மக்கள் சிந்தித்து வாக்களித்தால் வருங்கால தமிழகம் வளம்பெறும்

தமிழகம் குட்டிச்சுவராக, முட்டாள்களின் கூடாரமாக, மடையர்களின் இருப்பிடமாக கேடுகெட்டு நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.கவும் போட்டிபோட்டுக்கொண்டு அறிவித்துக்கொண்டிருக்கும் மாதம் 1000 ரூபாய் இலவசம் 1500 ரூபாய் இலவசம் என்ற தேர்தல்கால அறிவிப்புகள் சான்றாகிக்கொண்டு இருக்கின்றது.
இலவசங்களையும், இட ஒதுக்கீடுகளையும் மாதாமாதம் பணத்தையும் விட்டெறிகிறேன் என்று சொன்னால் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓட்டுப் போடுவார்கள் என்ற மக்கள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. தமிழக மக்கள் அவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் .
தேர்வு எழுதாமல் பாசாகிவிட வேண்டும். படிப்பறிவில் போட்டிபோடாமல் இடஒதுக்கீட்டில் கல்வி, வேலை பெற வேண்டும் உழைக்காமல் மாதந்தோறும் காசு வரவேண்டும் என்பது போன்ற கேவலமான எண்ணங்கள் மக்களுக்கு வந்திருப்பதுதான் இதற்கு முழுமுதற்காரணம்.
எனக்கு ஓட்டுக்குக் காசு கிடைத்தால் போதும் உழைக்காமல் பணம் வந்தால் போதும் படிக்காமல், தேர்வு எழுதாமல் பட்டம் கிடைத்தால் போதும், அறிவுப் போட்டி இல்லாமல் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தால் போதும் என் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் நாடு எக்கேடுகெட்டால் நமக்கென்ன? எவன் ஆட்சி செய்து கொள்ளை அடித்தால் நமக்கு என்ன?என்ற மட்டமான எண்ணங்களே இதற்குக் காரணம்.
இவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவைகளினால் வருங்காலத்தில் பாதிக்கப்போவது இவர்களின் சந்ததியினர்தான்.
இப்போதே பார்த்தால் தெரியும் தாலுகா ஆபீஸ்களிலும், ஆர்.டி.ஓ.ஆபீஸ்களிலும், ரிஜிஸ்டிரார் ஆபீஸ்களிலும் நிர்வாகம் எவ்வளவு கேவலமாக நடக்கிறது என்பது.
உயர்அதிகாரிகள் உட்பட யாருக்கும் எந்த வேலையும் தெரியவில்லை. ஆதார் கார்டு முதல் ரேஷன்கார்டு வரை பட்டா பத்திரம் முதல் சிட்டா அடங்கல் வரை ஏகப்பட்ட தவறுகள் பிழைகள். அதை சரிசெய்ய நாம் தான் அலைய வேண்டும்.
ஒன்றும் இல்லை ஆதார் திருத்த மையத்தில் சென்று பாருங்கள் தினந்தோறும் 50 பேர் இனிஷியல் சரியில்லை, அட்ரஸ் மாறிவிட்டது மனைவி பெயர் மாறிவிட்டது என ஏகப்பட்ட பிழைகளுடன் நிற்கிறார்கள்!
இவை எல்லாமே யார் ஆண்டால் என்ன? நமக்கு கிடைப்பது கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு தனிமனிதனும் நினைப்பதால்தான்.
இந்த பலவீனத்தைப் புரிந்துகொண்டுதான்அரசியல் கட்சிகளும் சலுகைகளை அள்ளிவிட்டு ஓட்டு வேடை ஆடி ஜெயித்து நாட்டையும் கொள்ளை அடிக்கிறார்கள்.
இந்த வெள்ளைச்சட்டை வேஷக்காரர்கள் நாட்டிற்கு நல்லது செய்ய வா தேர்தலில் நிற்கிறார்கள்?
கடைசியில் பாதிக்கப்போவது அதே மக்கள்தான். விலைவாசிகள் பெட்ரோல், டீசல் விலைகளைப் போல ஏறும். லஞ்சம் தலைவிரித்தாடும். மாதம் 1000 ரூபாய் 1500 ரூபாய்க்கு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓட்டுப் போட்டவர்கள் மாதம் ஐம்மா தாயிரம் ரூபாய் விலை ஏற்றத்தினால் அதிகமாக செலவழிக்க நேரும்.
மக்கள் வேண்டுவது மாதம் 1500 ரூபாய் இலவசமா? ஐம்பதாயிரம் ரூபாய் அதிக செலவா?
நேர்மையான ஊழலற்றவர்களின் ஆட்சியா? இலவசங்களைக் காட்டி கொள்ளை அடிப்பவர்கள் ஆட்சியா?
மக்கள் சிந்தித்து வாக்களித்தால் வருங்கால தமிழகம் வளம்பெறும் இல்லையேல் நாடு நாசமாகப் போகும்