தடம் புரள்கிறதா தி.மு.க.,?

தாராபுரத்தில், பிரதமர் மோடி பேசுகையில், ‘தற்போது புதிதாக, ‘2ஜி’ ஏவுகணையை, தி.மு.க., – காங்., கூட்டணி ஏவி விட்டுள்ளது.இது பெண்களை இழிவுபடுத்த ஏவப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இதில், ‘புதிதாக’ என்ற சொல்லை கவனிக்க வேண்டும். பிரசாரத்தின் கடைசி கட்டத்தில் எதற்காக, ஆ.ராசா, தயாநிதி, லியோனி உள்ளிட்டோர் ஆபாச பேச்சை ஆயுதமாக எடுக்க வேண்டும்? ஸ்டாலின் ஒப்புதல்இல்லாமல் இதுபோன்ற சர்ச்சைக்கிடமான ஆபாச பேச்சை, கட்சியின் முன்னணி தலைவர்கள் முன்னெடுத்திருக்க முடியாது. விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் அவர்கள்இவ்வாறு பேசியிருப்பது, பிரதமர் மோடி குறிப்பிட்டதை போல ஒரு வியூகமாகத் தான் இருக்க வேண்டும்.

எதற்காக இந்த வியூகம்?

கருத்து கணிப்புகளில் இதுவரை முன்னணியில் இருந்து வந்த தி.மு.க., படிப்படியாக சறுக்கிக் கொண்டே வந்து, அக்கட்சியின் ஆலோசனை நிறுவனம் எடுத்த லேட்டஸ்ட் கணிப்பில் அ.தி.மு.க., முன்னிலைக்கு வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் கட்சித் தலைமையில் ஏற்பட்ட பதற்றம் தான், தி.மு.க.,வை ஆபாச பேச்சு என்ற திசையில் தள்ளி விட்டிருக்கிறது. கருத்து கணிப்புகள் மாற்றத்திற்கு காரணம் என்ன? பிரமாதமாக கட்டமைக்கப்பட்டதோற்றத்திற்கு பின் சறுக்கல் எங்கே ஏற்பட்டது? தி.மு.க.,வின் தேர்தல் வியூகம், ஐந்து விஷயங்களை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது. மறுமலர்ச்சி, மதவாதம், முறைகேடு, முதலாளித்துவம், மாநில சுயாட்சி ஆகியவை அந்த விஷயங்கள்.

மறுமலர்ச்சி

‘ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போறாரு’ என்ற கோஷம் தமிழகத்தில் ஒலிக்காத இடமில்லை. தமிழகத்தில் மறுமலர்ச்சி வரப்போகிறது என்பது போன்ற உணர்வை துாண்டும் கோஷம். ஆனால், மறுமலர்ச்சி தேவைப்படும் அளவிற்கு தமிழகம் துவண்டு விடவில்லை என்பது வாக்காளர்களின் கருத்தாக இருக்கிறது. ‘என் நலனே முக்கியம் எனும் உணர்வோடு கையுறை அணிந்து, தொண்டர்களிடம் கை குலுக்கி, அதே கையுறையோடு குழந்தைகளை துாக்கி மகிழ்ந்து, வெயில் படாமல் நிழல் பார்த்து நின்று, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை உண்மை போல் திரும்பத் திரும்ப பேசி பிரசாரம் செய்பவரை ‘தமிழகத்தின் விடியல்’ என்று சொல்வது நல்ல வேடிக்கை!’ என்கிறார் மதுரையில் ஒரு கல்லுாரி மாணவர்.

அடுத்து, ஸ்டாலின் வெளியிட்ட, இலவச மற்றும் சலுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் அப்படியே சுவீகரித்து ஒரு படி மேலே ஏற்றி உடனுக்குடன் அறிவித்தார் முதல்வர்தி.மு.க.,வின் முதல் சறுக்கல் இது.

மதவாதம்

‘அ.தி.மு.க., மதவாத சக்தியான பா.ஜ.,வுடன் இணைந்துவிட்டது’ என, தி.மு.க.,வும் கூட்டணி கட்சிகளும் செய்யும் பிரசாரத்தை முஸ்லிம்கள் முழுவதுமாக நம்பவில்லை.

திருப்பூரில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், ”எமது மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தி.மு.க.,வினர் தவறான தகவல்களை விதைத்துவிட்டனர். ”மத்திய அரசு இஸ்லாமியருக்கு எதிராக இயங்குவதாக பொய் பிரசாரம் செய்துள்ளனர். இந்தியாவில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துஉரிமைகளுடன் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்,” என்றார்.

