களவாடப்பட்ட அதிமுகவின் தலைமைப் பதவிகள்

அதிமுக தலைமைக்கான தேர்தல் கேலிக்கூத்தாக நடந்து முடிஞ்சிருக்கு. தேர்தல் கமிஷன், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, எல்லாரையும் முட்டாளாக்கி இருக்குது இந்த தேர்தல்! தன் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்கான சசிகலாவை பகடைக் காயாக்கிக்கிட்டாரு பன்னீர்!

சில நிர்வாகிகள், ‘கட்சியில் தங்களுக்கு செல்வாக்கு இருக்குது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுறோம்ணு வேட்பு மனு தாக்கல் செஞ்சிருந்தாங்க.

அதன்படி முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. இன்னும் சிலரையோ மனுப் போடவே அனுமதிக்கலை! வடிகட்டி வாங்கியதில் வந்திருந்த 252 மனுக்களையும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து பரிசீலனை செய்வதாக பாவனை காட்டினார்கள்!

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தவராக இருக்க வேண்டும் என்பதால், அதை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யப்பட்டதாக சொன்னார்கள்! வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழிந்திருக்க வேண்டும். 15 பேர் வழி மொழிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 30 பேரும் தொடர்ச்சியாக 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் நிர்பந்தமாக்கினார்கள்.

இதில் 100-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த மனுக்கள் அனைத்தும் தகுதி வாய்ந்ததாக அனுமதிக்கப்பட்டது.

எனவே, இந்த 2 பதவிகளுக்கும் போட்டி ஏற்படாத ஒரு தோற்றத்தை உருவாக்கி,திருட்டுத்தனமாக களவாடப்பட்டு உள்ளது அதிமுகவின் தலைமைப் பதவிகள்! ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் அதே பதவிகளில் அமர்ந்துவிட்டனர். நியாயப்படிப் பார்த்தால் ஒ.பன்னீர்செல்வமே கட்சியில் இல்லாமல் போய் இடையில் வந்தவர் என்ற வகையில் அவர் மனுவே தள்ளுபடியாகி இருக்கணுமே!

ஒருவகையில் பார்த்தால், ஓபிஎஸைப் போன்ற ஒரு அரசியல்வாதியை தமிழக அரசியல் இது வரை பார்த்திருக்குமாங்கிறது தெரியலை! எந்தப் பெரிய ஆளுமைப் பண்பும் இல்லாமல் தொடர்ந்து 20 ஆண்டுகள் அதிகாரத்தில் கோலோச்சி வர்றவர் அவர் ஒருவர் தான்!

2001ல் முதன் முறை எம்.எல்.ஏ ஆகிய அவருக்கு டான்சி வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் முதல்வராகும் அதிர்ஷ்டம் கெடைச்சது! ஆறரை மாசத்தில் சிறையில் இருந்து வந்தவுடன் சக்தி வாய்ந்த வருவாய்த் துறை அமைச்சகத்தையும், பொதுப் பணித்துறையையும் கொடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அடுத்து வந்த திமுக ஆட்சி காலத்திலும் எதிர்கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார். கட்சியில் எவ்வளவோ சீனியர்கள் இருக்க இவருக்கு தொடர்ந்து இது போல வாய்ப்புகள் அமைந்ததில் இவரது பணிவும், சிரித்த முகத்துடன் அடக்கமாக வலம் வரும் தன்மையுமே காரணமாகும். விசுவாசத்தின் இலக்கணமாக ஜெயலலிதாவும், சசிகலாவும் இவரை நம்பினர். ஆனால், அது உண்மையல்ல, அவர் எப்போதுமே இருப்பதிலேயே பெரிய அதிகாரம் எதுவோ, அதற்குத் தான் விசுவாசம் பாராட்டுவார் என்ற யதார்த்தம் ஜெயலலிதா செயல்பாடற்று மருத்துவமனையில் இருந்த காலத்தில் தான் சசிகலாவிற்குமே புரிய வந்தது.

அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனதும், தமிழக ஆட்சிக் கட்டிலை சசிகலா பின்னணியில் இருந்து ஆட்டி வைத்த அப்பட்டமான உண்மையை கண்டு அதிர்ந்த பாஜக, பக்குவமாக பன்னீர் செல்வத்தை கையில் எடுத்தது.படு சின்சியராக பணிவு காட்டிய பன்னீர் செல்வத்தை பாஜக தலைமைக்கு மிகவும் பிடித்துப் போனது. இனி ஜெயலலிதா கதை முடிந்துவிட்டது. சசிகலாவிற்கு பாஜக ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த பன்னீர் படுவேகமாக தன் விசுவாசத்தை பாஜகவின் பக்கம் திருப்பினார். அதனால், ”ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை பன்னீர் முதல்வராகத் தொடரலாமே” என பாஜக தலைமை அதிமுகவிற்கு அழுத்தம் தந்தது. அப்போது தான் சசிகலா விழித்துக் கொண்டார்.

