இன்று எக்சிட் போல் முடிவுகள்!

 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்பான, ‘எக்சிட் போல்’ இன்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடந்தத் தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளை பிரபல செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட இருக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும், திமுக கூட்டணி அல்லாத மற்ற கட்சிகள் 50 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் என்று திமுகவுக்கான தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றிய ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்., கடந்த 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இப்படித்தான் எக்சிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாகத் தான் இருந்தது. ஆனால் மக்கள் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன என்கிறார்கள் அதிமுகவினர்.

2016 எக்சிட் போல் முடிவுகளும் மக்கள் முடிவுகளும்!

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகளில் பல முரண்பாடுகளாகவே போயின.

நியூஸ் நேஷன் நிறுவனம் வெளியிட்ட எக்சிட் போல் முடிவில் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக 95-99 இடங்களில் வெல்லும் என்றும், திமுக 114-118 இடங்களில் வெல்லும் என்றும் கூறியிருந்தது.

இந்தியா டுடே – ஆக்சிஸ் எக்சிட் போல் முடிவில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக 99 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டது.

சி ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய எக்சிட் போல் முடிவில் அதிமுக 139 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்குமென்றும், திமுக கூட்டணி 78 வரை வரும் என்று கூறப்பட்டது. அதே மாதிரி அதிமுக கூட்டணி 136 இடங்களிலும் திமுக கூட்டணி 97 இடங்களிலும் ஜெயிச்சுது.

நியூஸ் எக்ஸ் திமுக 140 இடங்கள், அதிமுக 90 இடங்கள் என எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டிருந்தது.

ஏபிபி – நெல்சன் நிறுவனம் எக்சிட் போல் முடிவில் திமுக 132 இடங்களிலும், அதிமுக 95 இடங்களிலும் வெல்லும் என்று குறிப்பிட்டது.

இத்தனை எக்சிட் போல் முடிவுகளில் சி ஓட்டர்ஸ் மட்டுமே அதிமுகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று 2016இல் கூறியது. மற்ற நிறுவனங்களின் எக்சிட் போல் கணிப்புகள் எல்லாம் பொய்த்து, சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் கணிப்பே மக்கள் முடிவோடு ஒத்துப்போனது.

இந்த நிலையில் 2021 எக்சிட் போல் முடிவுகளையும் வெளியிட தயாராகிவிட்டன செய்தி நிறுவனங்கள்

மே 2ஆம் தேதிதான் மக்கள் முடிவு மகேசன் முடிவு என்றாலும், இந்த எக்சிட் போல் எனப்படும் பூசாரிகளின் முடிவுகளுக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.