‘ஜியோ’ தொலை தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், இனி, மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின், ஜியோ தொலை தொடர்பு சேவை நிறுவனம், அதிரடியான சலுகை அறிவிப்புகளுடன், ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஜியோ இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களை இலவசமாக அழைக்கலாம். இதற்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், நேற்றுடன் இந்த இலவச சேவையை, ஜியோ நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜியோ வாடிக்கையாளர்கள், இனிமேல், மற்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை அழைக்க, நிமிடத்துக்கு, 6 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அதற்கு சமமான இணைய சேவையை, அவர்கள் பெறலாம். அதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், சக ஜியோ வாடிக்கையாளர்களை, வழக்கம்போல் இலவசமாக அழைக்கலாம். ‘லேண்ட்லைன்’ இணைப்புகளுக்கும் கட்டணம் கிடையாது.’இன் கமிங், மிஸ்டு கால், அவுட் கோயிங்’ போன்றவற்றுக்கு, ஏர்டெல் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு, ஜியோ, கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஜியோ நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், ‘டிராய்’ எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், விதிமுறைகளை மாற்றும் வரை, இந்த நடவடிக்கை தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.