அவசரத்திற்கு அகப்பட்டார் எடப்பாடின்னு சொல்றாங்க.

ஆகவே, அவர் அப்போதிருந்தே பன்னீருக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என தேடும் போது அவசரத்திற்கு அகப்பட்டவர் தான் நம்ம எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா தன்னை நம்பவில்லை என்றவுடன் மேலும் பாஜக பக்கம் சாய ஆரம்பித்தார் பன்னீர்! அதன் விளைவாக ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் பன்னீரைத் தான் முதல்வராக்க வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டது. அதை ஒரு தற்காலிக ஏற்பாடாகவாவது ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது சசிகலாவிற்கு.

அதே சமயம் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான இரண்டு மாதங்களில் பன்னீர் அதிமுகவின் முதல்வராக இல்லாமல், பாஜகவின் முதல்வராகவே வலம் வருகிறார் என்பதை சசிகலாவால் சகிக்க முடியவில்லை. அந்த காலகட்டத்தில் தான் தமிழக அரசு வேலை வாய்ப்பில் தமிழரல்லாதவர்களும் இடம் பெற தக்க வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாற்றம் கொண்டு வந்தார் பன்னீர்.

ஜெயலலிதா இடத்தை அடைவதற்காக சுமார் முப்பதாண்டுகளாக மூச்சடக்கி அவருடன் பயணித்த சசிகலாவிற்கு பேராசை கண்ணை மறைத்தது. சந்தர்ப்பம் கூடி வராத சூழலில் அவசரப்பட்டார் அரியணைக்கு!

அத்துடன் பன்னீர் நமக்கு அடிமையாக இருந்த விசுவாசி தானே, என்ற அலட்சியத்துடன் அவரை நடத்தினார். மாறி நிற்கும் தன்னுடைய அந்தஸ்த்தை மறுக்கும் சசிகலா, தினகரன் மீது காயம்பட்ட பன்னீருக்கு கோபம் ஏற்படுகிறது.

ஆகவே, இனி எதிர்த்துப் போராடுவது என முடிவெடுத்து ஆடிட்டர் குருமூர்த்தியை ஆலோசிக்கிறார். அவரோ, ”நீங்கள் எல்லாம் ஆம்பிளைகளே இல்லையா..” என உசுப்பேற்றி ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் என்ற பெயரில் உட்கார்ந்து போராடவும், பேட்டி தரவும் தூண்டினார்.

இத்தனைக்கும் பின்னணியில் பாஜக இருக்கிறது என்பதை அறியாத தமிழக மக்கள் சசிகலாவின் அதிகார மோகத்திற்கு அணை போட பன்னீரின் தர்மயுத்தம் நியாயமானதே என நம்பினார்கள்! ஏன்னா ஜெயலலிதா ஊழலில் ஊறித் திளைப்பதற்கும், கடைசியில் மர்மமான முறையில் மரணம் அடைந்தற்கும் சசிகலாவின் பங்களிப்பு இருக்கிறது என்பது தமிழக மக்களின் அசைக்க முடியாத சந்தேகமாக இருந்தது. இன்று வரை கூட அதில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியலை.

தர்மயுத்தம் தொடங்கிய பன்னீருக்கு எதிராபாராத வகையில் மக்களின் பேராதரவு கிடைத்தது. அதைச் சரியாக பயன்படுத்தி இருந்தால், அவர் தமிழ் நாட்டின் தனிப் பெரும் தலைவராகக் கூட ஆகி இருப்பார்.

ஆனால், அதிகாரத்திலேயே இருந்து சுவை கண்டு பழகிய அவருக்கு அதிகாரம் இல்லாமல் இருப்பதும், போராடுவதும் இயல்புக்கு மாறானதாக இருந்தது. ஆகவே, சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். அந்த சந்தர்ப்பம் 18 எம்.எல்.ஏக்களுடன் விலகி எடப்பாடி ஆட்சிக்கு சவால்விட்ட தினகரனால் மீண்டும் பன்னீருக்கு அதிர்ஷ்டமாக வந்து வாய்த்தது.

