தமிழகத்திற்கு பறக்கும் உதவி.. கரம் தரும் அமெரிக்க சமூகநீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன்.. அசரவைத்த பிடிஆர்!

தமிழகத்திற்கு  ஆதரவுக்கரம் நீட்டிய அமெரிக்க சமூகநீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன் ! ஆச்சரியப்படவைத்த பிடிஆர்!

தமிழகத்திற்கு கொரோனா வேக்சின் மற்றும் மருத்துவ உதவிகளை செய்வதாக அமெரிக்காவின் மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இவர் நடத்திய நெகிழ்ச்சியான ஆலோசனை கூட்டத்தில் ஜெஸ்ஸி ஜாக்சன் தமிழகத்திற்கு உதவுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்வதேச நாடுகளிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்று வருகிறார். பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தொடங்கி தடுப்பு நடவடிக்கைகளுக்கான வல்லுநர் ஆலோசனை வரை பல உதவிகளை அமைச்சர் பிடிஆர் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் படித்தவர் என்பதாலும், சர்வதேசஅளவில் நிறைய நண்பர்களை கொண்டவர் என்பதால் அமைச்சர் பிடிஆர் மூலம் தமிழகத்திற்கு பல சர்வதேச உதவிகள் கிடைத்து வருகின்றன. அப்படி ஒரு உதவிதான் அமெரிக்காவின் மனித உரிமை செயற்பாட்டாளர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் மூலம் தமிழகத்திற்கு வர உள்ளது.
யார் இந்த ஜெஸ்ஸி ஜாக்சன் ? அமெரிக்க வரலாற்றின் மாபெரும் கறுப்பின போராளிகளில் ஒருவர்தான் ஜெஸ்ஸி லூயிஸ் ஜாக்சன் சீனியர். அமெரிக்காவில் தற்போது ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மதிக்க கூடிய, மிகப்பெரிய கறுப்பின தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர். அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக, உரிமைக்காக களத்தில் நின்று போராடியவர். திராவிட இயக்கம் இந்தியாவில் 1950-1970களில் நீதிக்கட்சியும், திராவிட இயக்கங்களும் மனித உரிமைகளுக்காக, சமூக நீதிக்காக போராடிக்கொண்டு இருந்த போது.. அதே காலத்தில் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியருடன் சேர்ந்து போராடியவர்தான் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர். இரண்டு போராட்டங்களின் நோக்கமும் ஒன்றுதான்.. சமநீதி.. சம உரிமை!
அமெரிக்க மக்களின் மனசாட்சி என்று போற்றப்பட்டவர்தான் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர்.

தமிழகத்தில் நீதிக்கட்சி, திராவிட இயக்க தலைவர்கள் தங்கள் பேச்சுக்கள் மூலம் மக்களை எப்படி ஒருங்கிணைத்தார்களோ அதே நாட்களில்தான் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தனது உணர்ச்சிகரமான பேச்சுக்கள் மூலம் அமெரிக்க நாட்டிலும் மக்களை பாகுபாடுகளுக்கு எதிராக ஒருங்கிணைத்தார். இப்படி திராவிட இயக்கங்களோடு கொள்கை ரீதியாக, உணர்வு ரீதியாக ஒத்துப்போகும் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர்தான் தற்போது தமிழகத்திற்கும் உதவ முன் வந்துள்ளார். நிதி அமைச்சர் பிடிஆர் மூலம்தான் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியரின் உதவி தமிழகத்திற்கு கிடைக்க உள்ளது. ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் உடன் சமீபத்தில் பிடிஆர் நடத்திய ஜும் மீட்டிங் ஒன்றில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து பிடிஆர் ஜாக்சனிடம் விவரித்தார். அதோடு அமெரிக்காவிடம் இருந்து தமிழகத்திற்கு உதவி கிடைக்க வேண்டும், அதிபர் ஜோ பிடனுடன் இது தொடர்பாக நீங்கள் பேச வேண்டும் என்று ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியரிடம் பிடிஆர் கோரிக்கை வைத்தார். இந்த மீட்டிங்கில் அமெரிக்க பிரநிதிகள் சபை உறுப்பினரும், தமிழருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார். இதில் அமெரிக்காவிடம் பயன்படுத்தாடாமல் இருக்கும் 8 கோடி ஆஸ்டர்செனகா வேக்சின்களையும், கொரோனா மருந்துகளையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று பிடிஆர் கோரிக்கை விடுத்தார். 8 கோடி வேக்சின்களை வெளிநாடுகளுக்கு அளிக்கும் முடிவில் அமெரிக்கா உள்ளதால், அதில் தமிழகத்திற்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று பிடிஆர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியரிடம் கோரிக்கை வைத்தார். இதை கேட்ட ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினார். ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் சிறந்த தலைவர். உதவிகள் உங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கும் உதவிகள் வந்து கொண்டு இருக்கிறது . விரைவில் விடியல் வர இருக்கிறது. மன உறுதியோடு இருங்கள். கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெல்வோம். சுவாச கருவிகள், ஆக்சிஜன், மருந்துகளை அனுப்பி வைக்க போகிறோம். மனதை தளர விடாதீர்கள். உங்களுக்கு உதவிகள் வர போகின்றன. நன்றி என்று ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த ஆலோசனையில் அமைச்சர் பிடிஆர் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதோடு ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர் இது தொடர்பாக அதிபர் ஜோ பிடன் தரப்பிடம் விரைவில் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பிடிஆர் மூலம் நடத்தப்பட்ட இந்த மீட்டிங் காரணமாக தமிழகத்திற்கு பெரிய உதவிகள் வர வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

அமெரிக்காவின் ஒரு மனித உரிமை சமூக நீதி போராளி ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர்.. இந்தியாவின் அதே கொள்கை கொண்ட ஒரு கட்சி ஆட்சி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். தமிழகத்திற்கு கொரோனா என்னும் இக்கட்டான சூழ்நிலையில் எல்லைகள் கடந்து எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் உதவிகள் வருவது உண்மையில் ஆச்சரியப்பட வைக்கின்றது.. எப்போதும் நாம் முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர அச்சப்பட்டு பின்னோக்கி செல்லவே கூடாது என்று கூறியவர் ஜெஸ்ஸி ஜாக்சன் சீனியர்.. அவரின் கூற்றுப்படி தமிழகம் முன்னோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது!