2024 லோக்சபா தேர்தல் பாஜக சீட் ஷேரிங் !

அதிமுக குழப்பத்திற்கு மத்தியில், 2024 தேர்தலைக் குறிவைத்து, ‘தொகுதி பங்கீடு’ லெவலுக்கு அதிரடியாக வேலையில் இறங்கிவிட்டதாம் பாஜக தலைமை. பாஜக தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக, அமமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் இதர முக்கிய கட்சிகளையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.  ஓபிஎஸ்ஸுக்கு சம அதிகாரம் கொடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட ஈபிஎஸ் தயாராக இல்லாத நிலையிலும், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் இணைந்த அதிமுகவுக்கு 20 சீட் என மனக் கணக்கு போட்டிருக்கிறதாம் பாஜக. தங்களிடம் 20 சீட்களை கொடுத்துவிட வேண்டும் என்றும், அமமுக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு நாங்களே சீட் ஒதுக்கிவிடுவோம் என்றும் ஜரூராக இறங்கியிருக்கிறதாம் டெல்லி பாஜக.  அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான நேரடி மோதலால் தமிழக அரசியலில் கடந்த 4 மாத காலமாக பரபரப்பு நீடிக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதேநேரம், ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் முன்பு நிலுவையில் உள்ளது.  ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்களுக்கு ஆதரவு கேட்டு டெல்லி பாஜகவை நாடி வந்த நிலையில், பாஜக தலைமை, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருடன் இணக்கமாக இருந்து வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக மேலிடம் இருப்பது உறுதியானது. ஆனால், பாஜக தலைமையின் ஆலோசனைகளை ஏற்காமல், ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். தேர்தல் வியூகம் தன்னிடமே பெரும்பாலான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது, கட்சியில் தனக்கே செல்வாக்கு இருக்கும்போது ஓபிஎஸ்ஸை இணைத்து அவருக்கு சம அதிகாரம் கொடுக்கச் சொல்வது நியாயமா என குமுறி வருகிறார் ஈபிஎஸ். அதிமுகவின் போக்கை பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கணக்கில் கொண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவோடு இணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக மேலிடம். சீட் ஷேரிங் வரை வேகம் எடப்பாடி பழனிசாமி இன்னும் தங்களது திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையிலும் கூட, 2024 லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு வரை பாஜக வெகுவேகமாக திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக கட்சிக் குழப்பத்திற்கு மத்தியில், இப்போதே சீட் கணக்குகளையும் பாஜக தலைமை போடத் தொடங்கியிருப்பது அதிமுகவில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.  பாஜக இந்த முறை 20 – 20 என ஷேரிங் போடும் வகையில் பேச்சைத் தொடங்கியுள்ளதாம். இதைக் கேட்டு ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஷாக் ஆகியுள்ளனர். தமிழகத்தை இத்தனை முறை ஆட்சி செய்த கட்சியான எங்களுக்கும், இப்போதுதான் 4 எம்.எல்.ஏக்களையே எங்கள் தயவால் பிடித்துள்ள பாஜகவுக்கும் சம அளவு சீட் ஷேரிங்கா, இது என்ன வேடிக்கை என தங்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனராம். ஆனால், பாஜக 20ல் ஆரம்பித்து அதில் சில  கால்குலேஷன்களையும் போட்டிருக்கிறதாம். எங்களுக்கு 20 சீட் கொடுத்தால் நாங்களே அனைத்திலும் போட்டியிடப் போவதில்லை. அதில் இருந்து பல கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்போம். முக்கியமாக, டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்த்தின் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் நம் கூட்டணியில் கட்டாயமாக இணையும். நீங்கள் அவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைகளை கவனித்துக் கொள்கிறோம். பாமகவுடன் நீங்கள் டீல் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளதாம் மேலும், ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என நிறைய கட்சிகள் நமக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அவர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதற்காகவே 20 சீட்களை கேட்கிறோம் எனக் கூறியுள்ளனர். இதுக்கிடையே, மேற்கண்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது 2024 தேர்தல் பற்றி பேசப்பட்டிருப்பதாகவும், தங்கள் விருப்பத்தை அவர்கள் டெல்லிக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுது. அந்தவகையில் ஏ.சி.சண்முகம் வேலூரையும், கிருஷ்ணசாமி தென்காசியையும் கேட்டுள்ளனராம்.  அதேபோல, பாரிவேந்தர் பெரம்பலூருக்கு அடி போட்ட நிலையில், அங்கு ஏற்கனவே ஒரு பாஜக தலைவரும் குறி வைத்து வருவதால் கள்ளக்குறிச்சி தொகுதியையும் பச்சமுத்து ஆப்ஷனில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜான் பாண்டியனும், தேவநாதனும் கூட பாஜக தலைவர்களைச் சந்தித்து ஒவ்வொரு சீட் உறுதியாக வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனராம். அவர்களுக்கும் உறுதியளித்து அனுப்பி இருக்கிறது டெல்லி தலைமை.  பாஜக தலைமை, கூட்டணி பேச்சுகளை தொடங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக சில நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. சமீபத்தில் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக களமிறங்கி, திமுக கூட்டணி கட்சிகளை விளாசினார் தேவநாதன் யாதவ். அதேபோல, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், திமுக எதிர்ப்பு பேச்சுகள், போராட்டம் என அரசியலை தீவிரப்படுத்தி வருகிறார். கூட்டணி வைபவம் முன்னதாகவே, கூட்டணி ஏற்பாட்டு வைபவங்கள் அதிமுகவையும் உள்ளிழுத்து நடைபெற்றன. சமீபத்தில் சட்டப்பேரவையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுக சின்னத்தில் நின்று வென்று எம்.எல்.ஏ ஆன புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். அதற்குப் பிறகு தமிழக பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாக தலைவர் ஜிகே வாசன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏவான தமமுக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவிக்க தனித்தனியாக அடுத்தடுத்து வந்தனர். ஆனால், அதன் பிறகு எடப்பாடியை சந்திக்க வந்த கூட்டணி கட்சி தலைவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த சூழலில், கூட்டணி கட்சிகள் திரண்டு சென்றது அரசியல் அரங்கில் சந்தேக அலையைக் கிளப்பியது. கட்சிகளை முடுக்கிவிட்ட இந்த நிலையில் தான் பாஜகவின் இந்த கூட்டணி கணக்கு பின்னணிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணியை உறுதி செய்து, கட்சிகளை தேர்தல் பணிகளில் முடுக்கி விட ஆயத்தமாகியுள்ளதாம் பாஜக. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, ஒருங்கிணைந்த அதிமுகவோடு தான் பாஜக கூட்டணி உறுதியாக அமையும் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான். அவர்களை கட்சியில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதுமட்டுமின்றி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமரும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்’

