ஆட்சியில் பங்கு..!’ – விருப்பத்தில் பா.ஜ.க, காங்கிரஸ்… அ.தி.மு.க, தி.மு.க நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் பங்கு..!’ – விருப்பத்தில் பா.ஜ.க, காங்கிரஸ்… அ.தி.மு.க, தி.மு.க நிலைப்பாடு என்ன?

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்டமான வாக்குப்பதிவு, எந்தவித பெரிய அசம்பாவிதங்களுமின்றி அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக, வாக்கு எண்ணிக்கை என்ற கத்தி அரசியல் கட்சிகளின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைத்தால் பா.ஜ.க-வும், தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? என்ற கேள்வியை இரு கூட்டணிகளையும் உற்று நோக்கிவரும் அரசியல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசினோம்.

”இப்படிப்பட்ட சூழல் தமிழகத்தில் சமீப காலத்தில் நடந்ததே இல்லை. ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஒரு எம்.பி ஜெயித்தாலும் மத்திய கேபினட்டில் பங்கு கேட்கும் திராவிடக் கட்சிகள், அதேபோன்ற ஒரு பங்கினை மாநில கேபினட்டில் தேசியக் கட்சிகளுக்கு வழங்குவதில்லை. இந்த கொள்கையில் இரு கட்சிகளுமே ஒரே நேர்கோட்டில்தான் உள்ளது.

2006-ல் தி.மு.க 98 தொகுதிகளில் மட்டுமே வென்று, பா.ம.க, காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை 5 ஆண்டுகள் நடத்தியது. அப்போது கூட பா.ம.க-வையும், காங்கிரஸையும் கருணாநிதி அமைச்சரவையில் சேர்க்கவேயில்லை.

இந்தச் சூழலில், சமீபத்தில் அமைச்சர்களை தனது இல்லத்திற்கு அழைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘ஒருவேளை ஆட்சி தொடருமேயானால், பா.ஜ.க துணை முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறது’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால் எப்படி சாத்தியம்? என்றுதானே கேட்க வருகிறீர்கள். அதற்கும் ஒரு ஐடியாவை வைத்திருக்கிறது பா.ஜ.க.

அதாவது, உ.பி தேர்தலில் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றபோதும், எம்.எல்.ஏ-க்களில் ஒருவருக்கும் முதல்வர் பொறுப்புக் கொடுக்கவில்லை. மாறாக, எம்.பி-யாக இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது பா.ஜ.க. அதே ஃபார்முலாவில் யாரையேனும் தமிழகத்தில் துணை முதல்வராக்கி, இடைத்தேர்தல் நடத்தும் சூழலை உருவாக்கி, வெற்றி பெற வைத்துவிடுவார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் எவருக்கும் இதில் துளியும் விருப்பமில்லை என்பதால், தைரியத்துடன் பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடிப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தி.மு.க பக்கம் பார்த்தால், காங்கிரஸ் 25 தொகுதிகளைப் பெறுவதற்கே அழுது புலம்பும் சூழல் உருவானது. 2011-ல் 63 தொகுதிகளைக் கொடுத்து 5 தொகுதிகளையும், 2016-ல் 41 தொகுதிகளைக் கொடுத்து 8 தொகுதிகளையும் மட்டுமே காங்கிரஸ் ஜெயித்திருந்தது. இரண்டு முறையும் தி.மு.க-வின் ஆட்சிப்பறிபோனதற்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை ஸ்டாலின் மறக்கவில்லை. அதன் காரணமாகவே இந்தமுறை எவ்வளவோ காங்கிரஸ் கெஞ்சிப் பார்த்தும், அழுதுப் பார்த்தும் 25 தொகுதிகளுக்கு மேல் செல்லவில்லை.

இந்த 25-ல் வெற்றி பெறுவதையே பெரிதாக எண்ணிக்கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு, மாநில அமைச்சரவையில் பங்கேற்கும் ஆசை இருக்கிறது. ஆட்சி அமைந்த பின்னர் இரண்டுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்களை நியமிக்கும் எண்ணம் இருந்தால், அதில் ஒன்றை எங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் ஸ்டாலினிடம் பேசி இருப்பதாகச் சொல்லப்படுகிறது” என்பதோடு முடித்தார்.