிட பாஜகவின் நலனே பிரதானமாக நினைத்து ஓபிஎஸ் இயங்குகிறார் என்பது அனைவருக்குமே தெரியுது! அதனால், எல்லாம் அவர் கவலைப்படுபவரல்ல, அவரை பொறுத்த வரை சுயநலமே முக்கியம். சுயமரியாதை தேவையற்றதாகும்!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவின் தயவால் முதல்வராக்கப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். தமக்குப் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறது என்கிற அதீத நம்பிக்கையில் இருந்தார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் அப்போது முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டார். இதனால் பதவி பறிபோகிறதே என கொந்தளித்த ஓ. பன்னீர்செல்வம், அதே பாஜகவின் தயவில்தான் தர்மயுத்தம் நடத்தினார். அன்று இதே ஓ. பன்னீர்செல்வத்துக்காகவே சசிகலாவும் பழிவாங்கப்பட்டார். . பன்னீர்செல்வம் எனும் தர்மயுத்த நாயகனை வைத்து அதிமுகவை ஒட்டுமொத்தமாக தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாஜக. பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு அதிமுகவில் ஐக்கியமாக சொன்னது டெல்லி. இதனையும் ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். பாஜகவின் பேச்சை நம்பி நம்பி ஒவ்வொன்றாக செயல்பட்ட ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலத்தின் கேள்விக்குறி அன்றே தொடங்கிவிட்டது. எடப்பாடியின் அதிகாரம் என்னதான் துணை முதல்வர் பதவி என்றாலும் அதிகாரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் இருந்தது. என்னதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்றாலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருந்தனர். இதனால் ரப்பர் ஸ்டாம்ப்பாகத்தான் அதிமுகவிலும் அன்றைய அதிமுக ஆட்சியிலும் ஓபிஎஸ் இருந்தார். சட்டசபை தேர்தலின் போதும் கூட ஓபிஎஸ் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சசிகலாவை மீண்டும் சேர்க்க சொன்னார்; அமமுகவை கூட்டணிக்கு கொண்டு வர சொன்னார்; தேமுதிகவை கூட்டணியில் தக்க வைக்க சொன்னார்… தம்முடைய ஆதரவாளர்களுக்கு சரி சமமாக சீட்டு கேட்டுப் பார்த்தார்.. ஆனால் எதனையும் எடப்பாடி கோஷ்டி கண்டு கொள்ளவில்லை. இதைபற்றி பாஜகவும் கவலைப்படாமல் ஒதுங்கிக் கொண்டது.|தேர்தலுக்குப் பின்னும் ஓபிஎஸ் போராட்டம் தொடருது. சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் ஜெயிப்பாரா? என்பதே கேள்விக்குறியாகவும்இருந்தது. ஒருவழியாக ஓபிஸ், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான ரேஸில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் தோற்றுப் போனார். அதேபோல் சட்டசபைக்கான நிர்வாகிகள் நியமனத்திலும் ஓபிஎஸ் படுதோல்வியைத்தான் தழுவினார். இப்போதைய நிலையில் அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சியாகவே உருமாறிவிட்டது. இப்போதுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு எங்கே சிக்கல் வருகிறது? எந்த சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்தால் தாம் இழந்து போன பதவி, பவுசு அனைத்தும் கிடைக்கும் என நினைக்கிறாரோ அதே சசிகலாவால்தான் ஓபிஎஸ் தனிமரமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் சசிகலாவுடன் தொடர்பு உள்ள அத்தனை பேரையும் நீக்கிக் கொண்டே வருகிறார்கள். இதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. இது ஓபிஎஸ் தமக்கு தாமே வெட்டிக் கொண்ட குழியாகவே பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ்-க்கு சிக்கல் ஏற்படப் போகுது.? இந்த நிமிடம் வரை சசிகலா தம்மை காப்பாற்ற அதிமுகவுக்குள் அதிரடியாக நுழைவார் என்பது ஓபிஎஸ் எதிர்பார்ப்பு. அப்படி சசிகலா தடலாடியாக ஏதேனும் செய்யக் கூடும் என்கிற சிறிய சந்தேகம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்தாலே போதும்… அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவது உறுதியாகிவிடும். அப்போது ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக பாஜகவும் சசிகலாவும் நிச்சயம் வரப்போவது இல்லை. ஓ.பி.எஸ். என்னும் மாஜி முதல்வர் நிச்சயம் தனிமரமாக அரசியல் எதிர்காலத்தை தொலைத்தவராக இருக்கப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம்ன்னா தனியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் தனக்கென தொண்டர்களையோ அல்லது நிர்வாகிகளையோ குறைந்த பட்சம் இரண்டாம் கட்டத் தலைவர்களையோ உருவாக்கவேயில்லை.அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டவர் தான் ஓபிஎஸ்.பாஜக கழட்டி விட்ட நிலையில் சசிகலாவைக் காரணம் காட்டி ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து கழட்டி விட்டால் ஓபிஎஸ் தனியாகத்தான் இருப்பார்.பாஜக கூட அவரைத் திரும்பிப் பார்க்காது.என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்.?