தமிழக அமைச்சரவை மே 2-வது வாரத்தில் மாற்றம்! எட்டு மந்திரிகளுக்கு ‘ கல்தா’ கொடுக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுது.!!திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எப்படி செயல்பட்டிருக்கின்றனர், துறைவாரியாக எப்படியெல்லாம் பணியாற்றியிருக்கின்றனர், என்னென்ன சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர், என்னென்ன புகார்கள் வந்திருக்குதுன்னு அலசி ஆராய்ஞ்சு வர்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் அடிப்படையிலேயே அமைச்சரவையை மாற்றியமைக்கவும் ஆயத்தமாகி வர்றாராம். மேலும், ஜெயலலிதாவை போல் சுழற்சி முறையில் புதுமுகங்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் கட்சியினர் மத்தியில் புதிய நம்பிக்கை பிறக்கும் என்பதும் முதல்வரின் கணக்காக உள்ளது. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளில் ஒரு சர்ச்சையில் கூட சிக்காமல் தாங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என்றிருந்திருக்கிறார்கள். மற்றபடி மூத்த அமைச்சர்கள் உட்பட பலரும் கூட ஏதேனும் ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி முதல்வருக்கு நெருக்கடியையும், தர்ம சங்கடமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். புதுமுகங்கள் இருபத்துக்கும் மேற்பட்டோர் முட்டி மோதும் நிலையில் யாருக்கு ஏறுமுகத்தை கொடுக்கப் போகிறார் முதல்வர் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், மே இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்கவும், சரியாக செயல்படாத எட்டு அமைச்சர்களுக்கு ‘கல்தா’ கொடுக்கவும், முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.புதுமுகங்கள் சிலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்குவதோடு, சிலரின் இலாகாக்களை மாற்றியமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், 2021 மே, 7ல், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தது.ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவதற்குள், கடந்த ஆண்டு மார்ச்சில், முதல் முறையாக அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சரானார்.இதன்பின், டிசம்பரில் முதல்வரின் மகனும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதிக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
அவர், விளையாட்டுத் துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக பதவியேற்றார். மேலும், 10 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டு, சிலருக்குகூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டன.தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மே, 7ம் தேதி அதாவது நாளையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடையுது. இதுவரை அமைச்சர்களின் செயல்பாடுகள், நிர்வாகத் திறன் குறித்து, உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனம் வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கைய வாங்கி வச்சிருக்கார்.அதில், மூத்த அமைச்சர்கள் சிலர் சரியாக பணியாற்றாதது தெரிய வந்துள்ளது. எனவே, அமைச்சரவையை மே இரண்டாவது வாரத்தில் மாற்றியமைக்க, முதல்வர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள்ல என்ன சொல்றாங்கன்னா.? முதல்வரிடம் தரப்பட்டுள்ள அறிக்கையில், சில அமைச்சர்கள் போதிய நிர்வாகத் திறன் இல்லாமலும், தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்காமலும் இருப்பதுடன், மக்களின் அதிருப்திக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், மூத்த அமைச்சர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர்.துறை அதிகாரிகளிடம் கூட, அவர்கள் சரி வர நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், முதல்வர் ஸ்டாலின், அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். கட்சி, ஆட்சி நலன் கருதி, அவர்களை மாற்றி, புதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார்.இதன்படி, அமைச்சர்கள் தியாகராஜன், ராமச்சந்திரன், கண்ணப்பன், காந்தி, நாசர், ரகுபதி, கணேசன், கயல்விழி உட்பட எட்டு பேரின் அமைச்சர் பதவி பறி போகலாம்.
ஸ்டாலினை சந்தித்த பி.டி.ஆர். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தயாராக எடுத்துச் சென்ற கடிதத்தை கொடுத்ததாகவும் சொல்லப்படுது. அதாவது, ஸ்டாலினாக, ராஜினாமா செய்யுங்கள்னு சொல்றதுக்கு முன்னாடியே, நாமளே ராஜினாமா செஞ்சிடலாம்ங்கிற முடிவை எடுத்து ராஜினாமா கடிதத்தை எடுத்துச் சென்றுள்ளார் பி.டி.ஆர். அதனை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. கடிதத்தை படித்து பார்த்துவிட்டு, அதனை மீண்டும் பி.டி.ஆரிடமே கொடுத்து விட்டார் ஸ்டாலின். இவர்கள் இருவரின் சந்திப்பில், ஆடியோ விவகாரம் பற்றி பேசி இருக்கிறார் முதல்வர். டெல்லியிலிருக்கும் ஒரு பெண் பத்திரிகையாளர் குறித்தும், அவரிடம் பேசிய சில விஷயங்கள் குறித்தும் பிடிஆர் பேசி இருக்கிறார். இந்த ஆடியோ விவகாரம் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீள்வதற்காகத்தான் இந்த ராஜினாமா கடிதம். என்னால் உங்களுக்கும் ஆட்சிக்கும் கெட்டப்பெயர் உருவாவதை ஏற்கமாட்டேன். ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு எனக்கு தண்டனை கொடுங்கள், என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். பி.டி.ஆர். தனது தவறை உணர்ந்து பேசியதில் ஸ்டாலினின் மனம் சடாரென்று இறங்கியுள்ளது. அதனால் ராஜினாமா கடிதத்தை திரும்பி தந்ததுடன், நீங்கள் போய் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும், ராஜினாமா கடிதத்தை ஸ்டாலினின் மேஜையிலேயே வைத்துவிட்டு, “இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது பயன்படும் ” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் பி.டி.ஆர். ! இந்த நிலையில், பி.டி.ஆரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு அவரை அமைச்சரவையிலிருந்து விடுவியுங்கள் என சீனியர் அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்துகிட்டு வர்றாங்களாம். இதனால், அவரது ராஜினாமாவை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார் முதல்வர்.தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில் துறை அமைச்சராகவும் இலாகா மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்தி பரவி வருது?.
அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது புதிய அமைச்சர்களாக டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், டாக்டர் எழிலன், அப்துல் வஹாப், இனிகோ இருதயராஜ், தமிழரசி, காதர் பாட்சா முத்துராமலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர், அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுது.அமைச்சர்கள் பெரியசாமி, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன், சுப்பிரமணியன், மகேஷ் உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகாவும்,அவரவர் தகுதி, திறமை,செயல்பாடு அடிப்படையில் மாற்றப்படலாமாம்.பத்திரப்பதிவு துறை அமைச்சரின் இலாகாவை பறிக்கவும் திட்டம் என சொல்லப்படுது.
சிலருக்கு முக்கிய துறைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்குது. இதுக்குப் பதிலாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் எம்.எல்.ஏ ராஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்குது.ஒருவேளை ராஜாவுக்கு வாய்ப்பில்லை என்றால், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம்ங்கிற தகவலும் வெளியாகி இருக்குது.
அதேபோல, திருவாரூர் மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருக்கும் நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அத்துடன் சில அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளிநாடு செல்லவும் ஸ்டாலின் திட்டம் போட்டிருக்கிறாராம்., தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதில், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், அதற்கேற்ற வகையில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், சிங்கப்பூர், ஜப்பான், மலேஷியா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.
கடந்த 2ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இதப் பத்தி முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் வழக்கமான உடல் நல பரிசோதனைக்காகவும், மே 20ம் தேதிக்கு பின்னாடி, முதல்வர் லண்டன் போகப்போறதாகவும் சொல்லப்படுது. விரைவில், மாமல்லபுரத்தில் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் தங்கும் முதல்வர், அப்போது அலுவல் பணிகளை கவனிக்கவும், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்குது.என்ன முடிவு எடுக்கப் போறாரோ முதல்வர்னு சீனியர் அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருக்கிற நிலைல புதிய எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கிடைக்கும்ங்கிற கலர் கலர் கனவுகளோடு சுத்திக்கிட்டு வர்றாங்களாம். என்ன செய்யப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்ங்கிறதைப் பொறுத்திருந்து தான் பாக்கணும்.
