திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா?

நம்ம தமிழ்நாட்டின் பொருளாதாரமே அடிமட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை விவரமாக சொல்ல வேண்டாம் , இப்படி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களைப் போலவே, அரசும் தவித்து வரும் வேளையில், வருமானத்தை ஈட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மது, லாட்டரி, கனிமவளம் ஆகியவைகளை கையிலெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் சொல்றாங்க முதலாவதாக அரசின் மிக முக்கிய வருவாயாக இருப்பது மதுபானம் தான். கொரோனா காலகட்டத்திலும் அப்போ அப்போ திறக்கப்பட்ட டாஸ்மாக்கின் மூலம் ரூ.300 கோடி ரூ.400 கோடி என வருவாயை ஈட்டியது அரசு. ஆக மதுபானம் என்பது மாநில வருவாயை அதிகரிக்க முதல் வழி என்பது டாஸ்மாக் மூலம் தான்.

1983-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் இந்த Tamil Nadu State Marketing Corporation Limited சுருக்கமாக டாஸ்மாக். அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாயால், கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் அரசின் வருவாய் மூலங்களில் முக்கியமானதாகிவிட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் 5,200-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் கடந்தாண்டு புள்ளி விவரங்களின் படி, ஓராண்டுக்கு சுமார் ரூ.31,000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. 2019-ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வருமானம் ரூ.36.752கோடி. ஆக மதுபானங்கள் மூலம் வருவாயை ஈட்ட புதிய யுக்திகளை அரசு கையாளவுள்ளது.

அதன்படி, வடமாநிலங்களில் உயர்தர உணவகங்களில் செயல்படும் பார்களுக்கு தனியாக லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்று கிடையாது. இனி அந்த லைசென்ஸ்களை வழங்க அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருந்து பல லட்சங்களை கட்டணமாக பெறமுடியும். அடுத்தது. டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களால் அரசுக்கு பெரிதாக வரி வருவாய் இல்லை என்பதால், உணவகங்களில் பார் என்ற திட்டத்தை கையிலெடுத்துள்ளது அரசு. இதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தது ரூ.100கோடியாது வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்கி அதன் மூலம் கல்லா கட்டலாம் என அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை இருந்தது. ஆனால் பல சாமானிய மக்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாடியது. ஏழை மக்கள் இன்னும் ஏழையானார்கள். இதன் விபரீதத்தை உணர்ந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் லாட்டரி விற்பனையை தடை செய்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் அனுமதியளிக்க அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி ஜி.எஸ்.டி வரிக்கு முன்னால்-பின்னால் என தொழிலைப் பார்க்க வேண்டும். சீனா, அமெரிக்கா, அவ்வளவு ஏன் அருகிலுள்ள மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் பணம் சுழற்சியாகிறது. பழைய லாட்டரி விற்பனையில், சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி போன்றவை புழக்கத்தில் இருந்ததால் தான் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த வகை லாட்டரிகளுக்கு சட்டபூர்வ அனுமதி கிடைக்காத நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி லாட்டரி விற்பனை குறித்து சில வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. அதன்படி, போலிச் சீட்டுகளை அச்சடிக்க முடிக்காத அளவுக்கு லாட்டரி சீட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி, புழக்கத்தில் விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அடுத்ததாக, மணல் விற்பனைக்கு வருவோம். திமுக ஆட்சிக் காலத்தில் மணல் கடத்தலுக்கு அளவே இருக்காது என எதிர்க்கட்சி தலைவர்கள் முதல் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே மணல் விற்பனையில் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மணல் அள்ளுவது, லாரிகளுக்கு மாற்றுவது, குவாரிகளை கட்டமைப்பது வரை தனியார் வசமும், மணல் விற்பனையை அரசு ஏற்றுக் கொண்டால், மணல் விற்பனையில் இடைதரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யவும் முடியும், வருவாயும் நேரடியாக வரும். மணலுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்து, தட்டுப்பாடு இல்லாமல் முழுமையாக கண்காணித்தாலே நல்ல பெயருடன் சேர்த்து ஆண்டுக்கு ரூ.100கோடி வரை அரசுக்கு ஆதாயம் கிடைக்கும்.

இந்தியாவில் அதிகம் கிரானைட் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கிரானைட் விவகாரத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முறைகேடால், மதுரையில் இயங்கி வந்த குவாரிகள் செயல்படவில்லை. அதேநேரம் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் தற்போது 140 கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல குவாரிகள் எவ்வித அனுமதியும் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவுடன் இயங்கி வந்தன. இவற்றின் மூலம் ரூ.8,000கோடி வருவாய் வரவேண்டிய இடத்தில் ரூ.1,000கோடி மட்டுமே வந்தது.

தமிழ்நாட்டில் செயல்படும் 760 கிரானைட் தொழிற்சாலைகளில் வெட்டி, பாலிஷ் செய்யப்படும் கிரானைட் கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை அரசுக்கு கட்டணமாகத் செலுத்த வேண்டும். ஆனால் பல தொழிற்சாலைகள் இதைச் செய்யாமலேயே கற்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆக கிரானைட் குவாரிகளை முறைப்படுத்தி அதன் மூலம் வருவாயைப் பெருக்கலாம். அதேபோல, தனியாரிடமிருக்கும் தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.3,000கோடிக்கு குறையாமல் கஜானாவை நிரப்பலாம் என திமுக அரசு முடிவெடுத்திருக்கிறது.

இப்படி இருக்க எதிர்வரும் பட்ஜெட் தாக்கல் எதை வைத்து செய்யப்படுகிறது? அதற்காக தான் ரூ.15,500கோடி கடன் வாங்கியிருக்கிறதா என்ற எண்ணம் எழுகிறது. மொத்த மாநில உற்பத்தியில் 4% அரசின் பங்கு விற்பனை மூலமாக வெளிச் சந்தையிலிருந்து கடனாக ஒரு மாநிலம் பெற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தமிழக அரசு, கடந்த ஜூலையில் ரூ.6,500கோடியும், ஆகஸ்ட்டில் ரூ.5,000கோடியும், செப்டம்பரில் ரூ.4,000கோடியும் கடனாகப் பெற அனுமதி பெற்றுள்ளது. இதனைக் கொண்டு திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.