ஆரம்பமே சறுக்கிய அதிமுக, பாமக.. சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?.. பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் தாமதத்திற்கு பின் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
9 மாவட்டங்களில் 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சட்டசபை தேர்தலுக்கு பின் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் இதில் பதிவானது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த தேர்தல் நடந்த. இந்த தேர்தலில் 41500 வாக்கு பெட்டிகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது. 14573 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது.
காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரம்பகட்ட நிலவரங்களின்படி திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது. மாவட்ட கவுன்சிலருக்கான 140 இடங்களில் 7 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் 2, கள்ளக்குறிச்சியில் 2, தென்காசியில் 2, செங்கல்பட்டு 1 என்று 7 மாவட்ட கவுன்சிலருக்கான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
மாவட்ட கவுன்சிலருக்கான இடங்கள் எதிலும் அதிமுக முன்னிலை பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பாமகவும் ஒரு மாவட்ட கவுன்சிலருக்கான இடத்திலும் முன்னிலை பெறவில்லை. நாம் தமிழர் போன்ற இதர கட்சிகளும் இந்த மாவட்ட கவுன்சிலருக்கான இடங்கள் எதிலும் முன்னிலை வகிக்கவில்லை. ஆரம்பமே அதிமுக, பாமக சறுக்கி உள்ளது.அதேபோல் இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலருக்கான 1380 இடங்களில் 5 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வேலூரில் 2, கள்ளக்குறிச்சியில் 3 என்று மொத்தம் ஒன்றிய கவுன்சிலருக்கான 5 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இங்கும் அதிமுக, பாமக முன்னிலை பெறவில்லை. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலிலும் அதிமுக எங்கும் முன்னிலை பெறவில்லை.
திமுகதான் தொடக்கத்தில் இருந்து இங்கு முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் கள்ளக்குறிச்சி போன்ற பாமக, அதிமுக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் கூட திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை குறி வைத்துதான் பாமக தனித்து களமிறங்கியது. ஆனால் அங்கேயே திமுக முன்னிலை வகிப்பது அதிமுக, பாமக கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாமகவிற்கும், அதிமுகவிற்கு இருக்கும் பாரம்பரிய வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் திமுக சட்டசபை தேர்தல் வெற்றியை உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலும் இது ஆரம்பகட்ட நிலரம்தான். போக போக நிலவரம் மாறும் வாய்ப்புகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும் திமுகவின் உதய சூரியன் சின்னம் 133 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றியை தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தக்க வைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.