அதே போல், ‘முத்தலாக் தடை சட்டம்’ முஸ்லிம் பெண்கள் மத்தியில், பா.ஜ., மீது நல்லஅபிமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம் வாக்கு வங்கி இப்படி தளர, மறுபக்கம், கருப்பர் கூட்டத்தோடு தொடர்புள்ளவர்களை வேட்பாளராக்கியது, தி.மு.க., வினரும், தி.மு.க., சார்ந்த அமைப்பினரும் காலகாலமாக ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது, பா.ஜ.,வின் வேல் யாத்திரை, ஸ்டாலினின் விபூதி அழிப்பு உள்ளிட்டவை ஒரு தரப்புஹிந்துக்களை, ‘நாம் ஒற்றுமையாக வாக்களித்து, நம் மதத்தை இழிவுபடுத்துபவர்களை வீழ்த்த வேண்டும்’ என்ற முடிவிற்கு முதல் முறையாக தள்ளி உள்ளது. இது தி.மு.க.,வின் இரண்டாவது சறுக்கல்

முறைகேடு

தமிழக முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கவர்னரிடம், ஸ்டாலின் சமர்ப்பித்தார். அந்த பட்டியலை பிரதமர் வாங்கி படிக்க வேண்டும் என்று நேற்று கூட கூறினார். ஆனால், இது வாக்காளர்கள்மத்தியில் எடுபடவில்லை. ‘குற்றம் கூறுபவர்கள், லட்சக்கணக்கான கோடி ஊழல் வழக்கில் சிக்கியவர்களை கூடவே வைத்துக்கொண்டு பேசும்போது நம்பிக்கை வரவில்லை’ என்பதுசிலரின் சுவாரசியமான பார்வை.இது தி.மு.க.,வின், மூன்றாவது சறுக்கல்

முதலாளித்துவம்

முதலாளித்துவத்திற்கு விலை போன மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்க புதிய சட்டங்களை கொண்டுவந்துள்ளது என்பது, தி.மு.க.,வின் கூற்று. ஆனால், முதல்வர் ஒரு விவசாயி என்ற பிம்பம் வாக்காளர்கள் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. அவரே அந்த சட்டங்களை எதிர்க்காதபோது, அவற்றை எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை என்ற முடிவில் பெரும்பாலான விவசாயிகள் உள்ளனர்.அண்டை மாநில விவசாயிகள் போலவே தமிழக விவசாயிகளும், வருமானத்திற்கான புதிய வழிகளை புது சட்டங்கள் உருவாக்கி தரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால், ஸ்டாலினின் இந்த பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை.இது தி.மு.க.,வின், நான்காவது சறுக்கல்.

மாநில சுயாட்சி

‘ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வாழ்ந்த திராவிட மண்ணில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது’ என்கிறார் ஸ்டாலின். ‘பா.ஜ., மீதுள்ள வெறுப்பினால், மத்திய அரசின் நல்லதிட்டங்களை மம்தாவை போல் இவரும் தடுத்து நிறுத்தி விடுவாரோ?’ என, மக்கள் பயப்பட ஆரம்பித்து விட்டனர்.

உண்மையில், மாநில சுயாட்சி பற்றி எல்லாம் இப்போது எந்த வாக்காளரும் கவலைப்படவில்லை. ‘நீட்’ தேர்வு பிரச்னை உச்சத்தில் இருந்தபோது மட்டும் சற்று பேச்சு இருந்தது. தேர்ச்சி சதவீதம் தேசிய சராசரியை தாண்டியவுடன் அதுவும் காணாமல் போய்விட்டது. அனைத்திற்கும் மேலாக, ‘ஆல் பாஸ்’ திட்டம் இது பற்றி பேசக்கூடிய மாணவர்களின் வாயை அடைத்துவிட்டது.இது தி.மு.க.,வின், ஐந்தாவது சறுக்கல்.

