எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் !

ஓபிஎஸ்க்கு எதிராக அதிரடி? அதிமுகவை புரட்டிப் போட வருகிறது ‘சசிகலா புயல்’? குஷியில் ஓபிஎஸ் கோஷ்டி

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வரும் 16-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதல் முறையாக சென்று மரியாதை செலுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அக்டோபர் 26-ந் தேதி எம்ஜிஆர் நினைவிடத்துக்கும் செல்ல உள்ளாராம் சசிகலா. இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்படலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூழ்நிலைகள் காரணமாக தேர்தல் நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுக தாமாகவே தம் வசமாகும் என எதிர்பார்த்தார் சசிகலா. அதுவும் நடக்கவில்லை.

அதனால் ஆடியோ அரசியல் யுத்தத்தை கையில் எடுத்தார் சசிகலா. ஆயிரக்கணக்கான அதிமுக, அமமுக நிர்வாகிகளுடன் தினந்தோறும் தொலைபேசியில் பேசி அந்த உரையாடலை பதிவு செய்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார் சசிகலா. அதிமுகவின் தோல்வி, ஓபிஎஸ் மீதான கரிசனம், இபிஎஸ் மீதான கோபம் என நவரசம் கலந்த கலவையாக சசிகலாவின் ஒவ்வொரு ஆடியோவும் இருந்தது. ஆனாலும் மிகப் பெரிய அளவு அந்த ஆடியோ யுத்தம் ஒர்க் அவுட் ஆகவில்லை.

பின்னர் தினகரன் வீட்டு திருமணம் மூலம் ஏதேனும் சசிகலா அண்ட்கோ திட்டமிடுமோ என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவும் நடக்காமல் போனது. அதேநேரத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, பையனூர் பங்களா முடக்கம் என சசிகலாவை சுற்றித்தான் இன்னமும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் சசிகலாவுக்கு யாரும் இதுவரை என்ட் கார்டு போடவும் இல்லை.

இந்நிலையில்தான் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முதன்முறையாக ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கின்றன அவரது நெருக்கமான வட்டாரங்கள். அதிமுகவின் 50-வது ஆண்டு துவக்க விழாவை அக்டோபர் 17-ந்தேதி விமரிசையாக கொண்டாட அதிமுக தலைவர்கள் திட்டமிட்ட்டுள்ளனர். இதனை தவிடுபொடியாக்கும் வகையில் ஒருநாள் முன்னதாக அக்டோபர் 16-ந் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் சசிகலா.

அத்துடன் இல்லாமல் அடுத்ததாக அக்டோபர் 27-ந்தேதி சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ராமாவரத்திலுள்ள எம்.ஜி.ஆர்.இல்லத்துக்கும் செல்லவும் முடிவு செய்திருக்கிறாராம் சசிகலா. இதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வின் ஆயிரம் விளக்கு என்.வைத்தியநாதனிடம் ஒப்படைத்துள்ளனராம். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியே வரும் சசிகலா, எடப்பாடிக்கு எதிராக அதிரடி கிளப்பக் கூடும் என்கின்றன சசிகலா ஆதரவு வட்டாரங்கள்.
அண்மையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது சசிகலா, தினகரனை சேர்க்க மறுத்த எடப்பாடியின் வியூகம்தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என மறைமுகமாக சாடியிருந்தார் ஓபிஎஸ். இதனால் எடப்பாடி தரப்பு ரொம்பவே கொந்தளித்து போயிருந்தது. இப்போது சசிகலாவும் அரசியல் களத்துக்கு வர முடிவு செய்துள்ளார். இது ஓபிஎஸ் தரப்பை ரொம்பவே குஷிப்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.