உள்ளாட்சி அமைப்புகள் கூண்டோடு கலைப்பு..!மீண்டும் புதுத் தேர்தல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. ஆனால் வரும் ஆக்ஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வானவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 22-ந்தேதி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், “இனி கால அவகாசம் தர முடியாது. செப்டம்பர் 15-ம்தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைய அநேகமாக ஒரு மாத காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்போதே தயாராகி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதலில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிறகு ஜெயலலிதா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என இரண்டாக பிரித்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடைபெற்றது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடைபெற்ற நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிதாக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிப்பது என்கிற புதிய வியூகத்துடன் மாவட்டச் செயலாளர்களை மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக பரஸ்பரம் 50 சதவீத இடங்களை வென்றன. இதனால் எந்த கட்சிக்கு அதிக லாபம் என்கிற கேள்வி எழுந்தாலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. கவுன்சிலர் பதவிகளை திமுக பெரும்பான்மையாக வென்ற இடங்களில் அமைச்சர்களின் தலையீடு காரணமாக தலைவர் பதவிகளை அதிமுகவினர் கைப்பற்றினர். இப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு பாதகமான சில விஷயங்கள் நடந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் ஒன்பது மாவட்டங்களில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆறு மாதங்கள் அவகாசமும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அன்றைய தினமே மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பனுடன் ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அன்றே ஸ்டாலின் இவ்வளவுஅவசரமாக அந்த ஆலோசனையை நடத்தியதற்கு காரணமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அவருக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்கிறார்கள். மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதிலும் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மேலும் கடந்த ஆட்சியை போல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்றெல்லாம் பிரிக்காமல் கலைஞர், ஜெயலலிதா இருந்த போது நடப்பது போல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் நினைக்கிறார்.

அதே சமயம் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரும் கணிசமாக வென்றுள்ளனர். எனவே உள்ளாட்சி அமைப்புகளை கூண்டோடு கலைத்தால் அவர்களும் பாதிக்கப்படுவர். ஏனென்றால் அவர்களுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் வரை பதவிக் காலம் இருக்குது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று சிந்திக்கிறார் ஸ்டாலின் ? கட்சிக்காரர்கள் அதிருப்தி இல்லாமல் எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்களை சந்தித்தள்ளார் மு.க.ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்களை பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாம்.

கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு மறுபடியும் உறுதியாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழியுடன் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்கலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்களாம். திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் இதன் மூலம் எளிதாக தேர்தலில் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும் மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் தொடரலாம் என நினைப்பார்கள் என்றும் எடுத்துக்கூறியுள்ளனர். இதனை அடுத்து உள்ளாட்சித்தேர்தலில் தீவிரம் காட்டி வரும் ஸ்டாலின் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்த உடன் உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பார் என்கிறார்கள்.கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.