கடைசி வியூகம்

இப்படி சறுக்கி சறுக்கி கருத்து கணிப்புகளில் பின்னடைவு என்ற கட்டத்துக்கு வந்துவிட்டதால், அவசரமாக ஏதாவது செய்து இந்த சரிவை தடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் தான், ஜாதிய உணர்வுகளை துாண்டிவிட்டு அரசியல் லாபம் தேட வேண்டிய நிலைக்கு அது இறங்கியிருக்கிறது. அப்படியான வியூகமும், மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல், கள நிலவரங்களுக்கு தகுந்த மாதிரி நுணுக்கமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, தேர்ந்த தொழில்நுட்ப வியூக அமைப்பாளர்களின் தடம் அதில் புலப்படுகிறது.

கடைசி வியூகத்தின் முதல் வெளிப்பாடு, ராசாவின் பேச்சு அல்ல. அதற்கு சற்று முன்னதாக அல்லது அதை ஒட்டி வேகமாக பரப்பப்பட்ட வீடியோக்களில் தெரியும். கொங்கு மண்டலம் என குறிப்பிடப்படும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வேளாள கவுண்டர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் கருத்துக்கள் அந்த வீடியோக்களில் உள்ளன. ராசாவின் பேச்சு அந்தக் கருத்தை ஒட்டி அமைந்திருப்பது தற்செயலான நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை.

இன்னும் பின்னோக்கி பார்த்தால், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஒரு காலகட்டத்தில் பகிரங்கமாக மேடையில் வெளியிட்ட, ‘தலித் ஆண்மை’ குறித்த கருத்துகளையே தற்போதைய வீடியோ பதிவுகளும் எதிரொலிக்கின்றன.இந்த பேச்சுக்கள் கடத்தும் செய்தி என்ன?

‘ஆதிக்க சக்தியாக ராஜாங்கம் நடத்தும் ஜாதியை சேர்ந்த தமிழக முதல்வரையே இப்படி ஆபாச மாக பேச முடிகிறது என்றால், அதற்கு காரணம், தி.மு.க., என்கிற மிகப் பெரிய இயக்கத்தின் ஆதரவும் அரவணைப்புமே’ என்பது அந்த செய்தி. இது, மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் தலித் வாக்குகளையும் கொங்கு வேளாளர் இனங்களுக்கு எதிரான ஜாதியினரின் வாக்குகளையும் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் கொண்டு வரும் என்பது, தி.மு.க., வியூக அமைப்பாளர்களின் நம்பிக்கை.

அதே சமயம், தென் மண்டலத்தில் இதற்கு நேர் மாறான அணுகுமுறையை வியூகத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஏழு ஜாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற குடையின் கீழ் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் சட்ட திருத்தத்தை, தி.மு.க., கையில் எடுத்திருக்கிறது. தென் மாவட்டங்களில், ஏற்கனவே தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் மோதல் போக்கில் இருந்து வரும் இடை ஜாதிகளிடம் இந்த சட்ட திருத்தம் தொடர்பாக சில சந்தேகங்கள் நிலவுகின்றன. அதற்கு உரமிடும் விதமாக, ‘இப்போது தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரால் அழைக்கப்படும் ஜாதிகள், சில காலத்துக்குள் வேளாளர் என்ற முத்திரை குத்தப்பட்டு, சமூக படிக்கட்டில் உங்களுக்கு மேலே போய் உட்காரப் போகிறார்கள்’ என்ற அச்ச விதையை அவர்களின் மனதில் விதைக்க ஆரம்பித்துள்ளனர்.

விபரீதமான இந்த பொய் பிரசாரம் தொடங்கி சில நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்தாலும், மத்திய, மாநில உளவு பிரிவினருக்கு கோர்வையான விபரங்கள் கிடைத்ததாக தெரியவில்லை. ஜாதி ஒழிப்பு என்பதை தாரக மந்திரங்களில் ஒன்றாக கொண்டிருந்த ஒரு பெரியதிராவிட கட்சி, அதற்கு முற்றிலும் எதிரான திசையில் அடியெடுத்து வைத்திருப்பது, இந்த சட்டசபை தேர்தலின் மிக முக்கியமான தட மாற்றம் என்று வரலாறு பதிவு செய்யும்.

எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஒரே நேரத்தில், தலித் ஓட்டுகளையும் அவர்களுக்கு எதிரான இடை ஜாதியினரின் ஓட்டுகளையும் தன் பக்கம் இழுக்க, தி.மு.க., கையில் எடுத்திருக்கும் இந்த ஆபாச பேச்சு + பொய் பிரசார வியூகம் காலப்போக்கில் அக்கட்சிக்கே முடிவுரை எழுதக்கூடும் என, விமர்சகர்கள் கருதுகின்றனர்.