கட்சியில் அதிகாரம் மிக்க ஒருங்கிணைப்பாளர் பதவி பெற்றதோடு, துணை முதல்வர் பதவியும் பெற்று அதிகாரத்தில் ஆனவரை ஆடித் திளைத்தார். அவரை கண்ட்ரோல் பண்ண ஜெயலலிதாவும் இல்லை, சசிகலாவும் இல்லை. மாறாக அவர் தான் எடப்பாடியை கண்காணித்து அடக்க பாஜக செல்வாக்கை பக்குவமாக பயன்படுத்திக் கொண்டார். மகனையும் எம்.பியாக்கிவிட்டார். ‘ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் போதும்’ என எடப்பாடியும் பன்னீரை பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

இந்தச் சூழலில் எடப்பாடி தன்னை அதிகமாக அதிகாரப்படுத்திக் கொள்ள முனைந்த போதெல்லாம் அவருக்கு செக் வைக்க பன்னீருக்கு தேவைப்பட்டது சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முன்னெடுப்பாகும். இந்த அஸ்த்திரத்தைக் கண்டு எடப்பாடியும் ரொம்பவே அதிர்ந்து போனார். சசிகலாவும், பன்னீரும் ஒரே சமூகத்தவர்கள் என்பது எடப்பாடியை இன்னும் அச்சுறுத்தியது. கட்சி அதிகாரத்திற்கு சாதியப் பாசமும், பிணைப்பும் ஒரு பேராயுதம் என்பதை அவரும் பயன்படுத்தி பார்த்தவர் தானே!

ஆனால், காலப் போக்கில் பன்னீர், சசிகலாவை ஒரு ஒப்புக்குச் சப்பாணியாகத் தான் – அதாவது பூச்சாண்டிக் காட்டத்தான் – பயன்படுத்துகிறார் என எடப்பாடிக்கு புரிய வந்ததும் பன்னீரைக் கையாள்வது அவருக்கு மிகவும் எளிதாகிப் போச்சு.

அதுவும் போதாமல் கட்சிக்குள் பலருக்கும் அதிகார ஆசை இருக்கிறது. விட்டால் போதும் நம்மையே காலி ஆக்கிவிடுவார்கள். ஆகவே, இப்போது நாம் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்டவர்கள் தலைமையை அபகரிக்க காத்துக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு நானும், எனக்கு நீங்களும் பழகிவிட்டது. நீங்களும் நானும் சண்டை போட்டால் இருவருக்குமே அதிகாரம் கேள்விக்குறி. ஆகவே, ஒன்றுபட்டால் இருவருக்குமே அதிகாரம் உறுதி என கட்சி சட்டவிதிகளை எல்லாம் மாற்றி இருவரும் ஒன்றுபட்டு சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் அணை போட்டு தங்கள் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொண்டார்கள். அதிமுகட்கட்சி தேர்தலில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், தற்போது நடந்துள்ளதானது அனைத்திற்கும் உச்சம்!

அதிகார ஆசை என்பது சாதிப் பாசத்தை விட வலியது மட்டுமல்ல, எல்லாவற்றையும் விட வலியது. சிறையில் இருந்து வெளிவந்து ஓராண்டாக ஒ.பி.எஸ் மீது பெரும் நம்பிக்கை வைத்து காத்திருந்த சசிகலாவிற்கு இது நிச்சயம் தாங்க முடியாத ஏமாற்றத்தை தந்திருக்கும். தினகரனைக் கூட ஒதுக்கி வைத்து அதிமுக கொடியுடன் வளைய வந்தார் சசிகலா.

சசிகலாவிற்கு தெரியவில்லை, ஒ.பி.எஸ் இன்று நம்மைவிட பெரிய ராஜதந்திரியாக இருப்பார் என்றும், தன்னையே அவர் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கட்சியில் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்வார் என்பதும்! உண்மையில் சசிகலா, ஒ.பி.எஸ்ஸால் நம்ப வைத்து கொடூரமாக ஏமாற்றப்பட்டு உள்ளார் என்று கூடச் சொல்லலாம். நம்பியவர்களைக் கழுத்தறுப்பது பன்னீருக்கு அல்வா சாப்பிடுவது போல தன்னை தற்காத்துக் கொள்ள ஆடுகின்ற அலுக்காத விளையாட்டு! காலம் தொடர்ந்து அவருக்கு கருணை காட்டி வருவது தான் ஆச்சரியம்!

எடப்பாடியை பொறுத்த வரை, ‘சசிகலா வரக் கூடாது’ என்பதில் மாற்றமில்லாத உறுதிகாட்டினார். ஆனால், பன்னீரோ சசிகலாவை ஒரு பகடைக் காயாக்கிக் கொண்டுள்ளார். இதன் எதிர்வினை தமிழக அரசியலில் எப்படி இருக்க போகிறது என்பது தான் இனி அடுத்த கட்ட நகர்வாக இருக்கும். உண்மையில், அதிமுகவில் எம்ஜிஆரைவிடவும், ஜெயலலிதாவை விடவும், எந்த உழைப்புமின்றி அதிகமாக அதிகாரத்தை தொடர்ந்து சுவாசிக்கும் வாய்ப்பு பெற்றவர் ஒ.பி.எஸ் ஒருவரே!