கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சி!

அடுத்த பிரதமர் யார் ?கார்கே VS மோடி ?
மோடி அலை காரணமாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக தொடருது. இன்னும் சரியா ஒரு வருடத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் வென்று வரலாறு படைக்கும் நிலமை தான் இப்ப இருக்குது.

இதை தடுக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரான பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியிருக்காரு.?. இவரது முயற்சியால் எதிர்க்கட்சித் தலைவர்களில் பெரும்பாலானோர் நாளை பிஹாரின் பாட்னாவில் கூடுகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவதுங்கிறதப்பத்தி ஆராய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. ஏன்னா அந்தப்பதவிக்கு அவங்ககிட்டேயே பலரும் போட்டியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை வெல்ல அவருக்கு நிகரான ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியம்.

இந்நிலையில் காந்தி குடும்பத்தினரை பிரதமர் வேட்பாளராக்க திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளைத் தவிர, இதர எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஏன்னா அந்தப்பதவிக்கு தம்மைத் தாமே முன்னிறுத்த அவர்கள் தயாராக இருக்கிறாங்க?. அதனால, இது தொடர்பான ஆலோசனையை கையில் எடுக்க எதிர்க்கட்சியினர் பயப்படுறாங்க..கடந்த இரண்டு முறை 2014, 2019 பிரதமர் பதவியில் அமர்ந்த மோடி அடுத்து நடைபெறவிருக்கும் 2024 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பாருன்னு அறிக்கைகளும் கருத்து கணிப்புகளும் சொல்லுது. இதன் காரணமாத்தான் பிராந்திய கட்சிகள் எனப்படும் மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும்ன்னு இப்போ அரசியல் வல்லுனர்கள் சொல்றாங்க. குறிப்பா ஆம் ஆத்மீ கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆகுறதுக்கு அஸ்திவாரமாக இருப்பாங்கன்னு தெளிவா தெரியுது. ஒருபுறம் ‘காங்கிரஸ் ஊழல் கட்சி. அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. அடுத்த தேர்தலை தனியாகவே சந்திப்போம்’ன்னு கெஜ்ரிவால் அறிவிச்சிட்டாரு. மறுபுறம் மம்தா பானர்ஜியும், ‘அடுத்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்; தனியாகவே தேர்தலை சந்திப்போம்னு சொல்லிட்டாரு. கடந்த 2019 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் போன்ற மாநில கட்சிகள் அனைவரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்ய திட்டமிடப்பட்ட வேளைல தான் ஸ்டாலின் முந்திக்கிட்டு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்ன்னு அறிவிச்சாரு. அதுவே காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவா போய்டுச்சு. ஆனால் இந்த முறை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க போவது இல்லை. மம்தா பானர்ஜி இப்போ காங்கிரசையே பாஜகவின் பி டீம்னு சொல்லிக்கிட்டு வர்றார். இந்த நிலையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மம்தாவின் ஆதரவு இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவாக அமையாதுங்கிற நிலைமை ஏற்பட்டிருக்குது. மேலும் டெல்லி பஞ்சாப் என இரு மாநிலங்களை கையில் வைத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலோ திமுக போன்ற கட்சிகளுடன் சகஜமாக பேசினாலும்,பழகினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து இன்னமும் சற்று தள்ளியே இருக்கிறார். இதன் காரணமாகவே இவரை எதிர்க்கட்சி வரிசையில் ஒருங்கிணைப்பதும் இவரை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வைப்பதும் ரொம்ப சிரமமாகத்தான் இருக்கும்ங்கிறாங்க. மேலும் கம்யூனிஸ்டுகள் இப்போ அதுவும் குறிப்பா கேரளத்தில் காங்கிரசை எதிர்த்தே அரசியல் செஞ்சுகிட்டு வர்றாங்க. கடந்த காலத்தில் ராகுல் காந்தியின் வயநாடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இது எல்லாருக்குமே தெரியும். இப்படி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரா கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்ப மாட்டாங்கன்னு தெளிவா தெரியுது.தமிழ்நாட்ல மட்டும் காங்கிரஸும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியில இருக்காங்க.மற்ற மாநிலங்கள்ல எதிரும் புதிருமாத்தான் அரசியல் பண்ணிக்கிட்டு வர்றாங்க.

