தேர்தலுக்குத் தயாராகும் விஜய் மக்கள் இயக்கத்தினர்?!

விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவில் இருக்கிறாராம். அதற்காகவே கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்திகிட்டு வர்றாராம்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்குது. “மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக விஜய் அறிவிக்கவிருக்கிறாராம். அதற்கான முன்னோட்டமே இது” எனப் பேசப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தனது போட்டோ, மக்கள் இயக்கக்கொடி எல்லாத்தையும் பயன்படுத்த விஜய் அனுமதி கொடுத்தது அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மொத்தம் 115 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் 129 பேர் வெற்றிபெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இடங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றது தமிழக அரசியலில் பேசுபொருளாகவும் மாறியது. இதையடுத்து நடிகர் விஜய் வெற்றிபெற்றவர்கள், வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளை சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு விஜய் நிர்வாகிகளைச் சந்தித்ததுடன், அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டதாக நிர்வாகிகள் தரப்பில் பேசப்பட்டது.

விஜய், அப்போது பேர் சொல்லக்கூடிய வெற்றியைப் பெற்றதற்காக எல்லோரையும் பாராட்டியதுடன், “முதல்ல உங்க குடும்பத்தைப் பாருங்க… மக்கள் பணியையும் கவனிங்க. மக்களுக்குத் தேவையானதை அரசு மூலமாகச் செய்யுங்க. உங்களால் முடிஞ்சதையும் செய்யுங்க… நான் என்னால முடிஞ்சதை உங்க மூலமாகச் செய்வேன்ன்னு சொன்னதோட “அடுத்த தேர்தல் களத்துக்குத் தயாராகுங்க’ன்னு விஜய் ஓவ்வொருவரையும் தட்டிக்கொடுக்க மகிழ்ச்சியில் திக்குமுக்காடியிருக்கிறார்களாம் மக்கள் இயக்கத்தினர்.

விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை, அகில இந்திய பொதுச் செயலாளரான புஸ்ஸி.ஆனந்த் அனைவருக்கும் தீபாவளிப் பரிசாக அனுப்பி வைத்தார். இந்நிலையில் வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகின்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த புஸ்ஸி.ஆனந்த் உத்தரவிட்டிருந்தார்.

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் தலைமையில் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் கீழவாசல் அருகேயுள்ள திருமணம் மண்டபம் ஒன்றில் மாவட்டத் தலைவர் விஜய்.சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

`2021-ல் உள்ளாட்சி, 2026-ல் தமிழகத்தில் தளபதி விஜய் ஆட்சி’ அமைவதற்கு அனைவரும் முழு உழைப்பைக் கொடுக்கணும். திமுக, அதிமுக-வுக்கு இணையாக நம்முடைய செயல்களை வேகப்படுத்தணும் எனப் பல நிர்வாகிகள் பேசியிருக்காங்க. ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு, கணிசமான வெற்றியைப் பெற வேண்டும் என விஜய் தரப்பு நினைக்கிறதாம்.

அதற்காக மாவட்டம்தோறும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகளின் மனநிலை என்னவென்று அறிந்துகொள்வதற்காக விஜய் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தியிருந்தார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் கூறிய கருத்துகளை மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்துக்கு அனுப்பிவைப்பார்களாம். அதன் பிறகு அவர் அதை விஜய் கவனத்துக்குக் கொண்டு செல்வாராம். மக்கள் இயக்க நிர்வாகிகளைப் பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட குஷியுடன் தயாராகிவருவதாகவே பல மாவட்டங்களில் கருத்துகளைக் கூறியுள்ளனர்.`

அதற்கு ஏற்றாற்போல் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதுடன், அவர்களைக் கண்டறிந்து வாக்காளர் லிஸ்ட்டில் சேர்ப்பதில் தமிழகம் முழுவதிலும் ஆர்வம் காட்டிவர்றாங்களாம். புதிதாகச் சேர்க்கப்படும் இளம் வாக்காளர்கள் தங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள் என நினைக்கும் மக்கள் இயக்கத்தினர், அதில் ஆர்வம் காட்டுவதுடன் மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் தீவிரம் காட்டிவருகின்றனர். தேர்தல் களத்துக்குத் தயாராவது ஒரு புறம் இருந்தாலும், விரைவில் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதற்கான முடிவில் இருப்பதாகச் சொல்லப்படுது. அதற்காகவே கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு நிர்வாகிகளின் கருத்துகள் பெறப்பட்டதாம். இதுபோல் இன்னும் பல முன்னெடுப்புகளை அரங்கேற்றத் தயாராகியுள்ள விஜய், மக்கள் இயக்கப் பணியில் இன்னும் வேகமெடுப்பார் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பட்டுக்கோட்டை நகரத் தலைவரான ஆதி.ராஜாராமிடம் என்ன சொல்றார்னா`அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி.ஆனந்து அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்துகளை எடுத்துவைத்தோம்.முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடணும் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதைப் பற்றி நினைக்காமல் நாம் தேர்தல் களத்துக்கு வரணும். அதிமுக, திமுக கட்சிகளுக்கு இணையான வேகத்துடன் பயணித்து வெற்றிகளைப் பெற்று தளபதி விஜய் முன் வைக்க வேண்டும்.

மக்களோடு மக்களாக இருந்தாலே போதும்… மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என எனது கருத்தை எடுத்துக் கூறினேன். இதேபோல் ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மக்கள் பணியில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருவதால் மக்கள் எங்கள்மீது எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தளபதி விஜய்யின் எண்ணத்துக்கேற்ப எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்” என்றார்.