தீவிர அரசியலுக்கு வந்தார் விஜய்..! மேயர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி! கலக்கத்தில் கழகங்கள் !
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு வேட்பாளர் தேர்வு நடந்து வருது
‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு சினிமாவில் பஞ்ச் டயலாக்கில் தெறிக்க விட்டார் விஜய். அதேப்போல் தேர்தலில் ஒரு தடவை வெற்றியை பார்த்துவிட்டவர், இப்போது அடுத்தடுத்து களமிறங்கி கலக்க முடிவெடுத்துவிட்டார்.
அதாவது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. அமோக வெற்றியை பெற்றாலும் கூட விஜய்யின் ‘மக்கள் இயக்க’த்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக களமிறங்கினாங்க. விஜய்யின் பெயரையும் கொடியையும் பயன்படுத்தி பிரசாரம் செய்த அவரது இயக்க நிர்வாகிகள் சுமார் நூற்றைம்பது இடங்களில் வெற்றி பெற்றனர். சொல்லப்போனால் போட்டியிட்ட மொத்த இடங்களில் 80%க்கும் மேல் வெற்றி பெற்றனர். இது ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த உற்சாகத்தில் இதோ எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்க தயாராகிவிட்டது விஜய்யின் படை. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்திலும் கணிசமான இடங்களில் விஜய் தனது இயக்கத்தினரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, அதற்கான பணிகள் போய்க்கிட்டிருக்குது.. இடங்கள் கண்டறியப்பட்டு வேட்பாளர்கள் தேர்வும் நடந்துக்கிட்டு வருதாம்.
இதனால் ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் கடந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திடம் தோற்ற நாம் தமிழர்கட்சியும் மக்கள் நீதிமய்யம் ஆகியோர் செம கடுப்பில் இருக்கிறாங்களாம். விஜய்யின் மேயர் தேர்தல் முடிவு பற்றி பேசும் அவரது இயக்க பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் “சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிப்பார். பொதுமக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை எப்படி வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.” என்று புதிர் போட்டிருக்கிறார்.
விஜய்யால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் அவரது தந்தை சந்திரசேகரோ விஜய்யின் இந்த தீவிர அரசியல் மூவ் பற்றி “அவரைப் பத்தி நான் என்ன சொன்னாலும் பெரிய விவாதமாகிறது. இருந்தாலும், சமூக நலன் சார்ந்த அக்கறை விஜய்க்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அவர் நிச்சயம் நல்லது செய்வார்.” என்றிருக்கிறார்.
ஹும், ரஜினியும் இப்படியேதான் பில்ட்-அப் பண்ணிட்டிருந்தார்! அப்படிங்கிறது இப்ப நினைவுக்கு வருதே.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளைப்பெற்ற விஜய்யின் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுவதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் சின்னம் குறித்து பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், `மக்கள் இயக்க நிர்வாகிகள் வரும் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். தேர்தலில் நம் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைத்திருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான பாட்ஷாவில் முக்கிய ரோலாக ஆட்டோ இடம்பெற்றிருந்தது. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் ஹீரோவாக அறியப்படும் விஜயின் மக்கள் இயக்கத்துக்கு, உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டோ சின்னம் அளிக்கப்பட்டால், அது தங்களின் இயக்கத்துக்கு பெரிய பிளஸ்ஸாக இருக்கும்னு விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆட்டோ சின்னம் வழங்க முடியாதுன்னு தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைஞ்சிருக்காங்க.
ஆட்டோ பேமஸான ஒன்றும் கூட.எளிதில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்னு நினைச்சுத்தான் ‘ஆட்டோ’ சின்னத்தை தளபதி தேர்ந்தெடுத்தாருன்னு சொல்றாங்க. வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டுபவராக வருவார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இதில் இருக்கிறது.
சினிமாவில் எப்படி சூப்பர்ஸ்டார் ரஜினியை நடிகர் விஜய்,பின்பற்றுகிறாரோ அதேபோல அரசியலிலும் அவரை பின்பற்றுகிறாரோங்கிற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அது என்னன்னா, 2020இல் ரஜினி அரசியலுக்கு வருகிறேன்னு சொன்ன நேரம், பல்வேறு தகவல்கள் வெளியாகிச்சு. ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்தத் தகவல் அப்போது தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்தது. பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலைன்னு ஒதுங்கிட்டாரு. ஒருவேளை நான் ரஜினியை போலவே நானும் அரசியலுக்கு வருகிறேன்னும் ரஜினி வரவில்லை நான் அந்த இடத்துக்கு வர்றேன்னும் உணர்த்துகிறாரோங்கிற பல கேள்விகள் வருது.
எம்.ஜி.ஆர்,ரஜினி ஆகியோரை திரையில் பின்பற்றி வரும் விஜய், அரசியலிலும் இவர்களது வழியை பின்பற்றுகிறாரோன்னும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியிருக்குது. எப்படி இருந்தாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் பயணத்தை முழுவீச்சில் தொடங்குவாருன்னும் சொல்லப்படுது. தளபதி விஜயின் நிஜ ‘சர்க்கார்’ எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.