அதிமுகவின் 51வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டைமேட்டில்  நடைபெற்ற பொதுக்கட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அதிரடி பேச்சுதான்.

அதிமுக ஒற்றைத் தலைமை யுத்தத்தில் கட்சிரீதியாக வெற்றிப் பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த நாள் முதல் இபிஎஸ் இதைதானே சொல்லிக் கொண்டிருக்கிறார்… இதில் புதிதாக அர்த்தம் கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ என்ன இருக்கிறது என்று கேட்டால், நிறைய இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விவரமறிந்தவர்கள்.

ஓபிஎஸ். 2024 தேர்தல் தலைமை ஆகியவை குறி்த்த இபிஎஸ்சின்  பேச்சை, கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு முன், கூட்டத்துக்கு பின் என்று இருவிதமாக பார்க்கலாம். அந்த கூட்டத்துக்கு முன்பும் ஓபிஎஸ்ஸு்க்கு இனி அதிமுவில் இடமில்லை என்றுதான் பேசி வந்தார்.ஆனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘அண்ணே… ஓபிஎஸ்ஸை நாம் இப்படி ஒரேஅடியாய் ஓரங்கட்டுவதை பாஜக தலைமை ரசிப்பதாக தெரியலை… அதனால நீங்க கொஞ்சம் கீழே இறங்கிதான் வாங்களேன்… இல்லைன்னா சிவசேனாவுக்கு நேர்ந்ததை போல இரட்டை இலையை முடக்கிட போறாங்க’ என்று கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளை இபிஎஸ்ஸுக்கு அட்வைஸ் செய்ததாக கூறப்பட்டது.

அப்படி தம்மை அட்வைஸ் செய்தவர்களிடம், அப்படி சின்னத்தை அவர்கள் முடக்கினால் முடக்கிவிட்டு போகட்டும்… ஏனென்றால் நமக்கு 2024 எம்பி தேர்தல் முக்கியமில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். எனவே இரட்டை இலை முடக்கப்பட்டால் அதனால் நமக்கு பெரிய இழப்பில்லை. ஆனால் பாஜகவுக்கு தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இன்னமும் செல்வாக்கு வந்துடலை. எனவே 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவின் சொல்படிதான் பாஜக கேட்டாக வேண்டும். அப்படி இருக்கும்போது சின்னம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடக்கப்பட்டுவிடாது.

அதேபோல கொடநாடு கொலை, கொள்ளை வழக்காக இருந்தாலும் சரி… நெடுஞ்சாலை துறை டெண்டரில் ஊழல் நடைபெற்றதாக நடத்தப்படும் ரெய்டாக இருந்தாலும் சரி… எதுவானாலும் தைரியமாக இருங்கள்…சட்டரீதியாக சமாளித்து கொள்ளலாம் என்று மா.செ.க்கள் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் இபிஎஸ் இப்படி கட் அன்ட் ரேட்டாக பேசியதாக தெரிகிறது. அவரது இந்த பேச்சில் மூத்த நிர்வாகிகளுக்கு வந்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே,  நாமக்கல்லில் இபிஎஸ் பேச்சு பார்க்கப்படுகிறது.

இப்படி ஓபிஎஸ், பாஜகவை கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க இபிஎஸ் தயாராகிவிட்டதால், அதிமுவில் ஓபிஎஸ்சுக்கு இனி அனேகமாக இடமில்லை என்றே எண்ணமே அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. அத்துடன் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்காமல்விட்டால், அவரால் தென்மாவட்டங்களில் ஓட்டுகள் பிரியும்; அதனால் கூட்டணிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று பாஜகலின் கவலை போக்க, அமமுகவை அதிமுகவுடன் இணைக்கும் பணியையும் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ளதாகவே தெரிகிறது.

எனவே,. ஓபிஎஸ் விஷயத்தில் பாஜகவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இபிஎஸ் விடாப்பிடியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் அவர் எதற்கும் தயாராக இருக்கிறார் என்றே அரசியல் அரங்கில் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த புரிதலுக்கு பிறகு ஓபிஎஸ்ஸும், பாஜக தலைமையும் என்ன செய்யப் போகின்றனர் என்பதுதான் தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.