தேர்தலுக்குப் பிறகு அதிக எம்.பி.க்களை பெறும் கட்சிக்கே பிரதமர் பதவிக்கான வாய்ப்புகள் இருக்குது.. அதிக தொகுதிகள் கிடைக்கும் சூழல் காங்கிரஸுக்கு இருக்கிறதால் தான் அது, எதிர்க்கட்சிகள் சார்பில் தங்கள் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க முயற்சிக்குது.

கார்கேவை உ.பியின் ரேபரேலி தொகுதியில் இருந்து போட்டியிட வைக்கவும் காங்கிரஸ் திட்டமிடுது. காங்கிரஸ் செல்வாக்கு மிகுந்த இந்த தொகுதியிலிருந்து சோனியா காந்தி, தொடர்ந்து நான்காவது முறையாக எம்.பி.யாக இருக்காரு. தனது உடல்நிலை காரணமாக அவர் அரசியலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக கட்சி வட்டாரம் சொல்லுது. தாய்க்கு பிறகு அந்த தொகுதியின் பொருத்தமான வேட்பாளராக பிரியங்கா இருக்கிறாரு.ஆனா எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்யுது.

இருந்தாலும், அரசியல் சூழலைப் பொருத்து ரேபரேலியில் கார்கேவை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிடுது. இதன்மூலம், உ.பி.யின் முக்கிய வாக்காளர்களான தலித் மற்றும் முஸ்லிம்களை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க முடியும்ன்னு காங்கிரஸ் நம்புது.

உ.பி.யில் ஐந்து முறை மாயாவதி முதல்வர் ஆவதற்கு தலித் வாக்குகள் காரணமாயிருந்துச்சி. ஆனா மாயாவதி இப்போ பாஜகவின் மறைமுக நட்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கார்கேவுக்கு பெரிதாக எதிர்ப்பு எழாது என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக இருக்குது. வேணும்னா, எதிரணியிலிருந்து பிற கட்சி தலைவரை துணைப் பிரதமராக ஏற்கவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

கர்நாடகாவின் பிதர் தொகுதியை சேர்ந்த கார்கேவும், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு காரணமானார். இங்கு நிலவிய மதவாத சூழலில் பாஜகவின் பிரச்சாரத்திற்கு உகந்த பதிலடி கொடுத்தார் கார்கே. பிரதமர் மோடியை எந்த தலைவரும் செய்யாத விமர்சனங்களை கார்கே முன் வச்சிருந்தாரு. கார்கே தனது 43 வருட அரசியல் அனுபவத்தில் 9 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்திருக்காரு. மேலும் 2 முறை மக்களவை எம்.பி.யாக இருந்த அவர் இப்போ மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வர்றாரு.!

தலித் தலைவர் ஒருவர் இதுவரை இந்தியாவின் பிரதமராக அமர்த்தப்பட்டது இல்லை. இதன்காரணமாக, காங்கிரஸின் தலித் தலைவரான கார்கேவை எதிர்க்கட்சிகள் ஏற்கும் வாய்ப்புகள் இருக்குது.கார்கேவை பிரதமர் வேட்பாளராக்க எதிர்ப்பவர்கள் தலித் விரோதிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்கள் வாக்குகளை இழக்கும் அபாயமும் இருக்குது.

அதனால கார்கேவை முன்னிறுத்தும் காங்கிரஸின் முயற்சி, புரட்சிகரமானதாகக் கருதப்படுது. இந்த முயற்சியால் உத்தரப்பிரதேச தலித் வாக்காளர்களும் எழுச்சி பெற்று தங்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பார்கள் என காங்கிரஸ் நம்புது. இருந்தாலும், தலித்தான கார்கேவை பிரதமாரக்க நாடு முழுவதிலும் உள்ள பிற சமூக வாக்காளர்கள் வாக்களிப்பாங்களாங்கிற கேள்வியும் வராமல் இல்லை!